under review

குடுகுடுப்பை நாயக்கர்

From Tamil Wiki

To read the article in English: Kudukudupai Nayakkar. ‎

Kudukudupai nayakkar.jpg

குடுகுடுப்பை நாயக்கர்: தமிழகத்தின் நாடோடிச் சாதியில் ஒன்று. இவர்கள் வட ஆந்திரத்தில் இருந்து தமிழகம் வந்தவர்கள். குடுகுடுப்பை நாயக்கர்கள் பகல் பொழுதில் கைரேகை பார்ப்பதும் நடு இரவில் குடுகுடுப்பை அடித்து குறிச் சொல்வதும் தொழிலாகக் கொண்டவர்கள். சுவடி வாசித்து எதிர்காலம் சொல்வது, பகல் வேடமிடுவது, தோஷம் தீர்க்கும் சடங்கு நிகழ்த்துவது போன்ற தொழிலையும் மேற்கொள்கின்றனர். வேட்டையாடுதல், மீன் பிடித்தல், பழைய துணியை யாசித்து விற்பது, பிச்சையெடுப்பது போன்ற நாடோடி வாழ்வை நடத்துபவர்கள்.

சாதிக்குழு

Kudukudupai nayakkar1.jpg

கம்பளத்து நாயக்கர் என்றழைக்கப்படும் ஒன்பது கம்பளத்து பிரிவுகளில் ஒருவர் குடுகுடுப்பை நாயக்கர். ஏக்ரவார், தோக்லவார், கொல்லவார், சில்லவார், கம்மவார், பாலவார், தூளவார், எர்ரிவார், நித்ரவார் ஆக ஒன்பது கம்பளத்தார்கள். இதில் இறுதியிலுள்ள நித்ரவார் குடுகுடுப்பை நாயக்கரைக் குறிப்பிடும் பெயர் (நித்ர - தூக்கம்).

(பார்க்க: கம்பளத்து நாயக்கர்)

வரலாறு

Kudukudupai nayakkar2.jpg

ஒன்பது கம்பளத்து நாயக்கர் குழுவும் ஆந்திரத்திலிருந்து தமிழகத்திற்கு பொ.யு. 14-ம் நூற்றாண்டு முதல் புலம் பெயர்ந்துள்ளனர். இந்த புலம்பெயர்வு அடுத்தடுத்து பலக் காலகட்டங்களாக பொ.யு. 16-ம் நூற்றாண்டு வரை நிகழ்ந்துள்ளது. நாயக்கர் ஆட்சி காலத்தில் கட்டபொம்மனின் முன்னோர்களான ஏக்ரவார் கம்பளத்தாரும் (ராஜகம்பளம்), வேறு சில கம்பளத்தாரும் பாளையக்காரர்களாவும், படைவீரர்களாகவும் இருந்துள்ளனர்.

குடுகுடுப்பை நாயக்கர்கள் தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த காலம் முதல் நாடோடி வாழ்வையே மேற்கொண்டனர். நாயக்கர் காலத்திலிருந்து கம்பளத்தாரின் உட்பிரிவினர்களின் புலப்பெயர்வு பற்றி லார்ட் மெக்கன்சி தன் சுவடிகளில் தொகுத்துள்ளார்.

குடுகுடுப்பை நாயக்கர்கள் முதலில் உத்திரப் பிரதேசத்தில் இருந்தனர். அங்கு இவர்கள் ‘தாசர்கள்’ என்றழைக்கப்பட்டனர். பின்னர் ஆந்திரத்திற்கு புலம்பெயர்ந்த போது ‘பூசலவார்’ எனப்பட்டனர். கம்பிலியத்திலிருந்து வந்தவர்கள் ’கம்பிலியர்’ என்றழைக்கப்பட்டனர். இப்பெயர் பின்னர் கம்பளத்தார் என்றானது என்ற வரலாற்று கருத்தும் உள்ளது.

தொன்மம்

Kudukudupai nayakkar3.jpg

குடுகுடுப்பை நாயக்கர் வட ஆந்திரத்திலிருந்து முகலாய மன்னர்களின் கொடுமை பொறுக்காமல் தமிழகம் புலம்பெயர்ந்தனர். அப்போது ஆற்றங்கரையில் தூங்கிவிட்டதால் இனி இரவில் விழித்துக் கொண்டு குடுகுடுப்பை அடித்து வாழவேண்டும் எனச் சிவனால் சபிக்கப்பட்டவர்கள் என்ற தொன்மக் கதை ஒன்றுள்ளது.

