under review

குள்ளத்தாரா சிந்து

From Tamil Wiki
குள்ளத்தாரா சிந்து

குள்ளத்தாரா சிந்து (1914) சிந்து இலக்கிய நூல்களுள் ஒன்று. நீதிச் சிந்து என்ற வகைமையின் அடிப்படையில் இயற்றப்பட்ட இந்த நூலைப் பதிப்பித்தவர் டி. கோபால் நாயகர். மனதை ‘குள்ளத்தாரா’ என்னும் பெண்ணாக, காதலியாக உருவகப்படுத்தி, அதற்கு அறிவுரை கூறுவது போல் இந்நூலின் பாடல்கள் அமைந்துள்ளன.

பிரசுரம், வெளியீடு

குள்ளத்தாரா சிந்து நூல், சென்னை, என்.சி. கோள்டன் அச்சியந்திர சாலையில், 1914 -ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது. இதனைப் பதிப்பித்தவர் திருப்போரூர் டி. கோபால் நாயகர். இதன் மறுபதிப்பு, 1915-ல், சென்னை கலைக்கியான முத்திராக்ஷரசாலை மூலம் வெளிவந்தது. தொடர்ந்து பல பதிப்புகள் வெளியாகின.

நூல் அமைப்பு

குள்ளத்தாரா சிந்து சிந்து என்னும் இலக்கிய வகைமையச் சார்ந்தது., விருத்தம் மற்றும் சிந்துக் கண்ணிகளைக் கொண்டுள்ளது. விநாயகர் வணக்கத்துடன் தொடங்கும் இந்நூலில், மனதை‘குள்ளத்தாரா’ என்னும் பெண்ணாக, காதலியாக உருவகப்படுத்தி, அதற்கு அறிவுரை கூறுவது போல் பாடல்கள் அமைந்துள்ளன. இந்நூலில் 54 கண்ணிகள் அமைந்துள்ளன. பேச்சு வழக்குச் சொற்களும், ஆங்கிலச் சொற்களின் நேரடித் தமிழ்ச் சொற்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன

பாடல் நடை

தத்துவ நோக்கு

ஆருயிர்க்குறுதுணையாங் குள்ளத்தாரா என
தன்பின் வழியே நடக்கிற குள்ளத்தாரா

சந்திரகாந்தமேடையுண்டு குள்ளத்தாரா வதைச்
சாரவும் பொன்னேணியுண்டு குள்ளத்தாரா

பன்னிருகால்வாசியுண்டு குள்ளத்தாரா வதைப்
பற்றப்பரிசுத்தனுண்டு குள்ளத்தாரா

சோமவட்டமாம்பதியிற் குள்ளத்தாரா நீ
சுகித்தமுர்தமுண்டிருப்பாய் குள்ளத்தாரா

ஏமனுமடறுவானோ குள்ளத்தாரா நீ
என்வழிநடப்பையாகில் குள்ளத்தாரா

இறைவனை நாட அறிவுரை:

வாசனைத்திரவியங்கள் குள்ளத்தாரா நீ
வகைவகையாய்பூசிக்கொள்வாய் குள்ளத்தாரா

சண்பகமலர்நிதமும் குள்ளத்தாராநீ
சம்பிரமமாய்முடித்துக்கொள்வாய் குள்ளத்தாரா

பாடலீசன் பொற்பதத்தைக் குள்ளத்தாரா நீ
பத்தியுடன் சேவைசெய்வாய் குள்ளத்தாரா

பாலும் நீரும்போலவடி குள்ளத்தாரா நாம்
பண்புடனே வாழ்ந்திருப்போம் குள்ளத்தாரா

மங்களமாய்வாழ்ந்திருப்பாய் குள்ளத்தாரா
இந்த வையகமுள்ளளவுமடி குள்ளத்தாரா.

மதிப்பீடு

குள்ளத்தாரா சிந்து மனதைக் குள்ளத்தாரா என அழைத்து இறைவனை அடைவதற்கான வழிமுறைகளைக் கூறுகிறது. சந்திரகாந்தமேடை, பொன் ஏணி, பன்னிருகால்வாசி, பரிசுத்தன், சோமவட்டமாம்பதி, அமிர்தம் போன்ற உருவகங்களும், குறியீடுகளும் இச்சிந்து நூலில் இடம்பெற்றுள்ளன. உலகியல் வழக்குகளான ஆடை, அணிகலன்கள், வாசனைத் திரவியங்கள், பல்லக்கு, சோபா போன்றவை குறியீடாகப் பேரின்பத்தை உணர்த்துவபவையாய் அமைந்துள்ளன. தமிழ்ச் சிந்து நூல்களுள் தத்துவப் பின்னணி உடைய சிந்து நூல்களுள் ஒன்றாக குள்ளத்தாரா சிந்து நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page