under review

குன்றியளார் (குன்றியனார்)

From Tamil Wiki

குன்றியளார் (குன்றியனார்), சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். சங்கத் தொகை நூல்களில் இவரது பத்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

ஆசிரியர் குறிப்பு

குன்றியளாரின் பெயரை குன்றியனார் என பாடபேதமும் கொள்ளப்படுகிறது. குன்றியாள் என்ற பாடபேதம் குறுந்தொகையை பதிப்பித்த உ.வே.சா.வினால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. குன்றியனார் என்பதை பாடபேதமாகக் கொண்டால் குன்றி அன்னார் என்பது குன்றியனார் என்று தொகுத்து வழங்கயிருக்க வேண்டுமென கருதப்படுகிறது. குன்றியளார் இயற்றிய 10 பாடல்களும் அகப்பாடல்களாகவும் அவற்றுள் 9 பாடல்கள் பெண் கூற்றாகவும் இருப்பதைக் கொண்டு இவர் பெண்பாற் புலவர் எனக் கருதப்படுகிறது.

பாடல்கள்

குன்றியளார், இயற்றிய கீழ்காணும் 10 பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன;

அகநானூறு 40

கானல், மாலைக் கழிப் பூக் கூம்ப,
நீல் நிறப் பெருங் கடல் பாடு எழுந்து ஒலிப்ப,
மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி
குவை இரும் புன்னைக் குடம்பை சேர,
அசை வண்டு ஆர்க்கும் அல்குறுகாலை,
தாழை தளரத் தூக்கி, மாலை
அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க்
காமர் நெஞ்சம் கையறுபு இனைய,
துயரம் செய்து நம் அருளார் ஆயினும்
அறாஅலியரோ அவருடைக் கேண்மை!
அளி இன்மையின் அவண் உறை முனைஇ,
வாரற்கதில்ல தோழி! கழனி
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
தண்ணுமை வெரீஇய தடந் தாள் நாரை
செறி மடை வயிரின் பிளிற்றி, பெண்ணை
அகமடல் சேக்கும் துறைவன்
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே!

பொருள்

கடற்கரைச் சோலையை அடுத்த கழியில் வரிசையாகவுள்ள பூக்கள் குவியவும், நீல நிறத்தையுடைய பெரிய கடல் ஒலி மிக்கு ஒலிக்கவும், மீனை யுண்ணும மெல்லிய சிறகினையுடைய பறவைக் கூட்டம், திரட்சி பொருந்திய பெரிய புன்னைமரத்திலுள்ள கூடுகளிற் சேரவும், அசைகின்ற வண்டுகள் ஒலிக்கும், எல்லாம் தம் பதிகளிலே சென்று தங்குங் காலமாகிய, மாலைப் பொழுதிலே, தழைகள் தளர்ந்திட அசைந்து; அழிதக வந்த கொண்டலொடு-பிரிந்திருப்பார் வருந்த வந்த கீழ்காற்றினால், மிக்க துன்பங் கொண்ட அழகிய நெஞ்சம் செயலற்று வருந்த, நமக்குப் பிரிதற் துன்பினைச் செய்து (மீண்டு வந்து) நம்மை அருளாராயினும்; அவரது நட்பு நமக்கு ஒழியாதிருப்பதாக; வயல்களில் வெண்ணெல்லை அரிவோரது பின்பு நின்றொலிக்கும், பறை ஒலியினைக் கேட்டஞ்சிய நீண்ட கால்களையுடைய நாரை, செறிந்த மூட்டு வாயினையுடைய கொம்புபோல் ஒலித்து, பனை மரத்தின் மடலகத்தே தங்கும் தலைவனது, இனிய துயிற் குரிய மார்பின் பொருட்டுச் சென்ற என் நெஞ்சு, அவர் அளி செய்திலரென்று அங்கே தங்குதலை வெறுத்து, இங்கு வாராதிருப்பதாக.

அகநானூறு 41

வைகு புலர் விடியல், மை புலம் பரப்ப,
கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
எரி மருள் பூஞ் சினை இனச் சிதர் ஆர்ப்ப,
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து,
குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர,
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர்
ஓதைத் தௌ விளி புலம்தொறும் பரப்ப,
கோழிணர் எதிரிய மரத்த, கவினி,
காடு அணி கொண்ட காண்தகு பொழுதில்,
நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய்,
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த
நல் தோள் நெகிழ, வருந்தினள்கொல்லோ
மென் சிறை வண்டின் தண் கமழ் பூந் துணர்
தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன
அம் கலுழ் மாமை கிளைஇய,
நுண் பல் தித்தி, மாஅயோளே?