தோற்றத் தொன்மம் (Origin Myth)

குடுகுடுப்பை நாயக்கர்களின் தோற்ற தொன்மக் கதை அவர்களின் குடிபெயர்வு வாழ்வோடு தொடர்புடையதாக உள்ளது. டில்லி பாச்சாயி ஆட்சியில் பெரிகொண்டம நாயக்கர் குதிரைப்படைக்குச் சர்தார் (தலைவர்) பதவி வகித்தார். பெரியகொண்டம நாயக்கரின் மைத்துனர் சின்னப்ப நாயக்கரின் வீட்டிற்கு மன்னர் வந்தார். மன்னர் பாச்சாயி நாயக்கரின் அழகிய மகளைக் கண்ட போது அவள் மேல் காதல் கொண்டார். சின்னப்ப நாயக்கரிடம் மகளைத் தனக்கு மணம் செய்து வைக்கும்படி கூறினார். சின்னப்ப நாயக்கரின் மனம் அதற்கு சம்மதிக்காததால் ஒன்பது கம்பளத்தார்களும் குழுவாக அங்கிருந்து தமிழகம் நோக்கி நடந்தனர். வரும் வழியில் ஆற்றில் வெள்ளம் இருந்ததால் இரவு ஆற்றங்கரையிலேயே தங்க முடிவு செய்தனர்.

அப்போது குடுகுடுப்பை நாயக்கர்கள் தூங்கிவிட்டனர். மற்ற எட்டுக் கம்பளத்தார்களும் சிவனை வேண்டியதால் ஆற்றங்கரையின் மறுபக்கத்தில் இருந்த பொங்கு மரம் சாய்ந்து பாலம் போல் அமைந்து வழி கொடுத்தது. எட்டு கம்பளத்தார்களும் மறுகரை சென்றனர். அப்போது குடுகுடுப்பை நாயக்கர்கள் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட சிவபெருமான் அவர்கள் மேல் கோபம் கொண்டு நித்ரவார் (தூங்கியவர்கள்) எனப் பெயரிட்டு அழைத்தார். இனி நீங்கள் நடுஇரவில் தூங்காமல் குடுகுடுப்பை அடித்து குறிச் சொல்லி பிழையுங்கள் எனச் சாபமிட்டார். மேலும் குடுகுடுப்பை அடிக்க தன் உடுக்கையை கொடுத்தார் என்ற கதையும் உள்ளது.

இக்கதையை பற்றி தன் ’தென்னிந்திய சாதிகளும் பழங்குடிகளும்’ நூலில் குறிப்பிடும் தர்ஸ்டன், ”தொட்டியன்களில் இரண்டு பிரிவினர்கள் உண்டு. அதில் ஒரு பிரிவினர் முகலாய மன்னருக்குப் பெண் கொடுத்து உறவு கொண்டார்கள். இன்னொரு பிரிவினர் மறுத்துவிட்டனர். ஒரு பிரிவினர் பெண் கொடுத்து உறவு கொண்டதால் இன்று திருச்சி மாவட்டத்தில் தொட்டியர்களும், முகமதியர்களும் உறவோடு உள்ளனர்” எனக் குறிப்பிடுகிறார்.

ஆனால் திருச்சி மாவட்டம் முழுவதும் குடுகுடுப்பை நாயக்கர் பற்றி களப்பணியில் ஈடுபட்ட ஆய்வாளர் பக்தவத்சல பாரதி தர்ஸ்டனின் தரவுகளை மறுக்கிறார். மேலும் ஒரு முஸ்லீம் வீட்டில் குடுகுடுப்பை நாயக்கர் யாசகம் கேட்பதை மற்றொருவர் பார்த்துவிட்டால் அது அவர்களின் பஞ்சாயத்திற்கு கொண்டுவரப்பட்டு தண்டம் கட்டுவதற்குரிய குற்றமாகும் என்கிறார் பக்தவத்சல பாரதி.

இனப்பரப்பு

குடுகுடுப்பை நாயக்கர் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை தவிர மற்ற எல்லா மாவட்டங்களிலும் பரவி வாழ்கின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டத்திலுள்ள சமுத்திரம் கிராமத்தில் அதிகம் வசிக்கின்றனர். இங்கு பொ.யு. 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 104 குடும்பங்கள் வாழ்கின்றனர். நடராசபுரம் (லால்குடி வட்டம்), அரங்கூர் (முசிரி வட்டம்), சர்க்கார்பாளையம் (திருச்சி வட்டம்), காரைப்பாக்கம் (அரியலூர் வட்டம்), சிலகால் (உடையார்பாளையம் வட்டம்) போன்ற கிராமங்களிலும் அதிகம் உள்ளனர். பொ.யு. 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி தமிழகம் முழுவதும் 40000 முதல் 50000 பேர் குடியிருக்கின்றனர் என மதிப்பிடப்படுகிறது.

சமூகத் தகுதி

குடுகுடுப்பை நாயக்கர்கள் தொட்டிய நாயக்கர்கள் என வகைப்படுத்தப்பட்டு குற்றப் பரம்பரை (Denotified Community) பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சமூகமாக வரையறை செய்யப்பட்டுள்ளனர்.

சமூகப் பிரிவுகள்

குடுகுடுப்பை நாயக்கர்கள் கம்பளத்து நாயக்கர் என்னும் பெரும்பிரிவில் ஒருங்கிணையக் கூடிய கிளை சாதியினர். குடுகுடுப்பை நாயக்கர்கள் தங்களுக்குள்ளே திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற விதியைப் பின்பற்றுபவர்கள் என்னும் காரணத்தால் இவர்கள் அகமணப் பிரிவாக உள்ளனர்.

