under review

கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்

From Tamil Wiki

கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூறில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரும் சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையும் ஒருவரே என்ற கருத்தும் உண்டு. ஆனால் எஸ். வையாபுரிப் பிள்ளை இவர் வேறு தனிப்புலவர் என கருதுகிறார். கோட்டம்பலத்தில் உயிர்விட்ட சேர மன்னர் என்பதே இவரது பெயரின் பொருள்.

இலக்கிய வாழ்க்கை

கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் பாடிய பாடல் அகநானூறில் 168-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. இரவு நேரத்தில் வந்து களவின்பம் தூய்த்து செல்லும் தலைவனிடத்து விரைந்து தன்னை மணம் புரிக என்று தலைவி கூறுவதாக குறிஞ்சித் திணையில் அமைந்துள்ள பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • உதியன் என்னும் மன்னன் குழுமூர் என்னும் மலையினை ஆண்டுள்ளான். குழுமூர் மலையில் காட்டுப்பசுக்களும் வளர்ப்பு பசுக்களும் ஒன்றாக மேயும். பின் மரத்தடி நிழலில் ஒற்றுமையாக படுத்து ஓய்வெடுக்கும்.
  • உதியன் கொடை வழங்கும் செயலை கடமையாக எண்ணுபவன். அவனது உணவிடும் அட்டிலில் மக்களின் ஒலி ஓயாத அருவி ஒலி போல் நீங்காது இருக்கும்.
  • குழுமூர் மலையில் தயங்கி யானைக்கன்றையும் பெண் யானையையும் ஆண் யானையானது பாதுகாப்பாக அழைத்து செல்லும். வழியில் உள்ள குகையில் வாழும் ஆண் புலி அஞ்சும்படி ஆண் யானை வலுவாக பிளிறல் ஒலி எழுப்பும்.
  • மலையில் இருந்து நாட்டுக்கு கீழிறங்கி வரும் பாதை மான்கள் செல்லும் ஆபத்தான பாதை.

பாடல் நடை

அகநானூறு - 168

  • திணை: குறிஞ்சி
  • கூற்று: இரவுக்குறி வந்த தலைமகனை இரவுக்குறி விலக்கி, வரைவு கடாயது.

யாமம் நும்மொடு கழிப்பி, நோய் மிக,
பனி வார் கண்ணேம் வைகுதும்; இனியே;
ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப!
பல் ஆன் குன்றில் படு நிழல் சேர்ந்த
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண்
கொடைக் கடன் ஏன்ற கோடா நெஞ்சின்
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து,
அருவி ஆர்க்கும் பெரு வரைச் சிலம்பின்;
ஈன்றணி இரும் பிடி தழீஇ, களிறு தன்
தூங்குநடைக் குழவி துயில் புறங்காப்ப,
ஒடுங்கு அளை புலம்பப் போகி, கடுங் கண்
வாள் வரி வயப் புலி கல் முழை உரற,
கானவர் மடிந்த கங்குல்;
மான் அதர்ச் சிறு நெறி வருதல், நீயே?

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Aug-2025, 07:54:46 IST