கோவர்த்தனர்
கோவர்த்தனர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கை குறிப்பு
கோவர்த்தனர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பசுக்களை மேய்த்து வளர்க்கும் ஆயர் குடியில் பிறந்தவராக கருதப்படுகிறார். கோவதத்தனார் என்றும் சில ஏடுகளில் பெயர் குறிக்கப்பெற்றுள்ளது.
இலக்கிய வாழ்க்கை
கோவர்த்தனர் பாடிய பாடல்கள் குறுந்தொகையில் 66, 194-வது பாடல்களாக இடம்பெற்றுள்ளன. குறுந்தொகையின் 66 -ம் பாடல் கார்காலம் வந்த பின்பும் வராத தலைவனை நினைத்து வருந்தும் தலைவியை ஆற்றுப்படுத்த தோழி உரைப்பதாகவும், 194-ம் பாடல் தலைவனின் பிரிவால் தனக்கு ஏற்படும் துன்பத்தை தோழியிடம் தலைவி கூறுவதாகவும் உள்ளது. இரண்டு பாடல்களும் முல்லைத் திணையில் அமைந்தவை.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- பொருளீட்டும் பொருட்டு மனைவியை பிரிந்து கற்கள் நிறைந்த பாலைநிலத்தின் வழி சென்ற கணவர் கார்க்காலத்தில் வீடு திரும்புவர்.
- கார்க்காலத்து மழையினால் பெரிய கொன்றை மரங்களின் கொம்பு நுனியில் கொத்தகொத்தாக கொன்றை மலர்கள் பூத்திருக்கும்.
- கார்க்காலத்து மழையில் மின்னல் அடித்து ஒளிரும் மேகங்களை கண்டு காட்டில் உள்ள மயில்கள் தோகை விரித்தாடுகின்றன.
பாடல் நடை
குறுந்தொகை - 194
- திணை: முல்லை
- துறை: பருவ வரவின்கண் ஆற்றாளெனக் கவன்ற(வருந்தும்)தோழிக்குக் தலைவி உரைத்தது
என்எனப் படுங்கொல் தோழி மின்னுபு
வானேர் பிரங்கும் ஒன்றோ?அதன்எதிர்
கான மஞ்ஞை கடிய ஏங்கும்
ஏதில கலந்த இரண்டற்குஎன்
பேதை நெஞ்சம் பெருமலக் குறுமே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க,கோவிந்தன்
- குறுந்தொகை - 66:nallakurunthokai
- குறுந்தொகை - 194:nallakurunthokai
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jan-2025, 17:40:05 IST