அகமணப் பிரிவு சமூகத்தில் அண்ணன் - தம்பி, மாமன் - மச்சான் என இரண்டு பிரிவின் 18 புறமணக் குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவும் இரத்த வழியில் தொடர்புடையவர்கள். இதில் அண்ணன் - தம்பி உறவு முறை கொண்டவர்கள் திருமணம் செய்து கொள்ளவதில்லை. மாமன் - மச்சான் குழுவில் உள்ளவர்கள் தேர்ந்தெடுத்து திருமணம் செய்துக் கொள்கின்றனர். இப்புறமணக் குழுக்களில் எல்லாம் தந்தை வழி சமூகத்தை சேர்ந்தவர்கள்.

புறமணப் பிரிவினர்
இண்டி பேரு

(புறமணக் குழுக்கள்)

இண்டி பேரு

(புறமணக் குழுக்கள்)

1 காவிட்டி (பொதியை இரு பக்கத்திலும் தொங்கவிட்டுச் செல்லும் கோல்) பாசிம் (உடற்கட்டானவர்கள்)
2 மாட்டுங்கு (ஓர் ஊரின் பெயர்) கொரிவி (எரியும் மரம்/பந்தம்)
3 நாயுடு (தலைவர்) பில்லி (பூனை)
4 கோல (அம்பு) முனககோலு (முருங்கை மரத்தார்)
5 ஒக்கம் பயண்டபாலா (தங்கக் கொடி)
6 சீரலவாலு (புடவைக்காரர்கள்) பண்டி (மாட்டுவண்டி)
7 சிந்த மாங்க்கு (புளியமரம்) பசலிட்டி (ஒரு வகைப் பறவை)
8 பொதிலி (பிரகாசம் மாவட்டத்திலுள்ள ஒரு நகரத்தின் பெயர்) ஒலிபிட்டி (ஒருவகைப் பறவை)
9 தண்ணீரோலு (தண்ணீர் மக்கள்)
10 காலிவாலு (காற்று மக்கள்)

இதில் காவிட்டி முதல் காலிவாலு வரை அண்ணன் - தம்பி உறவு முறை கொண்டவர்கள். இவர்களுக்குள் திருமணம் நடைபெறாத மற்ற பட்டியலில் உள்ள எட்டு குழுக்களுள் எவர் ஒருவரையும் இந்த பத்து பேர் திருமணம் செய்துக் கொள்வர். அதே போல் பாசிம் முதல் ஒலிபிட்டி வரை எட்டு புறமணக் குழுக்கள் அண்ணன் - தம்பி உறவு முறை கொண்டவர்கள். இவர்கள் மற்ற பத்து குழுக்களில் மட்டுமே திருமணம் செய்வர்.

நாடோடி சமூகங்களில் காலப் போக்கில் சமூக பிரிதலும், இணைதலும், புதிய குழுக்கள் உருவாவதும் நிகழ்கிறது. குடுகுடுப்பை நாயக்கரில் 1975 -களுக்கு முன் ஒலிபிண்டி என்னும் இண்டி பேரு மேலே சொன்ன மற்ற பதினேழு பிரிவினகளுக்கு மாமன் - மச்சான் உறவு முறையாக இருந்துள்ளனர். இதனால் இவர்கள் தாசி வீடு (தாசி இண்டி) என்றழைக்கப்பட்டனர். மற்றவர்களை விட தாழ்ந்தவர்களாகவும் கருதப்பட்டனர். காலப் போக்கில் பாசிம் முதல் பசலிட்டி வரையுள்ள சமூகத்தினருடன் அண்ணன் - தம்பி உறவு கொண்டவர்களாக மாறினர். தாசி வீடு என்னும் சுட்டுப் பெயரும் மறையத் தொடங்கியது.

குடுகுடுப்பை நாயக்கரில் வேற்று சாதியினரைத் திருமணம் செய்து கொள்ளுதல், முறை மீறிய திருமணம் செய்து கொள்ளுதல் ஆகியன குற்றமாக கருதப்படுகிறது. அப்படி மணம் செய்யும் தம்பதியினர் பிரித்து இச்சமூகத்தினருக்கு உரியவரை மட்டும் புனிதப்படுத்தி ஏற்றுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவர். இதில் ஒரு சமூக பெண் வேறு சாதியினரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட பின் பஞ்சாயத்தில் பேசி மீண்டு வந்தாலும் அவர்களை ‘கொத்த’ (புதிய) என்ற முன் பெயருடன் இண்டி பெயரை அழைக்கும் வழக்கம் உள்ளன. அப்பெண்ணின் மறைவுக்கு பின்னர் அவள் குடும்பத்தின் இண்டி பெயரை பஞ்சாயத்தில் கேட்டு மாற்ற இயலும். ஆண் மனம் மாறி வந்தால் புனித சடங்கு மட்டும் செய்கின்றனர், அடைமொழி எதுவும் சூட்டுவதில்லை. இம்முயற்சி தோல்வியில் முடிந்தால் அவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கிவிடுவர். இவர்கள் வழி இரண்டு புதிய குழுக்கள் உருவாகியின. 1. துப்பாக்கி, 2. நெடுகிண்டிவாலு (குடிவழியின் மரபினைத் தகர்த்தவர்கள் என்று பொருள்).

