under review

கூடல் இழைத்தல்

From Tamil Wiki
கூடல் இழைத்தல் நன்றி: தினமணி

கூடல் இழைத்தல் சங்ககாலம் தொட்டு பெண்களிடையே திருமணம் பற்றி நிலவிய ஓர் நம்பிக்கை, விளையாட்டு அல்லது குறி பார்ப்பதைப் போன்ற ஓர் வழக்கம். தலைவன் வருவானோ மாட்டானோ என்ற ஐயத்தில் இருக்கும்போது கூடல் இழைத்துப் பார்ப்பது மரபாக இருந்தது. சங்க இலக்கியங்கள் மட்டுமன்றி அப்பர் தேவாரம், நாச்சியார் திருமொழி போன்ற அகத்துறை சார்ந்த பக்தி இலக்கியங்களிலும் கூடல் இழைத்தல் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. கூடல் இழைத்தல் மணல் சோதிடம், அதிசய சுழி, மணற்சுழி சோதிடம், கோடு இயைதல் எனப்பல பெயர்களில் அழைக்கப்பட்டது.

கூடல் இழைத்தல்.

திருமணமாகாத மகளிர் தாம் விரும்பிய காதலர் தம்மை அடைவாரோ? மாட்டாரோ?(கூடுவாரோ? மாட்டாரோ?) என நிமித்தம் அறியும் ஓர் வழக்கம் பண்டக் காலம் தொட்டே இருந்தது. கண்களை மூடிக்கொண்டு மணலில் வட்டம் வரைந்து அது முழுமையானாலோ, பெரிய வட்டத்துள் பல சிறிய வட்டங்கள் வரைந்து, அவை இரட்டைப்படையில் அமைந்தாலோ, தலைவன் வருவான் என்ற நம்பிக்கை நெய்தல் நிலப் பெண்களிடம் நிலவியது. கண்ணை மூடிக்கொண்டு வட்டம் வரையும் போதில் தொடங்கிய இடத்தில் சரியாக வட்டத்தை முடித்தல் வேண்டும். மணல் வட்டம் கூடாமல் போவதுண்டு. கூடாமல் போனாலோ அல்லது வட்டங்கள் ஒற்றைப் படையில் அமைந்தாலோ தலைவனின் வருகை இல்லை என்று நம்பினர்.

கடற்கரையில் மட்டுமல்லாது இல்லத்திலும் கூடல் இழைப்பது உண்டு. ஆண்டாள் மஞ்சள் கிழங்குகளை அள்ளியெடுத்து அவற்றின் எண்ணிக்கை இரட்டைப்படையில் அமைந்தால் தன் நோக்கம் நிறைவேறும் எனத் தோழிகளுடன் 'நீ கூடிடு கூடலே எனக் கூடல் இழைத்துப் பார்ப்பது நாச்சியார் திருமொழியின் மூலம் அறிய வருகிறது. கூடல் இழைத்தல் பற்ரிய குறிப்புகள் கயிலைபாதி காளத்திபாதி, நான்முகன் திருவந்தாதி, ஐந்திணை ஐம்பது, சீவகசிந்தாமணி, கலிங்கத்துப்பரணி முதலிய இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.

தற்காலங்களிலும் ஒற்றையா, இரட்டையா என்று பார்க்கும் வழக்கம் நிலவுகிறது. இலக்கண விளக்கம் நூலில் ஓர் மேற்கோள் செய்யுள் கூடல் இழைத்தலைக் குறிப்பிடுகிறது.

அண்டர் கிளைக்கும் தெரிவரு கேதகை நீழல்
கிளியிருந்து வளைக்கும் சுழிக்கும் அழிக்கும்
ஒண்கூடல் வளைக்கைக் கொண்டே

இலக்கியங்களில் கூடல் இழைத்தல்

சங்க இலக்கியங்களில் கூடல் இழைத்தல்

தன் இல்லத்தில் கூடல் இழைக்கின்றாள் ஒரு தலைவி. ஒரு முனை மற்ற முனையுடன் கூடவில்லை. ஆதலால் அது இளம்பிறை போல் விளங்கியது. அந்த இளம்பிறை பின்பு முழு நிலவாக மாறி வருத்தும் என்று எண்ணுகிறாள்; தான் உடுத்திருந்த ஆடையால் அதை மூடுகிறாள்; உடனே இளம்பிறையை அணியும் சிவபெருமான் பிறையைத் தேடுவான் என்று எண்ணுகிறாள். தான் சிவனுக்கு அதைக் கொடுத்து உதவி செய்தவளாக விளங்க எண்ணுகிறாள். உடனே மூடும் முயற்சியைக் கைவிடுகிறாள். (கலித்தொகை 142)

கோடு வாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று
நாடுவேன் கண்டனென்; சிற்றிலுள் கண்டாங்கே
ஆடையான் மூஉய் அகப்படுப் பேன்; சூடிய
காணான் திரிதரும் கொல்லோ மணிமிடற்று
மாண்மலர்க் கொன்றை யவன்

