கோவிந்த தீட்சிதர்
- கோவிந்த என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கோவிந்த (பெயர் பட்டியல்)
- தீட்சிதர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தீட்சிதர் (பெயர் பட்டியல்)
கோவிந்த தீட்சிதர் (பொ.யு. 1515 - 1635) தஞ்சையை ஆண்ட மூன்று தலைமுறை நாயக்க அரசர்களுக்கு (செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர்) ஆசானாகவும், அமைச்சராகவும் இருந்ததார். ஆளுமையும் நிர்வாகத்திறனும் கொண்டவர். மக்களுக்காகப் பல நலப்பணிகளை முன்னெடுத்தார். பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். கும்பகோணம் ராமஸ்வாமி கோவிலைக் கட்டினார். மகாமகக் குளத்தைச் சீர்ப்படுத்தி, படித்துறைகளும், சிவாலயங்களும் அமைத்தார். மத நல்லிணக்கம் பேணினார். கர்நாடக இசை மேதை வெங்கடமகியின் தந்தை.
வாழ்க்கைக் குறிப்பு
1515-ம் ஆண்டு, மைசூரில் ரிக்வேதத்தின் ஆச்வலாயன பிரிவைச் சேர்ந்த கன்னட ஸ்மார்த்த வகுப்பில் தசரதராம தீட்சிதர் எனும் நித்ய அக்னி ஹோத்ரிக்கு மகனாகப் பிறந்தவர். இயற்பெயர் பலராம கோவிந்தர். வேதங்களைக் கற்றவர். தமிழிலும் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றவர். 'வாஜபேயாஜி' (வேத விற்பன்னர்) என்ற சிறப்புப் பட்டம் பெற்றவர்.
பேரரசர் அச்சுததேவ ராயர், தஞ்சையில் தன் பிரதிநிதியாக, செவ்வப்ப நாயக்கரை நியமித்திருந்தார். ஆரணியில் தசரதராம தீட்சிதரையும், அவரின் மகன் பலராம கோவிந்தரையும் சந்தித்து, அவர்களது திறமையும் அறிவும் கண்டு தந்தை-மகன் இருவரையும் தஞ்சை செவ்வப்ப நாயக்கருக்குக் குருவாகவும் பிரதம மந்திரியாகவும் நியமித்தார்.
கோவிந்த தீட்சிதரின் மனைவி நாகமாம்பாள். இவர்களுக்கு எட்டு மகன்களும், ஒரு மகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது. மகன்களில் ஒருவர் 'சதுர்த்தண்டி பிரகாசிகா' என்ற கர்நாடக சங்கீத இலக்கண நூலை எழுதிய வெங்கடமகி. யக்ஞ நாராயண தீட்சிதர் மற்றொரு மகன்.
நிர்வாகம்
கோவிந்த தீட்சிதர் நாயக்க மன்னர்கள் மூவர் காலத்தில் வாழ்ந்தவர். இளமையில் சேவப்ப நாயக்கரின் அரசவைக்கு வந்து, அவரது மகன் அச்சுதப்ப நாயக்கருக்கும், அவரது மகன் ரகுநாத நாயக்கருக்கும் அமைச்சராக இருந்தார். மூன்று தலைமுறை மன்னர்களுக்கு அமைச்சராகச் சுமார் எழுபத்தைந்து ஆண்டு காலம் பதவி வகித்தார்.
கோவிந்த தீட்சிதர் பதவியேற்றவுடன், தஞ்சை மக்களின் குடிதண்ணீர் தேவையைக் கருத்தில்கொண்டு ஓர் ஏரியை வெட்டச் செய்தார். அது மன்னர் பெயரில் 'சேவப்ப ஏரி' என்று வழங்கப்பட்டது. இன்னும் பல நீர்நிலைகளையும், நீர்வழிகளையும் தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு அளித்தார்.
சிங்கரசன்பாளையம் என்ற இடத்தில், அச்சுதப்ப நாயக்கருக்கு, வில், வாள் சண்டைப் பயிற்சியும், குதிரையேற்றம், யானையேற்றம் போன்ற போர்க்கலைப் பயிற்சிகளையும் அளித்தார். அந்த ஊர் அவர் பெயரால் 'கோவிந்தகுடி' என்று வழங்குகிறது. இங்கு ஓர் வேதபாடசாலையும் இயங்குகிறது. ரகுநாத நாயக்கரைச் சிறு வயதிலிருந்தே வளர்த்து, கல்வியும் இசைப்பயிற்சியும், ஆயுதப்பயிற்சியும் அளித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை, பாலைவனநாதர் கோவில் வளாகத்தில் மிகப்பெரிய மூன்று நிலை நெல்குதிர் ஒன்றை அமைத்தார். கோவில் நிலங்களில் அறுவடையான நெல் இதில் சேமிக்கப்பட்டு பஞ்சகாலங்களில் மக்களுக்கு உதவியது.
