under review

கொங்குமண்டல சதகம், வாலசுந்தர கவிராயர்

From Tamil Wiki

கொங்குமண்டல சதகம், வாலசுந்தர கவிராயர் ( பொ.யு. 17-ம் நூற்றாண்டு) வாலசுந்தர கவிராயர் எழுதிய கொங்குமண்டல சதகம். இது மூன்று கொங்குமண்டல சதகங்களில் ஒன்று.

கொங்குமண்டல சதகங்கள்

கொங்குமண்டல சதகங்கள் மூன்று உள்ளன. கார்மேகக் கவிஞர் எழுதிய கொங்கு மண்டல சதகம், வாலசுந்தரக் கவிராயர் எழுதிய கொங்குமண்டல சதகம் கம்பநாதசாமி எழுதிய கொங்குமண்டல சதகம் கம்பநாத சாமி ஆகியவை அவை. இவற்றில் கார்மேகக் கவிஞர் எழுதிய கொங்குமண்டல சதகமே முதன்மையானதாகக் கருதப்படுகிறது.

நூலாசிரியர்,காலம்

இந்நூலின் ஆசிரியர் வாலசுந்தரக் கவிராயர் என்றும், அவர் கம்பரை ஆதரித்த திருவெண்ணைநல்லூர் சடையப்பரால் பேணப்பட்டவர் என்றும், ஆகவே நூலின் காலம் பொ.யு. 12-ம் நூற்றாண்டு என்றும் தெய்வசிகாமணிக் கவுண்டர் கருதுகிறார்.

ஆனால் பிற ஆய்வாளர்கள் மொழிநடை, நூல்குறிப்புகளின் ஆதாரத்தில் கார்மேகக் கவிஞரின் கொங்குமண்டல சதகம் காலத்தால் முந்தையது, அது 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது, இந்நூல் அதற்குப் பிந்தையதே என்று கருதுகிறார்கள். "வாலசுந்தரக் கவிஞர் வெண்ணெய்நல்லூர்ச் சடையனையும் அவர்தம் மரபுளோரையும் வாழ்த்திப் பாடியமை கொண்டு இவர்தம் நூல் 12-ம் நூற்றாண்டிலெழுந்தது எனத் துணிந்து கூறும் கொள்கை ஆய்வுக்குரியதேயாம்" என்று பதிப்பாசிரியர் ஐ. இராமசாமி, இக்கரை போளுவாம்பட்டி கருதுகிறார்.

பதிப்பு வரலாறு

வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் இந்நூலை நவம்பர் 29, 1970-ல் பதிப்பித்தார். பழையகோட்டை அரண்மனையில் கிடைத்த ஏட்டுப் பிரதி, வெள்ளோடு சாமிநாதப்புலவர் எழுதி வைத்திருந்த குறைப் பிரதி, பூந்துறை நாட்டுக் கொல்லப்பட்டர் என்ற புலவர் வீட்டில் கிடைத்த குறைப்பிரதி, திருச்செங்கோடு முத்துசாமிக் கோனார் வைத்திருந்த காகிதப்பிரபிரதி என ஆறு பிரதிகளின் உதவி கொண்டு இந்நூல் வெளியிடப்பட்டது என தெய்வசிகாமணிக் கவுண்டர் குறிப்பிடுகிறார். இந்நூல் பாடல்களில் சில வேற்றுத்தளை விரவியும் சொல்லிலக்கணம் சிதைந்தும் காணப்படுகின்றன என்றும் அவற்றை உள்ளவாறே வெளியிடுவதாகவும் சொல்லும் தெய்வசிகாமணிக் கவுண்டர் தி. அ. முத்துசாமிக் கோனார் இந்நூலில் உள்ள சில பாடல்களை அவர் பதிப்பித்த கொங்குமண்டல சதகத்தின் நடுவே வேண்டுமென்றே சேர்த்திருக்கிறார் என்று சொல்கிறார்.

இந்நூலைப் பதிப்பிக்க உதவியவர் செ. இராசு என்று குறிப்பிடும் தெய்வசிகாமணிக் கவுண்டர் இந்நூலை பேரூர்ச் சாந்தலிங்க மடத்தின் தவத்திரு. மாணிக்க சுவாமிகளுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார்.

