under review

குமாரசுவாமி ஐயர்

From Tamil Wiki
குமாரசுவாமி ஐயர் (நன்றி: ourjaffna)

குமாரசுவாமி ஐயர் (1879 - 1947) ஈழத்து தமிழ்ப்புலவர், சித்த மருத்துவர். மட்டக்களப்பு சுதேச மருத்துவத்தின் முக்கியமான முகமாகக் கருதப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

குமாரசுவாமி ஐயர் இலங்கை மட்டக்களப்பினைச் சேர்ந்த ஆரைப்பற்றையில் வாழ்ந்த சின்னத்தம்பி, சின்னம்மை இணையருக்கு 1879-ல் பிறந்தார். மட்டக்களப்பில் கல்வி பயின்றார். யாழ்ப்பாணம் த. கைலாசபிள்ளையிடம் சைவசமய இலக்கியங்களையும் சமஸ்கிருதத்தையும் கற்றார். சைவநெறியைக் கடைபிடித்த வைதிக வாழ்வினால் ’ஐயர்’ என்று அழைக்கப்பட்டார். நாட்டு வைத்தியத்துறையில் புலமை கொண்டவர். ’நாடி’ பார்ப்பதில் பெயர் பெற்றவர்.

ஆசிரியப்பணி

அரசடித் தமிழ் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். சுவாமி விபுலானந்தர், மயில்வாகனப் புலவர் ஆகியோருக்கு சமஸ்கிருதம் கற்பித்த ஆசிரியர்.

இலக்கிய வாழ்க்கை

சித்தவைத்தியப் பத்திரிகைகளிலும், ‘செங்குந்தமித்திரன்’ முதலான வெளியீடுகளிலும் தமிழ், சமயம், வைத்தியம் பற்றி எழுதினார். "ஆயுள்வேத வைத்தியக் கருவூலம்" என்னும் நூலை எழுதினார். வெண்பா, ஆசிரியப்பா, கலித்துறை, கலிவெண்பா, விருத்தம் போன்ற யாப்புக்கள் கொண்ட 800 பாக்களால் அமைந்தது ‘வைத்தியக் கருவூலம்‘ நூல். 1931-ல் ’மலேரியா என்னும் காட்டுச்சுரம்’ நூலை எழுதினார். "ஆயுள்வேத வைத்தியக் கருவூலம்’ என்னும் நூல் பதிப்பிக்கப்படவில்லை. நாடக நூல்கள், காவடிச்சிந்துகள் போன்ற பல நூல்பிரதிகளை மெய்ப்பு நோக்குவதற்கு பலரும் அணுகும் ஆசிரியராக இருந்தார்.

மறைவு

குமாரசுவாமி ஐயர் 1947-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • ஆயுள்வேத வைத்தியக் கருவூலம்
  • மலேரியா என்னும் காட்டுச்சுரம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Mar-2023, 06:55:17 IST