கோயில் பணிகள்
கோவிந்த தீட்சிதர் திருவையாற்றில் தொடங்கி, மயிலாடுதுறை வரை, காவிரியின் இரண்டு பக்கங்களிலும் அழகிய படித்துறைகளைக் கட்டச் செய்தார். மகாமக் குளத்தைச் சீர்ப்படுத்தி, படித்துறைகளைக் கட்டி, அதன் கரையைச் சுற்றி 16 மகாதான மண்டபங்களில் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்தார்[1].
ஸ்ரீஆதிகும்பேஸ்வரர் கோயிலில் ராஜ கோபுரம் மற்றும் உயர்ந்த நாற்சுற்று மதில் ஆகியவற்றை எழுப்பிக் கும்பாபிஷேகமும் செய்வித்தார். கும்பகோணம் ராமஸ்வாமி கோவிலைக் கட்டுவித்தார். இலங்கை, யாழ்ப்பாணம் சென்று போர்ச்சுகீசியரை வென்று வந்த நாயக்க மன்னரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ராமஸ்வாமி கோவிலைக் கட்டுவித்ததாகக் கூறப்படுகிறது. திருவண்ணாமலை, திருவிடைமருதூர், திருவலஞ்சுழி உள்ளிட்ட பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி கோவிலின் வெள்ளி இடப வாகனமும், வெள்ளித்தேரும் அவர் அளித்தவை.
இவரது சேவையைப் போற்றும் விதம் மன்னன் வைர- வைடூரியங்களைப் பரிசளிக்கும் காட்சிகளை, மகாமக குளக்கரையின் துலாபார மண்டபத்தில் சிற்பங்களாகக் காணலாம். இப்படி தமக்கு பரிசாகக் கிடைத்த பொருட்களையும் திருப்பணி செய்வதற்கே செலவிட்டார்
திருவிடைமருதூருக்குக் கிழக்கே உள்ள கிராமத்தைத் தீட்சிதரின் பெயரால், கோவிந்தபுரம்' என்று அழைக்க உத்தரவிட்டார் அச்சுத ராயர் (தற்போது போதேந்திர சரஸ்வதியின் அதிஷ்டானம் உள்ள ஊர்).
இன்றும் இயங்கும் இந்தியாவின் மிகப்பழைய வேதபாடசாலை அப்பைய தீக்ஷிதரின் அறிவுரையின் பேரில் இவர் உருவாக்கிய 'ராஜா காவ்ய வேதபாடசாலை'. கர்னாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதர் இந்தப் பாடசாலையில் பயின்றவர்.
மத நல்லிணக்கம்
தஞ்சையில் ஒரு மசூதி கட்டிக்கொள்ள, தீட்சிதர் ஏழு வேலி நிலத்தை அளிக்கச் செய்தார். புனித ஸேவியர் என்ற பாதிரியார் நாகப்பட்டினத்தில் கட்டடங்கள் கட்டிக்கொள்ள தீட்சிதர் அரசரின் அனுமதியைப் பெற்றுத் தந்தார். கோவிந்த தீட்சிதரின் அறிவுரையால் நாகூர் தர்காவில் உள்ள மினாரா ஒன்றை அமைக்க அச்சுதப்பர் உதவினார். திண்டிவனம் அருகேயிருந்த சமணத் திருக்கோயிலுக்கு பல உதவிகள் செய்தார். அப்போதைய மத்வ பீடாதிபதி விஜயீந்திர தீர்த்தருக்கும், மற்றும் சில மடாதிபதிகளுக்கும் மானியங்கள் கிடைக்கச் செய்தார். (கோவிந்த தீட்சிதர் அத்வைதி; மத்வம் த்வைதத்தைப் பின்பற்றியது).
இலக்கிய வாழ்க்கை
சமஸ்கிருத மொழியில் இருந்த, திருவையாறு புராணத்தை, தமிழறிஞரைக் கொண்டு தமிழாக்கம் செய்ய வைத்தார் கோவிந்த தீட்சிதர். 'தாண்டவ மாலை' என்ற சோதிட நூலை எழுதினார்.
ஆயிரக்கணக்கான நூல்களைக் கொண்ட, 'சரஸ்வதி பண்டாரம்' என்ற நூல் நிலையத்தை நிறுவச் செய்தார். இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழ், சம்ஸ்கிருதம், தெலுங்கு மொழிகளில் ஓலைச்சுவடிகள் தருவிக்கப்பட்டன. சரஸ்வதி பண்டாரமே, இன்றைய சரஸ்வதி மஹால்.
இசை
இசையிலும் மேதையாகத் திகழ்ந்த கோவிந்த தீட்சிதர், "ஸங்கீத ஸதாநிதி' என்ற நூலை இயற்றி, அதனை ரகுநாத நாயக்கருக்கு அர்ப்பணம் செய்துள்ளார். மேலும், 'ரகுநாத மேள வீணா' என்ற புதிய தஞ்சாவூர் வீணையையும் உருவாக்கினார் (இது இன்று உபயோகத்தில் உள்ள வீணை).
