under review

கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்

From Tamil Wiki

கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் அகநானூறில் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கை குறிப்பு

கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். நற்சேந்தனார் என்னும் இயற்பெயர் உடையவர். இவர் பிறந்த ஊர் கொடிமங்கலம் என்றும் கோடிமங்கலம் என்றும் இருவேறு பெயர்களில் காணப்படுகிறது. வாதுளி என்பது கொடிமங்கலம் ஊரின் ஒரு பகுதி என்று அறிஞர்களால் கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் பாடிய பாடல்கள் அகநானூறில் 179 மற்றும் 232-ம் பாடல்களாக இடம்பெற்றுள்ளன. அகம் 179-ம் பாடல் பாலைத் திணையிலும் 232 -ம் பாடல் குறிஞ்சித் திணையிலும் அமைந்துள்ளன. பாலைத் திணையில் அமைந்த 179-ம் பாடல் பொருளீட்டச் செல்கிறேன் என்று சொன்ன தலைவனிடம் செல்லும் பாலை நிலத்தின் கொடிய காட்சியை கூறி, உன்னால் தாக்கு பிடிக்க முடியுமா என்று தோழி வினவுவதாக உள்ளது. குறிஞ்சித் திணையில் அமைந்த 32-ம் பாடல் இல்லத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த தலைவியைத் தேடி இரவில் வந்த தலைவனுக்கு கேட்கும்படி தலைவியை நோக்கி தோழி தலைவிக்கு ஏற்பட்ட துன்பத்தைக் கூறுவதாக அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

அகநானூறு 179-ம் பாடலில் ஆடவர் பொருளீடக்ச் செல்லும் பாலை நிலத்தின் தோற்றம் விவரிக்கப்படுகிறது.

  • பாலை நிலம் நீண்ட மலைகள் அமையப்பெற்றது. அம்மலைகளுக்கு இடையே நீளும் பாதையில் கானல் நீர் நிரம்பியிருக்கும். மரங்கள் தீப்பற்றி எரியும் வெப்பம் மிகுந்த காட்டினை கொண்டது. யானைகள் தாக மிகுதியால் கானல் நீரினை உண்மையென நினைத்துத் தும்பிக்கையை நீட்டி அருந்த முயன்று ஏமாந்து போகும்.
  • பாலை நிலத்தில் வாழும் மறவர்களின் வில்லானது வேட்டை மற்றும் கொள்ளை, கொலை தொழிலால் இரத்தக்கறை படிந்து காணப்படும். வழிப்போக்கர் செல்லும் பாதையில் வீரமரணம் அடைந்த மறவருக்கு நடுகல் நாட்டப்பட்டிருக்கும். மறவரால் தாக்கப்பட்டால் தனித்து நிற்பர் வணிகர்.

அகநானூறு 232-ம் பாடலில் குறிஞ்சி நிலத்தின் சித்திரம் காட்டப்படுகிறது.

  • மழைக்காலத்தில் முழங்கும் இடியின் ஒலியைக் கேட்டவுடன் தழை மேய்ந்து கொண்டிருந்த யானை புலி வருகிறது என்று அஞ்சி ஓடும். அப்பொழுது யானை அச்சத்தில் பிளிறும் ஒலி மலை முகடுகளில் பட்டு எதிரொலிக்கும்.
  • குறவர்களின் வீடுகளுக்கு மலைகளே வேலியாக அமைந்து காணப்படும். குறவர்களின் வீட்டு முற்றத்தில் வேங்கை மரம் பூத்து மலர்கள் கொட்டி கிடக்கும். அம்முற்றத்தில் குறவ பெண்கள் வட்டமாக நின்று குரவை கூத்தாடுவர்.
  • காதல் கொண்ட பெண்ணின் மேல் முருகு என்ற தெய்வம் ஏறியதாக நினைத்து வேலனை அழைத்து வந்து அன்னை, மகளுக்குப் பூசை நடத்துவாள். முருகு தெய்வத்தைக் குளிர்விக்கும் விதமாக வேலன் பலவகை பூக்களை மகளிர் மேல் தூவுவான்.
  • உவமைகள்: தலைவியின் பற்களின் கூர்மை மயிலிறகு தொகையின் நுனிக்கும் கண்கள் குவளை மலருக்கும் நெற்றி நிலவுக்கும் உவமை காட்டப்பட்டது. வேங்கை மலர்கள் பூத்திருப்பது பொன் மணிகளை ஒத்து இருக்கிறது.

பாடல் நடை

அகநானூறு - 179

  • திணை: பாலை
  • கூற்று: பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது

விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
வெண்தேர் ஓடும் கடம் காய் மருங்கில்,
துனை எரி பரந்த துன் அரும் வியன் காட்டு,
சிறு கண் யானை நெடுங் கை நீட்டி
வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது,
கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின்
விடு வாய்ச் செங் கணைக் கொடு வில் ஆடவர்
நல் நிலை பொறித்த கல் நிலை அதர,
அரம்பு கொள் பூசல் களையுநர்க் காணாச்
சுரம் செல விரும்பினிர்ஆயின் இன் நகை,
முருந்து எனத் திரண்ட முள் எயிற்றுத் துவர் வாய்,
குவளை நாள் மலர் புரையும் உண்கண், இம்
மதி ஏர் வாள் நுதல் புலம்ப,
பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ, நுமக்கே?

உசாத்துணை



✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Mar-2025, 17:03:51 IST