under review

குருஞான சம்பந்தர்

From Tamil Wiki
குருஞான சம்பந்தர், தருமை ஆதீனம்

குருஞான சம்பந்தர் தருமபுரம் ஆதீனத்தின் முதல் ஞானாசிரியர். தருமபுரம் ஆதீனத்தைத் தோற்றுவித்தவர். கமலை ஞானப்பிரகாசரின் மாணவர். அவரது எட்டு நூல்கள் 'சொக்கநாத அட்டகம்' என்ற பெயரில் வழங்கப்படுகின்றன.

வாழ்க்கைக் குறிப்பு

ஶ்ரீவில்லிப்புத்தூரில் கார்காத்த வெள்ளாளர் குலத்தில் சுப்பிரமணிய பிள்ளை, மீனாட்சியம்மாள் இருவருக்கும் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் ஞானசம்பந்தன். தமிழிலும், வடமொழியில் புலமை பெற்றார்.

இளமைப் பருவத்தில் தாய் தந்தையரோடு சொக்கநாதரையும், மீனாட்சியையும் தரிசிக்க மதுரை சென்றபோது ஊர் திரும்ப மறுத்து மதுரையிலேயே தங்கி பொற்றாமரைக்குளத்தில் நீராடி சொக்கநாதரை வழிபட்டு வந்தார். சிவன் அவர் கனவில் தோன்றி பொற்றாமரைக்குளத்தின் ஈசான மூலையில் தான் லிங்க வடிவமாக இருப்பதாகக் கூற, அந்த லிங்கத்தை எடுத்து பூசித்து வந்தார். இந்த லிங்க வடிவே இன்றும் தருமை ஆதீனத்தில் ஆன்ம பூஜா மூர்த்தியாய் எல்லா குருமகா சந்நிதானங்களாலும் வழிபடப்படுகிறது.

கனவில் சிவன் கூறியபடி திருவாரூருக்குச் சென்று திருக்கயிலாய பரம்பரையின் ஞானாசிரியரான கமலை ஞானப்பிரகாசரை குருவாகக் கொண்டு அவரிடம் ஞானோபதேசம் பெற்றார். சிவஞானபோதம், சிவஞான சித்தியார் போன்ற சைவ சாத்திர நூல்களைக் கற்றார். திருவாரூர் தியாகேசர் ஆலயத்தின் உட்கோயிலான சித்தீஸ்வரர் சன்னதியில் குருஞான சம்பந்தருக்கு ஞானப்பிரகாசர் உபதேசம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

ஆன்மீகம்

தொன்மம்

ஒருநாள் ஞானப்பிரகாசர் சீடர்களுடன் தியாகராஜர் ஆலயம் சென்று அர்ததயாம தரிசனம் செய்யச் சென்றார். திரும்பும் நேரம் வழக்கமாக கைவிளக்கை ஏந்திவரும் பணியாளன் உறங்கியதால், குருஞான சம்பந்தர் விளக்கேந்தி வந்தார். இதை அறியாத ஞானப்பிரகாசர் இல்லம் அடைந்ததும் விளக்கேந்திய பணியாளனை நிற்கச் சொல்ல்லிவிட்டு உள்ளே சென்றார். பணியாளன் அதன் பின் தான் தங்குமிடம் செல்வது வழக்கம். குருவின் ஆணையை மீறாமல் குருஞான் சம்பந்தர் வெளியிலேயே நின்றார். இரவு முழுதும் கைவிளக்கு எண்ணெய் விடாமலும், மழை பெய்தபோது அணையாமலும் எரிந்ததாகத் தொன்மம் குறிப்பிடுகிறது. மறுநாள் காலையில் இதை அறிந்த ஞானப்பிரகாசர் குருஞான சம்பந்தரிடம் " நீ ஞானாசிரியன் ஆகிவிட்டாய். அதனால் காவிரிக்கரையிலுள்ள வில்வாரண்யம்(தருமபுரம்) சென்று மடம் அமைத்து சைவப் பணிகள் செய்து வருவாய்" என்று கட்டளையிட்டார். குருஞான சம்பந்தர் தன் ஆசிரியரைப் பிரியத் தயங்கியபோது குருவாரம்(வியாழன்) தோறும் தன்னைக் காண வருமாறும் கூறினார்.

குருஞான சம்பந்தர் சிதம்பர வழிபாட்டிற்காக ஒரு முறை சிதம்பரம் சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் தங்கி இருந்தார். அப்போது இரவு, பகலாக ஊழ்கத்தில் இருந்த இவருக்கு சிவகாமி அம்மை அர்த்த ஜாமப் பள்ளியறைப் பிரசாதங்களைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இவர் காலத்தில் வில்வாரண்யத்தில் பசுவும் புலியும் ஒரே துறையில் நீர் அருந்தியதாகவும் தொன்மம் கூறுகிறது.

தருமபுரம் ஆதீனம்

திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானத்தில் பதினாறும் நூற்றாண்டில் தோன்றிய சைவ சித்தாந்த ஞான பீடங்கள் இரண்டு, அவை திருவாவடுதுறை மற்றும் தருமபுரம் ஆதீனங்கள்.