தொன்மம்
கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகத்தின் பொழுது புண்ணிய தீர்த்தங்களும், கங்கை முதலான ஒன்பது புண்ணிய நதிகளும் மகாமகக் குளத்திற்கு வருவதாக ஐதீகம் உள்ளது. 1624-ல் கோவிந்த தீட்சிதருடன் கும்பகோணத்திற்கு வந்திருந்த ரகுநாத நாயக்கர் "கங்கை முதலான புண்ணிய நதிகள் இப்போதும் மகாமகக் குளத்திற்கு வருகின்றனவா? அந்த நதிகளை நாம் காண இயலுமா?" என்று கேட்டபோது கோவிந்த தீட்சிதர், சிறிது நீரை தெளித்து நதிதேவதைகளை பிரார்த்திக்க, மகாமகக் குளத்தில் ஒரே நேரத்தில் 18 அலைக்கரங்கள் தோன்றியதாகவும், இதனால் மகிழ்ந்த ரகுநாத நாயக்கர் கோவிந்த தீட்சிதருக்குத் தன் எடைக்கு எடை துலாபாரமாகத் தங்கம் வழங்கினார் என்றும் கூறப்படுகிறது. அந்தத் தங்கத்தைக் கொண்டுதான் மகாமகக் குளத்தை ரகுநாத நாயக்கர் சீரமைத்தார் எனவும் கூறப்படுகிறது. இந்நிகழ்வின் நினைவாக மகாமகக் குளத்தின் வடக்குக் கரையில் துலாபார மண்டபம் என்ற மண்டபத்தில் இந்த நிகழ்ச்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
மறைவு
கோவிந்த தீட்சிதர் அவரது 120-ம் வயதில் 1635-ம் ஆண்டு காலமானார்.
சிறப்புகள்
கோவிந்த தீட்சிதர், நாகமாம்பாள் இருவரின் திருவுருவச் சிலைகளும் கும்பகோணத்துக்கருகில் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் உள்ளன. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மங்களாம்பிகை சன்னிதிக்கெதிரில் தீட்சிதர் பெயரில் லிங்கமும், மனைவியின் உருவச்சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபடப்படுகின்றன. திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் அவர் பெயரில் லிங்கம் மட்டும் உள்ளது. நல்லாட்சி காரணமாக 'ஐயன்' என்று அழைக்கப்பட்டார். அவர் பெயரால் 'ஐயம்பேட்டை' ஐயன்குளம், ஐயன் கடைவீதி போன்ற ஊர்களும், தெருக்களும் வழங்குகின்றன.
"பட்டீஸ்வரத்தில் அவர் வாழ்ந்த மாளிகையின் அடித்தளம் உள்ளது என்கிறார்கள். தமிழ் வரலாற்றில் முக்கியமான இடம் வகிக்கும் இவரைப் பற்றிப் பிற்கால வரலாற்றில் அதிகம் பேசப்பட்டதில்லை. ஒரு நல்ல நாவலில் கதாநாயகனாகும் தகுதிகொண்ட ஆளுமை. தமிழ்த்தொன்மங்களை மட்டும் வைத்து இவரைப் பற்றி எழுதிவிட முடியாது. கன்னட தெலுங்கு ஆவணங்களிலிருந்தும் தரவுகள் சேகரிக்க வேண்டும். என்றேனும் எவரேனும் எழுதலாம்" என்று ஜெயமோகன் கோவித தீட்சிதரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
உசாத்துணை
- கும்பகோணம் மகாமகம்: கோவிந்த தீட்சிதர் - மக்கள் நலம் பேணிய மகான், ஹிந்து நாளிதழ்
- கோவிந்த தீட்சிதர், மன்னராட்சியிலும் மக்களாட்சியைத் தந்த மகான்
- நல்லிடையன் நகர்-2, ஜெயமோகன்
- நாயக்க மன்னர்களை வழிநடத்திய அமைச்சர், தமிழ்மணி, தினமணி ஜூன் 2020
அடிக்குறிப்புகள்
- ↑ ஸ்ரீசேத்திரபாலேஸ்வரர், ஸ்ரீபிரம்ம தீர்த்தேஸ்வரர், ஸ்ரீமுகுந்தேஸ்வரர், ஸ்ரீதனேஸ்வரர், ஸ்ரீரிஷபேஸ்வரர், ஸ்ரீபாணேஸ்வரர், ஸ்ரீசோணேஸ்வரர், ஸ்ரீகுணேஸ்வரர் (ஸ்ரீபக்திகேஸ்வரர்), ஸ்ரீபைரவேஸ்வரர், ஸ்ரீஅகஸ்தீஸ்வரர், ஸ்ரீவ்யாஸேஸ்வரர், ஸ்ரீஉமாமகேஸ்வரர், ஸ்ரீநைருதீஸ்வரர், ஸ்ரீப்ரும்மேஸ்வரர், ஸ்ரீகங்காதரேஸ்வரர், ஸ்ரீமுக்ததீர்த்தேஸ்வரர்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Aug-2024, 13:45:43 IST
