under review

ஞானப்பிரகாச மாலை

From Tamil Wiki

ஞாபப்பிரகாச மாலை தருமபுர ஆதீனத்தின் முதல் ஞானாசிரியரான குருஞான சம்பந்தர் தமது குரு ஞானப்பிரகாசரைப் போற்றிப் பாடிய கட்டளைக்கலித்துறை நூல்.

ஆசிரியர்

ஞானப்பிரகாச மாலையை இயற்றியவர் குருஞான சம்பந்தர். தருமபுர ஆதீனத்தைத் தோற்றுவித்து அதன் முதல் தலைமை குருவாகவும் இருந்தவர். கமலை ஞானப்பிரகாசரின் மாணவர்.

நூல் அமைப்பு

ஞானப்பிரகாச மாலை கமலை ஞானப்பிரகாசர் தம்மை ஆட்கொண்ட சமயம் குருஞான சம்பந்தர் பாடியது. 48 கட்டளைக் கலித் துறைப் பாடல்களால் ஆனது. ஆசாரியருக்கு ஞான நிதி என்ற பொருளில் பண்டாரம் என்ற பெயரும் வழங்குகிறது. அதனால் இந்நூலுக்கு 'பண்டாரக் கலித்துறை' என்ற பெயரும் உண்டு. ஒவ்வொரு பாடலிலும் ஞானப்பிரகாசர் தமக்கு அருள் செய்த திறத்தைப் படுகிறார் குருஞான சம்பந்தர். ஞானப்பிரகாசர் குருஞான சம்பந்தரை ஆட்கொண்ட சமயம் அவர் பக்குவத்தை உணர்ந்து, "வடக்கே சென்று வில்வாரண்யத்தில் தங்கிச் சைவ சித்தாந்த நெறிக்கே தொண்டு புரிவாயாக" என்று கட்டளையிட்டபோது, குருஞான சம்பந்தர் பாடிய பாடல்

கனக்கும் பொதிக்கும் எருதுக்கும் தன்னிச்சை கண்டதுண்டோ
எனக்கும் உடற்கும் எனதிச்சை யோஇணங் கார்புரத்தைச்
சினக்குங் கமலையுள் ஞானப்ர காச சிதம்பரஇன்
றுனக்கிச்சை எப்படி அப்படி யாக உரைத்தருளே

ஞானப்பிரகாச மாலைப் பாடல்கள் மாலை என்ற நூலாகத் தனியே பாடப்பெறவில்லை, முதல் சிலபாடல்கள் மட்டும் தமக்கு ஆசாரியர் அருள் செய்தபோது ஒரு பதிகம் போலப் பாடப்பட்டவை. ஏனைய பாடல்கள் இவர் வியாழன்குருதோறும் திருவாரூர் சென்று தம் குருநாதரை வணங்கியபோது பாடியன. இன்னும் சில பாடல்கள் இருந்திருக்கலாம். அவை கிடைக்கவில்லை" என்று மு. அருணாசலம் 'தமிழ்ப்புலவர் வரலாறு' நூலில் குறிப்பிடுகிறார். தனது குருவை 'கமலை ஞானப்பிரகாசன்', 'சிதம்பரநாதன்', 'கமல பொற்பாதன்', 'மதுரேசன்', 'ஞானசம்பந்தன்' என்று பலவாறு பாடித் துதிக்கிறார். 35-ம் பாடல் 'பெரு வேதனையுறும் காயத்தை நீக்கி' ஞானப்பிரகாசர் நவரத்தின மாலைப் பாடல், ஞானப்பிரகாச மாலைக்குரியதன்று என்று மு.அருணாசலம் குறிப்பிடுகிறார். இந்நூற்பாடல்கள் முழுமையும் ஆசாரியர் திருவடியில் தாம் பூண்ட தொண்டையும் தமக்கு அவர் அருள் செய்த பெருமையையும் அதனால் தம் மனத்தில் தோன்றிய பெருமித உணர்ச்சியையும் பாடுவன.

பாடல் நடை

கல்லது நெஞ்சம்

ஆரார் பகைக்கினும் ஆரார் நகைக்கினும் ஆவதென்ன?
சீரார் கமலையுள் ஞானப்ர காசன்என் சிந்தையுள்ளே
பேரா திருந்து சிவானு பவந்தரப் பெற்றதனால்,
வாராது சென்மமும், போகாது பேரின்ப வா ரியுமே.

எனை ஆண்டருள் பிஞ்சகனே

வல்லான் கமலையுள் ஞானப்ர காசன் வசனமுணர்ந்து
எல்லாம் வெறும்மித்தைஎன்றுகண் டேன், இன்ப வாரியுள்ளே
செல்லாமற் சென்றதைத் தேக்காமற் றேக்கித் தினந்தினமும்
நில்லாமல் நின்றுகொண் டேன், இது வேழுத்தி நிச்சயமே. 7

தித்திக்கச் சொன்னவன்

செத்திப் படுத்தித் தெளிவாக்கிச் செந்நெல் தெளிப்பதுபோல்
புத்திக் கடினங் கரைத்தமன் னே, இன்ப பூரணத்தைச்
சத்திக்கு மேலினைக் கீழினை மும்மலத் தன்மைதனைத்
தித்திக்கச் சொன்னது ஞானப்ர காசன் திருவுளமே, 25

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Apr-2025, 10:56:26 IST