உள்ளடக்கம்

ஆசிரியர் இந்நூலில் கொங்கு நாட்டிற்குரிய தலங்கள், மலைகள்,ஆறுகள், அறச்செயல்கள், பாரதச் செய்திகள், ஐதிகங்கள், அதிசயங்கள் முதலியவற்றை பாடியிருக்கின்றார்.

தலங்கள்
  • ஈரோடை,(ஈரோடு)
  • மோகனூர்
  • அவிநாசி
  • திருமுருகன் பூண்டி
  • நண்ணாவூர்
  • பவானி நட்டாற்றீசுவரர் கோவில்
  • பேரூர்
  • திருவாவினன்குடி
  • கொற்றைநகர்
  • அப்பரமேயதலம்
  • பாப்பினி
  • கரூர்
மலைகள்
  • திருச்செங்கோடு
  • பழநிமலை
  • ஐவர்மலை
  • புகழ்மலை
  • காந்தமலை
  • மருதமலை
  • ஊதியூர்மலை
  • சென்னிமலை
  • தொண்டாம் புத்தூர் மலை
  • கொல்லிமலை
பாரதச் செய்திகள்
  • மல்லவரை வீமன் செயித்தது
  • கீசகனைவதைத்தது
  • விசயன் ஆயுதம்அடைக்கலம் வைத்தது
  • வீமன் மல்லரை ஆலமரத்தில் தொங்கச் செய்தது
  • பாண்டவர்கள் மாண்டுயிர் பெற்றது.
  • அறுந்த கனி பொருந்தியது.
தொன்மங்கள்
  • பொன்மாரி பொழிந்தது
  • மாமாங்கச்சுனை
  • திரிசூலப்பனை
  • பஞ்ச தளவில்வம்,
  • நட்டாற்றீசுவரர் கோவில் வாயிற்படியினுள் காவிரி நீர் புகுந்தது
  • சுட்டதலை வெடியாதது
  • சமைத்த மீன் துள்ளி விளையாடியது
  • சோழனை யானைகொண்டு போனது
வள்ளல்கள்
  • வெண்ணைநல்லூர்ச் சடையன்
  • சர்க்கரை மன்றாடியார்,
  • நண்ணாவுடையார்
  • உலகுடையார்
  • காங்கேயமன்றாடியார்
  • பல்லவராயர்
  • வேணாவுடையார்
  • ஒதாளன் ஆண்டபெருமான் தொண்டைமான் முதலியார்.
தமிழ்க் கீர்த்திகள்
  • கம்பருக்கு அடிமையானது
  • பல்லக்குச் சுமந்தது, தண்டிகை
  • தாங்கிக் காளாஞ்சியேந்தியது
  • சூலிமுதுகிலன்னம்படைத்தது
  • புலவன் தாய் முதுகிலேறப் பொறுத்தது
  • பாம்பின் வாயிற்கையிட்டது.
  • கம்பநாடர்களாயிரவருக்கன்னமிட்டது
  • சங்கப்புலவர்களையாதரித்தது,
  • வேளாளவைசியர் பசும்பையெழுபது பெற்றது
புலவர் செய்தி
  • கொங்குவேள் அடிமைப் பெண்ணைக்கொண்டுத்தரம் சொல்வித்தது.
  • வாலசுப்பப்புலவன் தோயக்குலத்தானை வென்றது.
சங்கம்
  • விசயமங்கலத்தமிழ்ச் சங்கம்
  • காடையூர்ச் சங்கம்

இலக்கிய இடம்

கொங்குமண்டலத்திற்கும் சோழநாட்டுக்கும் இடையேயான உறவைச் சொல்லும் நூல் என்னும் அளவிலும், கம்பருடன் தொடர்புள்ள செய்திகளைச் சொல்லும் நூல் என்னும் அளவிலும் கொங்குமண்டல சதகம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கொங்குநாட்டின் நிலப்பகுதிகளையும் வரலாற்றுச்செய்திகளையும் சொல்கிறது.

உசாத்துணை

வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் கொங்குமண்டல சதகம் முன்னுரை


✅Finalised Page