திருமணம்

குடுகுடுப்பை நாயக்கர்களிடம் தாய்மாமன் பெண்ணை மணப்பது முதல் விருப்பமாக உள்ளது. தந்தையின் சகோதிரி (அத்தை) மகளை மணப்பது இரண்டாம் விருப்பம். அக்கா மகளை மணப்பது மூன்றாம் விருப்பமாக உள்ளது. இவர்களிடம் கிராம அகமணம் வலுவாக உள்ளது. மேலும் சகோதரர்கள் இரு சகோதிரிகளை திருமணம் செய்வது, தமக்கைப் பரிமாற்றம் முதலிய நடைமுறைகள் காணப்படுகின்றன. பரிசப் பணத்தை கட்டுவதலிருந்து விடுபடவும், உறவு முறையை விடாமல் பார்த்துக் கொள்ளவும் இம்முறை மணங்களை மேற்கொள்கின்றனர்.

குடுகுடுப்பை நாயக்கர்களில் பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணங்கள் ‘சம்பந்தம் திருமணம்’ என்றழைக்கப்படுகிறது. பொருத்தமான பெண்ணைப் பார்த்து சமூகத்தின் கூடகாடு, பெத்தகாபு, உறவின் முறை முன்னிலையில் நிச்சயதார்த்தம் (ஈகோல்) நிகழ்த்தப்படும். நிச்சயத்தின் போது ‘ஓலி காசு’ எனப்படும் மணப்பெண் பணம் ரூ. 42.50 யை மணமகன் பெண் வீட்டாருக்கு தந்து உறுதி செய்ய வேண்டும். சம்பந்தம் பேசும் குடும்பங்கள் நெருங்கிய உறவென்றால் இந்த ஓலி காசு தொகையை திருமணம் முடிந்த பின்னர் சிறிது சிறிதாக கொடுப்பர். சில நேரம் ஒரு வராகம் (ரூ. 4) மட்டும் கொடுத்து உறுதி செய்வதும் நிகழும்.

நிச்சயம் முடிந்ததும் ’பாதி மனைவி’ என்ற தகுதியை மணப்பெண் அடைகிறாள். மணமகன் பாதி தலைக்கட்டாகக் கருதப்படுவான். ஊரில் நிகழும் விழாவிற்கு மணமகனிடமிருந்தும் வசூல் செய்வர். மணமகளின் மருத்துவச் செலவைக் கூட மணமகன் தான் பார்க்க வேண்டும். 1970 வரை திருமணம் ஐந்து நாட்கள் நிகழும். சமீபகாலங்களில் இவை மூன்று நாட்களாக குறைந்துள்ளன.

உடன்போக்கு என்னும் முறை இவர்களிடம் உள்ளது. விரும்பப்பட்ட நபர்கள் ஓடிச் சென்று ஓரிரவு வெளியில் தங்கினாலே அவர்களை சேர்த்து வைக்கும் வழக்கம் உள்ளது. அவர்கள் ஊர் திரும்பிய பின் பஞ்சாயத்து தலைவர்கள் கணவன், மனைவியாக வாழப் போகிறீர்களா? கடைசி வரை பிரியாமல் வாழ்வீர்களா? எனக் கேட்பார். சம்மதம் தெரிவித்தால் இருவரையும் குளித்து வரச் சொல்லி கிழக்கு முகமாக அமர வைத்து துளசி தீர்த்தம் வழங்குவர். கருப்பு பாசி மணியை மணமக்கள் கழுத்தில் கட்டச் சொல்வர். இவ்வாறு உடன்போக்கு நிகழ்ந்தாலும் மணமகன் வீட்டார் பெண் வீட்டாருக்கு ஓலி காசு வழங்க வேண்டும். திருமணம் ஆனதும் கணவன், மனைவியுடன் இணைந்து பிறருடன் வேலைக்குச் செல்ல வேண்டும். இதனை ‘பூண்ட காபு’ என்றழைக்கின்றனர். 1950, 60- களில் ஓராண்டு வரை நிகழ்ந்துள்ளது.

அதே போல் மணவிலக்கும் பஞ்சாயத்தில் முறையிட்டு எளிதில் பெறலாம். மணவிலக்கினை மணமகன் முன்மொழிந்தால் ஓலி காசை திருப்பித் தர வேண்டும். மணமகள் முன் மொழிந்தால் திருமணக் காசில் ஒரு பகுதியை திருப்பி வழங்க வேண்டும். மறுமணத்தின் போது ஓலி காசின் தொகையும் குறைந்து கொண்டே வரும்.

