under review

குயில் பாட்டு

From Tamil Wiki

To read the article in English: Kuyil Pattu. ‎


"குயில் பாட்டு" சி. சுப்பிரமணிய பாரதி எழுதிய நீள் கவிதை நூல். 1914-ல் எழுதப்பட்டு 1923-ல் வெளிவந்தது.

ஆசிரியர் குறிப்பு

குயில் பாட்டின் ஆசிரியர் சி. சுப்பிரமணிய பாரதி. தமிழின் நவீனக் கவிஞர்களில் முதன்மையானவராகக் கருதப்படுபவர்.

எழுதப்பட்ட காலம்

குயில் பாட்டுக்குப் பாரதியார் தந்த தலைப்பு 'குயில்’ என்பதே. 'குயில்’ கையெழுத்துப் படியில் 'இது எழுதப்பட்ட காலம் 1914 அல்லது 1915’ என்று குறிக்கப்பட்டிருப்பதாகச் பாரதி ஆய்வாளர் சீனி.விசுவநாதன் குறிக்கின்றார்.

பாரதியார் 1921-ம் ஆண்டு இறந்தார். 'குயில் பாட்டு’ நூல் 1923-ல் அச்சேறியது.

உருவான களம்

புதுவையில் முத்தியாலுப்பேட்டை பகுதி நகரின் மேற்கே உள்ளது. அங்கு கிருஷ்ணசாமிசெட்டியார் என்பவருக்கு ஒரு தோப்பு இருந்தது. மரங்கள் அடர்ந்து செழித்திருந்தது. அந்தத் தோப்பிற்குச் சென்ற பாரதியார் அதன் இயற்கை அழகில் மயங்கினார்; அங்கு தொடர்ந்து குயில் கூவுவதைக் கேட்டபோது இதை எழுதியதாக குறிப்பிடப்படுகிறது.

புதுவையில் அவரோடு இருந்த வ.ரா.என்று அழைக்கப்பட்ட வ.ராமசாமி ஐயங்கார் குயில் பாட்டு பிறந்த தருணத்தை "முத்தையாலுப்பேட்டை கிருஷ்ணசாமி செட்டியாரின் தோட்டத்திலே நோக்கி நோக்கிக் களியாட்டம் ஆடுவார் பாரதியார். அவருடைய ஆனந்தம் வர்ஷ தாரையாகப் பெருக்கடையும். உன்மத்தனைப் போலச் சில சமயங்களில் அவர் ஆகி விடுவார்..குரலிலே ஸரிக-க-காமா; காலிலே தாளம்; கைகள் கொட்டி முழங்கும். உடல் முழுதும் அபிநயந்தான் ... குழந்தை பிறந்தவுடன் சோர்ந்து நித்திரையில் ஆழ்ந்துவிடும் தாய்மார்களைப் போல, கவிதை பிறந்தவுடன் பாரதியார் சோர்ந்து போய் மண் தரையில் படுத்துக் கொள்வார்" என்று கூறியுள்ளார்.

அமைப்பு

குயில் பாட்டு ஒன்பது பகுதிகளாக எழுப்பட்டுள்ளது

  • குயில்
  • குயிலின் பாட்டு
  • குயிலின் காதற்கதை
  • காதலோ காதல்
  • குயிலும் குரங்கும்
  • இருளும் ஒளியும்
  • குயிலும் மாடும்
  • நான்காம் நாள்
  • குயில் தன் பூர்வ ஜன்மக் கதையுரைத்தல்

கதைச் சுருக்கம்

புதுவை நகரின் மேற்கில் ஒரு மாஞ்சோலை. அங்கு வேடர் வராத ஒரு நாளில் விந்தைக் குயிலொன்று பாடியது.

காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்

(குயிலின் பாட்டு - 1)

என்று துள்ளும் இன்ப வெறியும் துயரும் கலந்த குரலில் குயில் பாடியதைக் கவிஞன் கேட்டான். குயிலே! உன் துயரம் யாது என்று அதனிடம் வினவினான். "நான் மனிதர்களின் மொழியெல்லாம் அறியும் பேறு பெற்றேன்; பாட்டில் நெஞ்சைப் பறி கொடுத்தேன்; இப்போது காதலை வேண்டிக் கரைகின்றேன்" என்று கூறியது. அந்தப் பெண் குயில். கவிஞனுக்குக் குயிலின் மீது அடங்காக் காதல் பிறந்து விட்டது. அந்த நேரத்தில் மற்ற பறவைகளெல்லாம் சோலைக்கு வந்துவிட்டன. காதலுக்குரிய தனிமை போய்விட்ட சூழலில் குயில் கவிஞரை நான்காம் நாள் அவ்விடத்திற்கு மறவாமல் வந்து விடக்கூறி மறைந்து விடுகிறது.

கவிஞனின் காதல் மனம் உறங்கவில்லை; காதலியைப் பிரிந்த துயர் வருத்த மறுநாளே சோலைக்குச் செல்கின்றான். அங்குக் குயில் ஒரு குரங்கோடு காதல்மொழி பேசிக் கொண்டிருந்தது. நீசக் கருங்குயில் "காதல் காதல் காதல்", என்ற முன்னாள் இசைத்த அதே பாட்டைப் பாடிக் குரங்கின் அழகைப் பாராட்டிக் கொண்டிருந்தது. கவிஞன் வாளை உருவிக் குரங்கின மீது வீச, குரங்கு தாவி ஒளிந்தது. குயிலும் பிற பறவைகளும் மறைந்தன.