குருஞான சம்பந்தர் தன் குரு ஞானப்பிரகாசரின் ஆணைப்படி மாயூரம் வழியாக வில்வாரண்யம் சென்று, ஒரு குடில் அமைத்து தான் வழிபடும் சொக்கலிங்கத்தை பதிட்டை செய்து வழிபாடுகள் செய்து வந்தார். அவர் அங்கு அமைத்த மடத்துக்கு மெய்யறிவை நாடிப் பல பகுதிகளிலிருந்தும் பக்குவமுள்ள சீடர் வந்து சேர்ந்தனர். வில்வாரண்யமாக இருந்த சோலை நாளடைவில் தருமபுரமென்ற சிற்றூராக மாறிற்று, தருமபுரீசுவரர் ஆலயத்தை நிர்வகித்து வந்த அகத்தியர் வழி வந்த முனிவர்கள் தர்மபுரீஸ்வரர் ஆலயத்தையும், சுற்றியுள்ள சில ஆலயங்களையும் அவரிடம் ஒப்படைத்தனர். அவர் அமைத்த மடம் தருமபுர ஆதீனம்(தருமை ஆதீனம்) என்று வழங்கப்பட்டு இன்றளவும் இயங்கி வருகிறது. குருஞான் சம்பந்தர காலத்தில் தருமபுரத்தில் பசுவும் புலியும் ஒரே துறையில் நீர் அருந்தியதாகவும் தொன்மம் கூறுகிறது. இதை தருமை ஆதீனத்தின் முத்திரைச் சின்னத்தில் ஓவியமாகக் காணலாம்.

தருமபுர ஆதீனம் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை- தரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ளது.

இயற்றிய நூல்கள்

குருஞான சம்பந்தர் தன் குரு ஞானப்பிரகாசரைக் குறித்து 'ஞானப்பிரகாச மாலை', 'ஞானப் பிரகாசர் நவரத்தின மாலை' ஆகிய நூல்களை இயற்றினார். தில்லையில் வாழ்ந்த, சந்தானக் குரவர் மரபில் வந்த மறைஞான சம்பந்தர் எழுதிய 'முத்தி நிலை' என்ற நூலில் முத்தி பெற்ற ஆன்மாவானது முத்தி நிலையில், இதுகாறும், தனக்குள்ள ஆனந்தத்தை மறைத்த அறியாமையைச் சிவ பெருமான் நீக்க, இப்போது தானே ஆனந்தத்தை அனுபவிக்கிறது என்ர குறிப்பு இருந்தது. இது சைவ சித்தாந்தக் கொள்கைக்குப் புறம்பானது எடுத்துக் காட்டி குருஞான சம்பந்தர் இறைவன் திருவருள்தான் ஆனந்தம் தருவது என்பதை வலியுறுத்தி, 'முத்தி நிச்சயம்'என்ற ஒரு சிறு நூலை இயற்றினார்.

குருஞான சம்பந்தர் பிராசாத யோக நிலைகளை விளக்கிப் 'பிராசாத சட்கம்' என்னும் யோகநூலையும் சைவத்தின் அடிப்படையான முப்பொருள்களுக்கு உரிய பத்து நிலைகளையும் விவரிக்கின்ற 'திரிபதார்த்த ரூபாதி தசகாரிய அகவல்' என்ற சிறு ஞான நூலையும் இயற்றினார்.

இதைத் தவிர ஞானாவரண விளக்கம், சிவபூசா பத்ததி போன்ற நூல்களையும் இவர் இயற்றி இருக்கக் கூடும் எனக் கருதப்படுகிரது.

திருவாரூரில் ஞானப் பிரகாசர் முத்தியடைந்தபோது தமது துயரத்தைப் புலப்படுத்தி 'ஞானப்பிரகாச நவரத்தினமாலை' என்ற நூலை எழுதினார்.

சமாதி

குருஞானசம்பந்தர் தமது வாழ்வின் இறுதி நெருங்குவதை உணர்ந்து தமக்குப் பின் மடத்தை நிர்வகிக்கவும் ஆதீனத்தில் ஆட்சி புரியும், தம் மாணாக்கர்களில் சிறந்தவரான ஆனந்த பரவசர் என்பவருக்கு ஞான உபதேசம் செய்து ஆசாரியத் தலைமையை அவருக்கு அளித்தார். குரு தனக்கு அபிஷேகம் செய்தபோது தன் உலகப்பற்று நீங்கி ஆனந்த பரவசர் குருவுக்கு முன்பே முக்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.வாதன்பின் சச்சிதானந்த தேசிகர் என்பவரை மடத்தின் ஆதீனமாகவும் ஞான ஆசிரியராகவும் நியமித்து, தாம் புதிதாய்க் கட்டிய ஞானபுரீசுவரர் கோயிலில் வைகாசி மாதம் தேய்பிறை சப்தமி திதியில் சமாதி அடைந்தார்.

பாடல்கள்

ஞானப்பிரகாச மாலை

திருவார் கமலையுள் ஞானப்ர காசன் திருவடிக்கீழ்
வருவா ரவர்வழி வாரான் சமனும் - மலரயனும்
கருவாய் இடுவதற் கெண்ணான் எந்நாளும் கருத்தினில் நீ
வருவாய் சுகத்தினில் வாழ்வாய் பரானந்தம் மேவிடுமே

சொக்கநாதர் கலித்துறை

கண்ணுக்கினிய பொருளாகி யேஎன் கரத்தில் வந்தாய்
விண்ணும் பரவிடும் அற்புத மே என்ன விஞ்சையிதான்
மண்ணும் புகழ்ந்திட என்னையும் பூரண வாரியுள்ளே
நண்ணும்படி செய் மதுரா புரிச் சொக்க நாயகனே!

நூல்கள்

  • சொக்கநாத கலித்துறை
  • சொக்கநாத வெண்பா
  • சிவபோத சாரம்
  • பண்டாரக் கலித்துறை என்னும் ஞானப் பிரகாச மாலை
  • நவரத்ன மாலை
  • சோடசகலாப் பிராசாத சட்கம்
  • திரிபதார்த்த ரூபாதி தசகாரிய அகவல்
  • முத்தி நிச்சயம்.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Apr-2025, 10:13:28 IST