தொழில்

குடுகுடுப்பை நாயக்கரின் முதன்மையான தொழில் நடு இரவில் குடுகுடுப்பை அடித்துக் குறி கூறுதல், பகலில் கைரேகை பார்த்தல், சுவடி மூலம் வருவதுரைத்தல், சடங்கு வழி தோஷம் தீர்த்தல், பகல்வேஷம் போட்டு யாசித்தல். வேட்டையாடுதல், மீன் பிடித்தல், பழைய துணியைச் சேகரித்து விற்றல், யாசகம் பெறுதல் துணைத் தொழிலாகக் கொள்கின்றனர்.

குடுகுடுப்பை அடித்தல்

சாமக் கோடாங்கி என்றழைக்கப்படும் குடுகுடுப்பை நாயக்கர்கள் நடு இரவில் குடுகுடுப்பை அடித்து குறிச் சொல்வர். ஒவ்வொரு ஆண்டும் அறுவடை மாதங்களான தை, மாசி, பங்குனி மாதங்களில் இரவில் குடுகுடுப்பை அடித்து குறிச் சொல்வர். பகலில் வந்து நெல் யாசகம் பெறுவர்.

பார்க்க: குடுகுடுப்பை அடித்தல்

கைரேகை பார்த்தல்

ஆண், பெண் இருவரும் கைரேகை பார்ப்பது, சுவடி பார்ப்பது, தோஷம் தீர்ப்பது மேற்கொள்வர். ஆண் பெண்களுக்கோ, பெண் ஆண்களுக்கோ கைரேகை பார்க்கும் போது ஒரு சிறு குச்சியைக் கொண்டு ரேகைகளைப் பார்ப்பர். பேச்சுக் கலையில் வல்லவர்களான இவர்கள் தாங்கள் கூறும் தொனியில் வருவதுரைத்தலை நம்பும்படியாக பேசுவர். உரிமைக் கிராமங்களில் மேற்கொள்ளும் வசூல் மூலம் ஐந்து முதல் பத்து மூட்டை நெல் பெறுவர்.

சுவடி பார்த்தல் ( சுவடி சூசேதி)

சுவடி என்பது பதப்படுத்தப்பட்ட பனை ஓலைகளில் படங்கள் வரையப்பட்ட கட்டாகும். இராமாயண மகாபாரத நிகழ்வுகள், கடவுள் படங்கள், நாட்டார் தெய்வங்கள், மேரி, நாகூர் ஆண்டவர் போன்ற படங்களைக் கரும்பச்சைச் சாறு கொண்டு ஆணியால் வரைந்து ஓலைகளை ஒரு பக்கம் துளையிட்டு கயிற்றினால் இணைத்து இருபக்கங்களிலும் கட்டை வைத்து கட்டப்பட்டதாகும்.

பார்க்க: சுவடி பார்த்தல்

தோஷம் தீர்த்தல் (தோஷம் தீசேதி)

குடுகுடுப்பை நாயக்கர் கைரேகை அல்லது சுவடி பார்ப்பதன் மூலம் மக்களுக்குள்ள தோஷத்தைக் கூறுவர். பாதிக்கப்பட்டவர் விருப்பம் தெரிவித்தால் தோஷம் தீர்க்கும் சடங்கைக் கூறுவர். தீய ஆவிகள் மூலம் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் நபரை நல்ல நிலைக்குக் கொண்டு வர தோஷம் தீசேதி சடங்கினைச் செய்வர்.

பார்க்க: தோஷம் தீர்த்தல்

பகல் வேடம்

குடுகுடுப்பை நாயக்கர் முருகர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், ராமர் வேஷம் பூண்டு வீடு வீடாகச் சென்று சாமிப்பாட்டுப் பாடி தெய்வங்களின் பெயரால் அருள்வாக்குச் சொல்வர். இறுதியாக யாசகம் கேட்பர். தானியங்கள், பணம், உணவு போன்றவை யாசகமாக பெறுவர். பகல் வேடத்தை சாப்பாட்டிற்கு வழியில்லாமல் போகும் காலங்களில் தொழிலாக மேற்கொள்கின்றனர். ஆனால் பகல் வேடக் கலைஞர்களான ஜங்கம பண்டாரத்திற்கு இதுவே முதன்மையான தொழில். (பார்க்க: ஜங்கம பண்டாரம்)

துணைத் தொழில்கள்

மேலே குறிப்பிட்ட தொழில்கள் போக மக்களிடம் பழைய துணிகள் இருந்தால் கொடுத்து உதவுங்கள் என யாசகம் கேட்பர். வருவதுரைத்தல் மூலமும் இவர்களுக்கு சில துணிகள் கிடைக்கின்றன. இத்துணிகளில் சிலவற்றை பெட்டி போட்டு தங்கள் தேவைக்கு வைத்துக் கொள்கின்றனர். பிற துணிகளை வாரச் சந்தையில் விற்று விடுகின்றனர்.

வேட்டையாடுதலும், மீன் பிடித்தலும் இவர்களின் பிரதான தொழிலாக உள்ளது. ஊர் சுற்றும் போதும், மாமிச உணவு வேண்டும் போதும் ஆண்கள் கூட்டாகச் சென்று வேட்டையாடுகின்றனர். முயல், கீரிப்பிள்ளை, காட்டுப்பூனை, காட்டுப் பன்றி, வயல் எலி, காடை, கவுதாரி, உடும்பு போன்ற விலங்குகளைப் பெரிதும் விரும்புகின்றனர். இதற்கென வலைகளும், கண்ணிகளும், பிற பொருட்களும் செல்லுமிடங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர். மீன் பிடித்தலில் இருபாலரும் ஈடுபடுகின்றனர்.