இரவு முழுவதும் துயில் கொள்ளாமல் இருந்து மூன்றாம் நாள் காலையில் கவிஞன் சோலைக்குச் சென்றான். அப்போது குயில் கிழக் காளை மாடு ஒன்றோடு காதல் மொழி பேசிக் கொண்டிருந்தது. 'காதல் காதல் காதல்’ என்ற அதே பாட்டில் சோலை முழுவதையும் குயில் சொக்க வைத்துக் கொண்டிருந்தது. கவிஞன் சினம் பெருக வாளை உருவிக் காளையின் மீது வீச, காளை ஓடிவிடக் குயிலும் மற்ற பறவைகளும் மறைந்தன.

நான்காம் நாள் கவிஞன், சோலையிலே குயிலைச் சந்தித்து அதன் வஞ்சகப் பொய்மையை எடுத்துரைக்கின்றான். குயில் கண்ணில் நீர் சிந்தத் தன் முற்பிறவிக் கதையைக் கூறுகின்றது. "சேரநாட்டின் மலைச் சாரலில் பிறந்த சின்னக்குயிலி என்பாள், தன் மாமன் மகன் மாடன் என்பவனையும் தனக்காக மணம் நிச்சயிக்கப்பட்ட நெட்டைக் குரங்கன் என்பவனையும் புறக்கணித்து விட்டு மலைச்சாரலுக்கு வரும் சேர இளவரசன்பால் மையல் கொள்கிறாள். மாடனும் குரங்கனும் சேர இளவலை வெட்டி வீழ்த்துகின்றனர். மறுபிறப்பில் சந்திப்பதாகக் கூறி இளவரசன் விழி மூடுகின்றான். மறு பிறப்பிலும் காதலர் சேர முடியாதவாறு மாடனும் குரங்கனும் இடையூறு செய்கின்றனர். குயிலியைக் குயிலாக மாற்றி விடுகின்றனர்". இந்தக் கதையைப் பொதிகை மலை முனிவர் குயிலிடம் கூறி விட்டு அதன் சாபம் தொண்டை நாட்டு மாஞ்சோலையில் தீருமென்றும் கூறுகிறார்.

கவிஞன் குயிலின் பழம்பிறப்பையும் மாடன் குரங்கனின் மாயச் செயல்களையும் உணர்ந்து தெளிகிறான். குயிலை முத்தமிடுகிறான். குயில் மறைந்து அங்கே கொள்ளை வனப்புடைய பெண் நிற்கிறாள். அப்பெண்ணைத் தழுவி முத்தமிட்டு மோகப் பெருமயக்கில் ஆழ்ந்திருக்கும் போது, பெண், சோலை ஆகிய எல்லாம் மறைந்து விடக் கவிஞன் சுவடி, எழுதுகோல், பத்திரிகை, பழம்பாய் ஆகியவை சூழ்ந்த தன் வீட்டில் இருப்பதைக் கண்டான்.

தத்துவ விளக்கம்

குயிலின் கதை முடிந்த பிறகு குயில் பாட்டின் இறுதியில் கவிஞர் மூன்று அடிகளில் ஒரு வினாவை எழுப்புகின்றார்.

ஆன்ற தமிழ்ப் புலவீர்! கற்பனையே ஆனாலும்
வேதாந்தமாக விரித்துப் பொருள் உரைக்க
யாதானும் சற்றே இடமிருந்தாற் கூறீரோ!

(குயில் பாட்டு, இறுதி அடிகள்)

இவ்வரிகளை வைத்து இப்பாட்டு வேதாந்த உள்ளுறை உடையது என்றும் சைவ சித்தாந்த உள்ளுறை அமைந்திருப்பதாகவும் விவாதங்கள் நிகழ்ந்தன. குயில், மாடு, குரங்கு என்பவற்றைக் குறியீடுகளாகக் கருதும் நிலையில் இப்பாட்டு ஒரு தத்துவ உள்ளுறை உடையதே என்று விளக்கப்படுகிறது.

இலக்கிய இடம்

குயில் பாட்டு சி. சுப்பிரமணிய பாரதியின் பெரும்பாலான பாடல்களைப் போலவே பாடுவதற்குரிய இசைக் குறிப்புகள் மற்றும் சந்தத்துடன் எழுதப்பட்ட நூலாகும்.

"இது பட்டப் பகலில் பாவலர்க்குத் தோன்றுவதாம். நெட்டைக் கனவின் விளைச்சல். உண்மையிலேயே இது ஒரு கனவு; மதுமயக்கத்தில் உண்டாகும் மிகைப் பேச்சுப் போல, கவிக்கு அருள் வந்த வேளையில் மெய்மறந்து கொட்டிய கற்பனை" என்று "குயில் பாட்டு" பற்றி எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன் கூறியுள்ளார்

உசாத்துணை✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Dec-2022, 21:42:13 IST