பொருள்

மெல்லிய சிறகினையுடைய வண்டுகளையுடைய, குளிர்ச்சியுடைய மணக்கும் பூங்கொத்துக்களிலுள்ள, தாதுடன் கூடிய தேன்துளி, தளிரில் ஒழுகியதுபோலும், அழகு ஒழுகும் மாமை நிறத்தில் தோன்றும், சிறிய தேமற் புள்ளிகளையுடைய, நம் கிழத்தி; தங்கிய இருள் புலர்ந்திடும் விடியற் காலத்தில், எருமைகள் நிலத்தே பரந்து செல்ல, முருக்க மரத்தின் பெரிய அரும்புகள் முறுக்கு நெகிழ்ந்த, நெருப்பையொத்த பூக்களையுடைய கிளைகளில், கூட்டமாய வண்டுகள் ஒலிக்க, நெடிய நெற் பயிரினை நட்ட கழனியிலுள்ள ஏர்களினால் மண் பிறழும்படி, அரிதாளையுடைய நிலத்தைப் பிளந்து உழுத, எருதுகளைக் கொண்ட உழவர்களது, ஏர் ஓட்டும் ஒலி, அழகுற்றுச் செழிய பூங்கொத்துகள் தோன்றிய மரங்களையுடைய, காடு அழகுபெற்ற, காட்சி பொருந்திய இக் காலத்தில்; நம் பிரிவு என்பதே அறியாமல் இயற்கையோடு கூடி மிகச் சிறப்புற்றிருந்த தனது நல்ல தோள்கள், இப்போத நாம் பிரிந்திட்ட தனிமையால், அவ்வியற்கையழகு கெட மிகவும் மெலிந்து நெகிழ்ந்திடலால், வருந்தினாளோ?

குறுந்தொகை 50

ஐயவி அன்ன சிறுவீ ஞாழல்
செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த்
துறைஅணிந் தன்றவ ரூரே யிறையிறந்
திலங்குவளை ஞெகிழச் சாஅய்ப்
புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே.

பொருள்

வெண்சிறு கடுகைப் போன்ற சிறிய பூக்களையுடைய ஞாழல் மரத்தின் பூ செம்மையாகிய மலர்களையுடைய மருத மரத்தின் பழம்பூவோடு பரந்து தலைவருடைய ஊரின் இடத்தில் நீர்த் துறையை அழகு செய்தது; அவர் முன்பு அளவளாவிய என் தோள் விளங்கும் வளையல்கள் மூட்டுவாய்ச் சந்தைக் கடந்து நெகிழும்படி மெலிந்து தனிமையையே அழகாகப் பெற்றது.

குறுந்தொகை 51

கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
நூலறு முத்திற் காலொடு பாறித்
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை
யானும் காதலென் யாயுநனி வெய்யள்
எந்தையுங் கொடீஇயர் வேண்டும்
அம்ப லூரும் அவனொடு மொழிமே.

பொருள்

வளைவாகிய முள்ளை யுடைய கழிமுள்ளியினது மிக்க குளிர்ச்சியை உடைய கரிய மலர் நூலற்று உதிர்ந்த முத்துக்களைப் போல காற்றாற் சிதறி நீர்த்துறைகளுள்ள இடங்கள்தோறும் பரவுதற்கு இடமாகிய தூய மணலையுடைய கடற்கரைக்குத் தலைவனை யானும் விரும்புதலை உடையேன்; நம் தாயும் அவன்பால் மிக்க விருப்பத்தை உடையவளாய் உள்ளாள்; நம் தந்தையும் அவனுக்கே நின்னை மணஞ்செய்து கொடுக்க விரும்புவான்; பழிமொழியைச் சிலரறிய உரைக்கும் ஊரிலுள்ளாரும் அவனொடு நின்னைச் சேர்த்தே சொல்லுவர்.