ஊர் சுற்றும் காலங்களில் வருமானம் இல்லாமல் போனால் தீண்டத்தக்க சமூகத்தாரிடம் பிச்சை எடுக்கின்றனர். இதனைப் பெண்களே மேற்கொள்கின்றனர்.

சமயம்

குடுகுடுப்பை நாயக்கரின் முதன்மை தெய்வம் ஜக்கம்மா. இத்தெய்வத்தின் ஆற்றல் கொண்டே நடு இரவில் குடுகுடுப்பை அடித்து ஜாமக் கோடாங்கியாகக் குறி சொல்கின்றனர். ஜக்கம்மாவின் வாக்கு பொய்க்காது என்னும் நம்பிக்கையும் இவர்களிடம் உள்ளது.

ஜக்கம்மா தீப்பாய்ந்த அம்மன். இவர்கள் ஜக்கம்மாவை உருவமில்லாமல் வழிபடுகின்றனர். ஆந்திராவில் இருந்து புலம்பெயர்ந்து வந்த போது வலசக் கூடையில் புடவை ஒன்றை எடுத்து வந்தனர். இன்றும் ஒவ்வொரு வீட்டிலும் வலசைக் கூடையில் புடவை வைத்திருக்கின்றனர். இதனை சாமி கூடை என்றழைக்கின்றனர். கோடையில் வீட்டில் தங்கி விட்டு இரண்டு மாதம் கழித்து மீண்டும் வெளியே செல்லும் போது ஜக்கம்மாவை வீட்டில் விமர்சையாக வழிபடுகின்றனர்.

ஜக்கம்மா தவிர மாரியம்மனை வழிபடுவது, முன்னோர் வழிபாடும் இவர்களிடம் உள்ளது. ஆடி பதினெட்டாம் நாள் முன்னோருக்கு பிடித்த உணவு வகைகள், பீடி, சுருட்டு, கள், சாராயம் வைத்துப் படைக்கின்றனர். ஆண்களுக்கு வேட்டியும், பெண்களுக்கு சிவப்பு புடவையும் வைத்துப் படைக்கின்றனர்.

பார்க்க: ஜக்கம்மா

மொழி

குடுகுடுப்பை நாயக்கரின் தாய்மொழி தெலுங்கு. இதனை பேச்சுமொழியாகவே கொண்டுள்ளனர். இவர்கள் பேசும் தெலுங்கு பதினாறாம் நூற்றாண்டிற்குரிய தெலுங்கு, அதனை தற்போதைய ஆந்திர மக்கள் புரிந்து கொள்வது கடினம். இவர்கள் தமிழில் நல்ல பழக்கம் கொண்டுள்ளனர். பலர் சான்றிதழ்களில் தாய்மொழி தமிழ் என்றே குறிப்பிடுகின்றனர். சிலர் கன்னடம், மலையாளம் போன்ற அண்டை மாநில மொழிகளை அறிந்து வைத்திருக்கின்றனர்.

பஞ்சாயத்து

பஞ்சாயத்து தலைவரை அழைத்து பஞ்சாயத்து நடத்தும் வழக்கம் நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும். குடுகுடுப்பை நாயக்கர் பஞ்சாயத்து தலைவர் ‘குரு’ என்றழைக்கப்படுவார். திருச்சி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திருச்சியிலிருந்து 275 கி.மீ தூரத்தில் உள்ள சின்ன காஞ்சிபுரத்தில் வசிப்பவர். இவர் பிராமணர். எனவே இவர் விசாரிக்கும் வழக்குகள் வருடங்களுக்கு ஒரு முறை தான் நிகழும்.

சமூகத்துள் சிறு சண்டைகள் ஏற்பட்டால் அங்குள்ள காபுக்கள் கூடி முடிவு காண்பர். அவர்களால் முடிக்க முடியாத வழக்குகள் பின்னர் விசாரிக்கப்படும். அப்போது தீர்வு காணமுடியவில்லை என்றால் கோடையில் ஆண்டிற்கு ஒரு முறை கூடும் பொது பஞ்சாயத்தில் தீர்க்கப்படும். இதிலும் தீரவில்லை என்றால் மற்ற ஊர் பஞ்சாயத்திற்கு செல்வர். அதிலும் தீர்க்க முடியாது பிரச்சனைகளை பஞ்சாயத்துத் தலைவர் வந்து தீர்ப்பு வழங்குவார்.