முத்தொள்ளாயிரம்

முத்தொள்ளாயிரப் பாடலொன்றில் தலைவி ஒருத்தி கூடல் இழைக்க முற்பட்டாள். கூடல் பெருமான் பாண்டியனை நான் கூடப்பெறுவேன் என்றால் கூடல் கோடே நீ கூடுக என்று சொல்லிக்கொண்டு கூடல் இழைக்க முற்பட்டுக் கூடல் இழைப்பது போலப் பாசாங்கு காட்டினாள். உண்மையில் அவள் கூடல் இழைக்கவில்லை. காரணம் ஒருவேளை கூடல்-கோடு கூடாமல் போய்விட்டால் அவனைக் கூடமுடியாமல் போய்விடுமே என்னும் அச்சம் காரணம்.[1]

கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக்
கூடப் பெறுவனேல் கூடு என்று – கூடல்
இழைப்பாள்போற் காட்டி இழையா திருக்கும்
பிழைப்பில் பிழைபாக் கறிந்து. – 86

பக்தி இலக்கியங்களில் கூடல் இழைத்தல்

பக்தி இலக்கியங்களில் நாயகி பாவம் வெளிப்படும் அகத்துறைப் பாடல்களில் கூடல் இழைத்தல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

நாச்சியார் திருமொழி

நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் தன்னை கோபிகையாகப் பாவித்து, கண்ணனை அடையும் தன் நோக்கம் நிறைவேறுமா, கண்ணன் வருவானா என அறிய கூடலை விளித்து கண்ணன் வருவானாகில் கூடுக , அதை எனக்குக் காட்டுக என 'கூடுக கூடலே' என முடியும் பத்து பாக்களில் வேண்டுகிறாள்[2][3].

 பூம கன்புகழ் வானவர் போற்றுதற்
காம கன்,அணி வாணுதல் தேவகி
மாம கன்,மிகு சீர்வசு தேவர்தம்,
கோம கன்வரில் கூடிடு கூடலே

(ஆய்ச்சியர்களும் ஆயர்களும் அஞ்சும்படி, பூக்கள் நிரம்பிய கடம்ப மரம் ஏறி, நீர்நிலையில் பாய்ந்து, அங்கு வாழ்ந்த காளியன் தலை மேல் நடமாடிய கூத்தனார் வருவானென்றால் நீ கூடிடு கூடலே).

திருக்கோவையார்

மாணிக்கவாசகரின் திருக்கோவையாரில் தாய் கூற்றாக தலைவி கூடல் இழைப்பதையும் கூடல் கூடவேண்டுமே என கவலையுடன் இருப்பதையும் கூறும் பாடல்:

ஆழிதிருத்தும் புலியூர் உடையான்அருளின் அளித்து
ஆழி திருத்தும் மணற்குன்றின் நீத்துஅகன்றார் வருகவென்று
ஆழி திருத்திச் சுழிக்கணக்குஓதி நையாமல் ஐய
ஆழி திருத்தித் தாக்கிற்றி யோஉள்ளம் வள்ளலையே

(இளமையான அழகிய கொடி போன்ற எனது மகள், தனது நெஞ்சத்தில் மிகவும் ஆழமான காதல் கொண்டு மருகல் பெருமானையே எப்போதும் நினைத்துக் கொண்டு இருக்கின்றாள்; அவனையே நினைந்து உருகி, கண்ணீர் மல்க இருக்கும் அவள், காதல் மயக்கத்தில், தனது காதல் நிறைவேறுமா என்பதை கூடல் இழைத்து அறிய முயற்சி செய்கின்றாள். சிவபெருமானுடன் இணைய வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்து இருப்பதால், தான் இழைக்கும் கூடல் கூட வேண்டுமே என்று மிகுந்த கவலையுடன், மருகல் பெருமான் வருவான் என்பதை தனக்கு உணர்த்தும் முகமாக இழைக்கும் கூடல் கூடவேண்டும் என்று வேண்டுகின்றாள்).

அப்பர் தேவாரம்

அப்பர் தேவாரத்தில் கூத்தனிடம் காதல் வயப்பட்ட தலைவி மணலைக் கூட்டி கூடலிழைக்கும் குறிப்பு காணப்படுகிறது.

"பாடலாக்கிடும் பண்ணொடு பெண்ணிவள்
கூடலாக்கிடும் குன்றின் மணற்கொடு
கோடல் பூத்தளலர் கோழம்பத்துள் மகிழ்ந்து
ஆடுங்கூத் தனுக்கன்பு பட்டாளன்றே' (5-64-4).

(வெண்கோடலும் செங்கோடலும் ஆகிய மலர்கள் பூத்து விளங்கும் கோழம்பத்துள் மகிழ்ந்து ஆடும் கூத்தனாகிய இறைவனுக்கு இப்பெண் அன்றே ஆட்பட்டாள். பண்ணொடு கூடிய பாடல் ஆக்குவாள்; மணற்குன்றில் மணலினைக் கொண்டு கூடல் இழைப்பாள்.)

திருமழிசையாழ்வார்

திருவேங்கடத்தானைக் காண வேண்டி தலைவி கூடல் இழைப்பேன் எனக்கூறும் திருமழிசையாழ்வார் பாடல்

இழைப்பன் திருக்கூடல் கூட மழைப்பேர்
அருவி மணி வரன்றி வந்திழிய யானை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு (நான்முகன் திருவந்தாதி, 39)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page