குறுந்தொகை 117

மாரி ஆம்ப லன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு
கண்டல் வேரளைச் செலீஇயர் அண்டர்
கயிறரி யெருத்திற் கதழுந் துறைவன்
வாரா தமையினும் அமைக
சிறியவும் உளவீண்டு விலைஞர்கை வளையே.

பொருள்

தோழி! மாரிக்காலத்து ஆம்பல் மலரைப் போன்ற தோற்றத்தை உடைய கொக்கினது பார்வையை அஞ்சிய ஈரமான நண்டு தாழை வேரினிடையே உள்ள வளைக்குட் செல்லும் பொருட்டு இடையராற் பிணிக்கப்பட்ட கயிற்றை அறுத்துச் செல்லும் எருதைப் போல விரைந்து செல்லுதற்கு இடமாகிய கடல் துறையையுடைய தலைவன் இங்கே வாராமற் பொருந்தினும் பொருந்துக; முன் அணிந்த வளைகளை இழப்பினும் பிறருக்கு அம்மெலிவு புலப்படாமல் அந்நிலையிலும் செறிப்பதற்குரியனவாகிய விற்பார் தரும் கைவளைகளுள் சிறிய அளவை உடையனவும் இங்கே உள்ளன.

குறுந்தொகை 238

பாசவ லிடித்த கருங்கா ழுலக்கை
ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி
ஒண்டொடி மகளிர் வண்ட லயரும்
தொண்டி யன்னவென் நலந்தந்து
கொண்டனை சென்மோ மகிழ்நநின் சூளே.

பொருள்

அவல் இடித்த உலக்கையை நெல்லுக்குவியல் தலையணையில் தூங்கவைத்துவிட்டு மகளிர் வண்டல் விளையாடும் மகிழ்ச்சி மிக்கது தொண்டி நகரம். அந்தத் தொண்டி போன்ற என் மகிழ்ச்சி நலத்தை நீ செல்லும்போது இழந்துவிடுகிறேன். நீ சென்றால், என் மகிழ்ச்சியை என்னிடமே தந்துவிட்டுச் செல்க.

குறுந்தொகை 301

முழவுமுத லரைய தடவுநிலைப் பெண்ணைக்
கொழுமட லிழைத்த சிறுகோற் குடம்பைக்
கருங்கா லன்றிற் காமர் கடுஞ்சூல்
வயவுப்பெடை யகவும் பானாட் கங்குல்
மன்றம் போழும் இனமணி நெடுந்தேர்
வாரா தாயினும் வருவது போலச்
செவிமுத லிசைக்கு மரவமொடு
துயில்துறந் தனவால் தோழியென் கண்ணே.

பொருள்

தோழி! முழவினைப்போன்ற அடி மரத்தையுடைய வளைந்த பனையினது கொழுவிய ஓலையில் கட்டப்பட்ட சிறிய கூட்டிலுள்ள கரிய காலையுடைய அன்றிலினது விருப்பத்தையுடைய முதல்சூலினால் உண்டான பெண் பறவை ஆண்பறவையை அழைக்கின்ற பாதியிரவில் தனது சக்கரத்தால் மன்றத்தைப் பிளந்து கொண்டு வரும் மணியையுடைய தலைவனது நெடியதேர் வாராதாயினும்! வருவது போல காதினில் ஒலிக்கும் ஒலியினால் என்னுடைய கண்கள் தூக்கத்தை நீத்தன.

குறுந்தொகை 336

செறுவர்க் குவகை யாகத் தெறுவர
ஈங்கனம் வருபவோ தேம்பாய் துறைவ
சிறுநா வொண்மணி விளரி யார்ப்பக்
கடுமா நெடுந்தேர் நேமி போகிய
இருங்கழி நெய்தல் போல
வருந்தின ளளியணீ பிரிந்திசி னோளே.

பொருள்

துறைவ! நீ இரவில் வந்துசெல்கிறாய். உன் தேர் வரும்போது ஒலிக்கும் மணியோசை விளரிப்பண்ணாக (இரங்கல் பண்ணாக) இருக்கிறது. அந்தத் தேர்ச்சக்கரம் ஏறிய நெய்தல் கொடிபோல் இவள் உன் பிரிவால் வாடிக்கிடக்கிறாள். நம் பகைவர்களுக்கு மகிழ்ச்சி தரும்படி இப்படி வந்து போகலாமா? (மணந்துகொள்ள வேண்டாமா?).