குருவிற்கு அடுத்த தலைமை பதவியில் குல பெத்த (குலத்தலைவர்) உள்ளார். இவருக்கடுத்து கொண்டிகாடு. கொண்டிகாடுவின் கீழ் கூடகாடு. அடுத்து பெத்த காபு. இறுதியாக பொதுமக்கள். இவர்கள் ‘காபு’ என்றழைக்கப்படுவர். குலபெத்த முதல் பெத்த காபு வரை அனைவரும் குடுகுடுப்பை நாயக்கர் சாதியினை சேர்ந்தவர்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனி பணிகள் உண்டு. பஞ்சாயத்து தவிர திருமணம், பிற சமூகச் சடங்குகளில் இவர்களின் பங்கேற்பும், பணிகளும் முக்கியமானவை. காபுகளிடம் தகவல் சொல்பவர் ஓடும் பிள்ளை என்றழைப்படுவார்.

குடுகுடுப்பை நாயக்கர் சமூகத்தில் அன்றாட வாழ்வியல் நெறி முறைகள் கூட மரபு வழியாகப் பின்பற்றி வரும் வழக்கம் உள்ளது. தமிழக கிராமங்களில் மரபு வழி பஞ்சாயத்து முறை நிலைநாட்டும் சமூக ஒழுங்கை விட குடுகுடுப்பை நாயக்கர்களின் சமூகக் கட்டுப்பாடு தீவிரமானது என்கிறார் ஆய்வாளர் பக்தவத்சல பாரதி.

ஒருவர் தவறு செய்தால் அவர் தான் செய்த தவறை அருகில் இருப்பவரிடம் சொல்லி சிறு துரும்பைக் கொடுப்பார். வாங்கியவர் குற்றத்தார் சொல்வதை முழுமையாகக் கேட்டதும் அத்துரும்பினைக் முறித்துப் போடுவார். இதனை முறிகட்டுதல் அல்லது துரும்பு கட்டுதல் (புள்ளகட்டேதி) என்றழைக்கின்றனர். குற்றத்தை கேட்பவர் முருதாரி எனப்படுவார். குற்றம் செய்தவர் ‘மயில்’ எனப்படுவார். பின்னர் ஓரிரு நாட்களில் ஆண்களை வைத்து பஞ்சாயத்துப் பேசி தீர்வு காணப்படும். குற்றத் தொகையை பஞ்சாயத்து பேசிய அனைவரும் சமமாக பிரித்துக் கொள்வர். குற்றம் சுமத்தப்பட்டு தீர்ப்பு வராமல் பஞ்சாயத்தில் பங்கு கொண்டால் அவர்களுக்கு 25 காசுகள் குறைத்து வழங்கப்படும்.

மயில் நிலை அடைந்தால் தண்டம் கட்டி சமூகத்திற்குள் சேரும் வரை அவரிடம் யாரும் பேசவதோ, பழகுவதோ இல்லை. இவர்களிடம் ஒதுக்கி வைப்பதே அதிகபட்ச தண்டனையாக உள்ளது. மயில் பட்டம் பெற்ற மற்ற பஞ்சாயத்தில் பங்குபெறும் அனுமதி இல்லை. மயில் பட்டம் கொடுத்து ஒதுக்கி வைக்க சில முக்கிய காரணங்கள்:

  • தாழ்த்தப்பட்ட சாதியினர், முஸ்லிமிடம் உணவு பெறுதல்
  • மயிலாக அறிவிக்கப்பட்டவருடன் பழகுதல்
  • இன்னொரு குடும்பத்தாரின் பாயில் படுத்தல்
  • பிறர் மனைவியை நாடுதல்
  • தங்கியிருக்கும் கூடாரத்திற்கு பெண்கள் இரவு உணவுக்குள் திரும்பாதிருத்தல் அல்லது இரவு முகாமிற்கு வராமல் கழித்தல்
  • சமூக தகராறில் செருப்பால் அடித்தல்
  • பஞ்சாயத்து கூறும் இறுதிக் கெடுவுக்குள் தண்டம் கட்டாமல் இருத்தல்.

சண்டையின் போது வழக்காளிகள் செய்யும் தவறுக்கு ஏற்ப அபராதமும் விதிக்கப்படும். அதன் பட்டியல்,

1 சண்டை வாய் தகராறாக மாறினால் ரூ. 6.00
2 சண்டையின் போது தகாத வார்த்தையில் பேசினால் அல்லது தகாத பொருளை எடுத்து சண்டையிட்டால்
  • செருப்பு என்னும் சொல்லை பயன்படுதினால்
  • செருப்பை கையில் எடுத்து மிரட்டினால்/அடித்தால்
  • துடைப்பம் என்னும் சொல்லைப் பயன்படுத்தினால்
  • துடைப்பத்தை கையால் எடுத்து அடித்தால்
  • அறுவாள் போன்ற ஆயுதத்தை கையில் எடுத்தால்
  • கொடுவா/கத்தி போன்ற பெரிய இரும்பு ஆயுதத்தை பயன்படுத்தினால்
  • தோல் பொருட்களைக் (பெல்ட், சாட்டை) கையில் எடுத்து மிரட்டினால்
  • கட்டையால் அடிக்க முயன்றால்
ரூ. 12.00


ரூ. 24.00


ரூ. 6.00

ரூ. 12.00


ரூ. 12.00


ரூ. 24.00


ரூ. 24.00


ரூ. 24.00


சண்டையிட்டவர்களை வெற்றிலை, பாக்கு கொண்டு ராசியாக செய்தல், கள்/சாராயம் கொடுத்து ராசியாதல், டீ குடித்து ராசியாதல் போன்ற பல நடைமுறைகளையும் பஞ்சாயத்தில் கொண்டுள்ளனர்.

பஞ்சாயத்து மூலமாக மட்டுமல்லாமல் மக்களின் சமய நம்பிக்கை வாயிலாகவும் சண்டைகள் தீர்க்கப்படுகின்றன. கோவிலில் கற்பூரம் எரித்து சத்தியம் செய்தல், குழந்தையை தரையில் வைத்து நான் சொல்வது உண்மை எனத் தாண்டுதல், தாய்/குழந்தையின் மேல் சத்தியம் செய்தல் போன்ற வகையில் சண்டைகள் தீர்க்கப்படுகின்றன.

மேலும் அவமானப்படுத்துதல் வழியாகவும் இது நிகழ்கிறது. ஒரு கடனைப் பெற்று குறிப்பிட்ட காலத்துள் திருப்பி தராமல் விட்டால் முதல் கட்டமாக கடன் பெற்றவரின் செருப்பில் தண்ணீர் ஊற்றுவார். இது தலை முழுகுவதின் குறியீடு. கொடுத்த கடனை தலை முழுக வேண்டுமா என வினவுதாகப் பொருள் கொள்வர். அடுத்த கட்டமாக செருப்பு ஒன்றை மரத்தில் ஆணி அடித்து தொங்கவிடுவார். செருப்பை தொங்கவிட்டால் தீட்டாக கருதுவர். அதன்பின்னும் கொடுக்கவில்லை என்றால் அவரைப் பஞ்சாயத்தில் சேர்த்துக் கொள்ளவதில்லை. பஞ்சாயத்தில் பங்குபெறுவதால் கிடைக்கும் தொகையை இழப்பார். இதன் பின்னும் தரவில்லை என்றால் கருப்பு நாய் ஒன்றைக் காதறுத்து அவர் வீட்டின் முன் கட்டி வைப்பார். இதன் பின்னும் தரவில்லை என்றால் சமூக அவரை பஞ்சாயத்தில் மயில் என அறிவித்து ஒதுக்கி வைப்பர்.

வேறு பெயர்கள்

குடுகுடுப்பை நாயக்கர்கள் தொட்டிய நாயக்கர், காட்டுத் தொட்டியர், ஜாம கோடங்கி, கோடங்கி நாயக்கர், குடுகுடுப்பைத் தொட்டியர், கம்பளத்தார் என இடங்களுக்கு தகுந்தார் போல் அழைக்கப்படுகின்றனர். ஆனால் குடுகுடுப்பை நாயக்கர்கள் தங்களை காட்டு நாயக்கர்கள் என்றே அழைக்க விரும்புகின்றனர். இவர்களின் சங்கம் காட்டு நாயக்கரகள் என்ற பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காட்டு நாயக்கர்கள் எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் வேறு சில சமூகங்களும் உள்ளன. பன்றி வளர்த்து வாழும் ஜோகிகள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் தங்களை காட்டு நாயக்கர் என்றே குறிப்பிடுகின்றனர். தமிழக, கேரளப் பகுதியில் காட்டு நாயக்கர் என்ற பூர்வப் பழங்குடியும் உள்ளது.

குடுகுடுப்பை நாயக்கர்கள் அரசு ஆவணத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் பல பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். பொ.யு. 1901-ம் ஆண்டு குடிமதிப்பில், பிரான்சிஸ் குறிப்பிடும் போது “தஞ்சை மாவட்டத் தொட்டியன்கள்/கம்பளத்தான்கள் என்று கூறப்படுபவர்கள் நாடோடிகளாக அலைந்து திரிந்து வாழ்கின்றனர். இவர்களே திருநெல்வேலி மாவட்டத்தில் காட்டுத் தொட்டியன்கள் என்று கூறப்படுகின்றனர்” என்கிறார். பொ.யு. 1891 குடிமதிப்பில் ஸ்டூவர்ட் தொட்டியன் அல்லது கம்பளத்தார்கள் என்று பதிவு செய்துள்ளார். பொ.யு. 1901-ம் ஆண்டு திருச்சி மாவட்டக் குடிமதிப்பில் ஹெமிங்வே குடுகுடுப்பைத் தொட்டியன்கள் எனப் பதிவு செய்துள்ளார். இவ்வாறு தமிழகத்தின் வெவ்வேறு மாகாணத்தில் எழுதப்பட்ட குடிமதிப்பில் குடுகுடுப்பை நாயக்கர்களுக்கு பலப் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

உசாத்துணை

  • தமிழகத்தில் நாடோடிகள் சங்ககாலம் முதல் சமகாலம் வரை - பக்தவத்சல பாரதி (குடுகுடுப்பை நாயக்கர் பதிவின் ஆசிரியர், பதிப்பாசிரியர்)

வெளி இணைப்புகள்


✅Finalised Page