நற்றிணை 117

பெருங் கடல் முழங்க, கானல் மலர,
இருங் கழி ஓதம் இல் இறந்து மலிர,
வள் இதழ் நெய்தல் கூம்ப, புள் உடன்
கமழ் பூம் பொதும்பர்க் கட்சி சேர,
செல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம்
கல் சேர்பு நண்ணிப் படர் அடைபு நடுங்க,
புலம்பொடு வந்த புன்கண் மாலை
அன்னர் உன்னார் கழியின், பல் நாள்
வாழலென்- வாழி, தோழி!- என்கண்
பிணி பிறிதாகக் கூறுவர்;
பழி பிறிதாகல் பண்புமார் அன்றே.

பொருள்

தோழீ ! நீ வாழி; பெரிய கடல் முழங்காநிற்கவும் கடல் அருகிலுள்ள சோலை ஒருங்கே மலர்தலைச் செய்யவும், கரிய கழியின் நீர்வெள்ளம் நமது மனையெல்லை கடந்து நிறைந்து வாராநிற்பவும்; பெரிய இதழையுடைய நெய்தல் மலர் குவியவும்; காக்கைகள் ஒருசேர மணம் வீசும் பூஞ்சோலையிலுள்ள தம்தம் கூடுகளிலே சென்று தங்கா நிற்பவும்; சூரியன் சிவந்து குன்றில் மறையவும், எங்கும் முன்பு பரவிய சுடர் மழுக்கமடையவும்; அவற்றை நோக்கித் துன்பங்கள் எல்லாம் ஒருங்கே யான் அடைந்து நடுங்கும்படி செய்யும் மாலைப்பொழுதில்; அத்தலைவர் தாம் என்னை நினையாமல் அகன்றார்; அதனால் எனக்கு உண்டான காமநோய் முருகு அணங்கியதால் வந்ததாகுமென்று ஊரிலுள்ளார் கூறுவர், யான் எய்திய நோயை வேறொன்றன் மேலிட்டு அங்ஙனம் பழி பிறிதொன்றாக அயலார் கூறுதல் பண்புடையதன்றாதலின்; இனி யான் நெடுநாள்காறும் உயிரோடு வாழ்ந்திலேன் காண்!

நற்றிணை 239

ஞான்ற ஞாயிறு குடமலை மறைய,
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி,
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்
காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின்,
ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தல்
புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும்
மல்லல் இருங் கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு
அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே; 'முன்கை
வார் கோல் எல் வளை உடைய வாங்கி,
முயங்கு' எனக் கலுழ்ந்த இவ் ஊர்
எற்று ஆவதுகொல், யாம் மற்றொன்று செயினே?

பொருள்

மேற்கில் சூரியன் மறைய, மயங்கிய மாலைக் காலத்தில் கள்குடித்து மகிழ்ச்சியுற்ற பரதவர்கள் தாம் பெற்ற பெரிய மீனை எளிதாக விற்று; நண்டு விளையாடிய புலவு நாற்றத்தையுடைய மணல் பரந்த முன்றிலையுடைய நோக்குவார்க்கு விருப்பம் வருகின்ற சிறுகுடியின்கண், செல்லலுற்ற ஒழுங்குபட்ட வழியின் அழகிய நீலமணியின் குவியலை விரித்துப் பரப்பினாற்போல; நெய்தலின் மலரைக் மிதித்துச் செல்லாநின்ற, வளப்பத்தையுடைய கரிய கழி பொருந்திய நிரம்பிய கடல்நீரையுடைய நெய்தல் நிலத் தலைவனுக்கு; யாம் மனமொத்து இதுகாறும் அவன் ஆணையைக் கேட்டு நடந்தோமேயில்லை; அங்ஙனமாக என்னை நோக்கி "நின் முன் கையில் அணிந்த நெடிய கோற்றொழில் அமைந்த ஒளி பொருந்திய வளைகள் உடையும்படி அச்சேர்ப்பனை அணைத்து முயங்குவாயாக!" என்று கூறி; புலம்பியழுத இவ்வூர்தான்; யாம் இனி அவனுக்கு அமைய நடக்கவல்ல வேறொரு காரியத்தைச் செய்துவிட்டால் என்ன பாடுபடுமோ?

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Jan-2023, 06:51:48 IST