under review

குடுகுடுப்பை அடித்தல்

From Tamil Wiki
Kudukudupai nayakkar2.jpg

குடுகுடுப்பை அடித்தல் குடுகுடுப்பை நாயக்கர் சமூகத்தின் குலத்தொழில். நடு சாமத்தில் குடுகுடுப்பை அடித்துக் கொண்டு குறி சொல்வர். ஒவ்வொரு ஆண்டும் அறுவடை மாதங்களான தை, மாசி, பங்குனி மாதங்களில் இரவில் குடுகுடுப்பை அடித்து குறிச் சொல்வது, பகலில் வந்து நெல் யாசகம் பெறுவது இவர்களின் வழக்கம்.

பார்க்க: குடுகுடுப்பை நாயக்கர்

தொழில் முறை

குடுகுடுப்பை நாயக்கர் சமூகத்தை சேர்ந்த சாமக் கோடாங்கிகள் நடு இரவில் குடுகுடுப்பை அடித்துக் குறிச் சொல்வதை தொழிலாகக் கொண்டவர்கள். ஒவ்வொரு குடும்பமும் தங்களின் உரிமையுள்ள கிராமத்தில் கூடாரம் அமைத்து பணியை மேற் கொள்வர். இந்த உரிமைக் கிராமங்கள் மரபு வழியாக வருவது. சில குடும்பங்களுக்கு 50 - 60 கிராமங்களும், சிலருக்கு 15 - 20 கிராமங்களும் இருக்கும். வாரிசு இல்லாத குடும்பங்களில் உறவினர்களுக்கு உரிமையை எழுதி வைப்பர். காசில்லாத சூழ்நிலையில் உரிமைக் கிராமங்களை மற்றவருக்கு எழுதி வைப்பதோ, அடமானம் வைப்பதோ செய்வர். அவ்வாறு அடமானம் வைக்கும் போது வாங்கும் நபரை உரிமைக் கிராமத்திற்கு அழைத்துச் சென்று இனிமேல் இவர் தான் குடுகுடுப்பை அடிப்பார் என அறிமுகம் செய்வர்.

குடுகுடுப்பை அடிக்க இரவில் சகுனம் கிடைக்கும் வரை காத்திருப்பர். நல்ல சகுனம் கிடைத்தால் மட்டுமே கிளம்புவர். முதலில் சுடுகாட்டிற்குச் சென்று நடு இரவு பன்னிரெண்டு மணியளவில் ஜக்கம்மாவையும், பிற தெய்வங்களையும் அழைத்து அருள் பெறுவர். அருள் கிடைத்ததும் கிராமத்தின் எல்லையில் நின்று குடுகுடுப்பை அடித்து தன் வருகையை தெரிவிப்பார். பொதுவாக ஒரு ஆண் மட்டுமே குறி சொல்லச் செல்வார். இரவு 12:30, 1 மணி வாக்கில் குறி சொல்லும் நபர் ஒவ்வொரு வீடாகச் சென்று குடுகுடுப்பை அடித்துக் குறி சொல்வார். அதிகாலை மூன்று மணியோடு குறி சொல்வதை நிறுத்திக் கொள்வார். அதற்கு மேல் சொல்லும் குறி பலிக்காது என்ற நம்பிக்கையும் இவர்களிடத்தில் உள்ளது.

கிராமத்திற்குள் சென்று ஒரு வீட்டின் முன் நின்று அக்குடும்பத்தின் கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் மூன்றையும் சொல்வார். வீட்டிலிருப்பவர்கள் ஜன்னலருகிலோ, வீட்டின் கதவோரமோ வந்து நின்று குறி சொல்வதைக் கேட்பர். சாமக் கோடாங்கி ஒரு இரவில் 10 முதல் 15 வீடு வரை குறி சொல்வதுண்டு.

சாமிக் கோடாங்கி குறி சொல்வதில் சில தர்க்க ஒழுங்குகளைப் பின்பற்றுவார். ஒரே கிராமத்தில் பல ஆண்டுகள் வாழ்வதால் அங்குள்ளவர்களைப் பற்றி பெருமளவு தெரிந்திருக்கும். குடுகுடுப்பை அடித்துக் கொண்டு அருள் வாக்கு சொல்லத் துவங்கும் போது வீட்டை உற்று நோக்குவார், வீட்டுக்கருகில் உள்ள மாட்டுக் கொட்டகையை பார்ப்பார், வைக்கோல் போர் எவ்வளவு உள்ளது எனப் பார்ப்பார், உழவு மாட்டின் எண்ணிக்கையை நோக்குவார். வண்டிகளைப் பார்ப்பார், வீட்டைச் சுற்றியுள்ள செடி, கொடி, மரம் எனக் கவனித்து அதற்கேற்ப பொது பலன்களைக் கூறுவார். அதில் ஆர்வமூட்டும் செய்திகளும், வருங்காலத்தைப் பற்றிய செய்திகளும் இருக்கும். இவை தவிர அருள் நிலையிலும் சில தகவலகளைக் கூறுவார். இறுதியில் ஜக்கம்மா அருள்பாலிப்பாள் என்று வாக்குச் சொல்லி அடுத்த வீட்டிற்குச் செல்வார்.

மறுநாள் காலை ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து குடுகுடுப்பை அடித்த வீட்டிற்குச் செல்வர். அவர்களுக்கு வீட்டில் அறுவடை செய்த நெல், தானியங்கள் ஒரு படி கொடுப்பர். பின் இரவு குறி சொல்லலில் உள்ள ஐயங்களைக் கேட்டுத் தெளிவர். குடும்ப நடப்புகளைப் பற்றிச் சொல்லி பலனும் கேட்பர். அதற்குக் குடுகுடுப்பை நாயக்கர் கைரேகைப் பார்த்து மேலும் விளக்கம் கூறுவார். கை ரேகை பார்க்கும் போதும், சுவடி பார்க்கும் போது தீய தோஷங்கள் தெரிந்தால் அதற்கு தோஷம் தீர்க்கும் பரிகாரங்களைச் சொல்வர்.

கோடாங்கியின் கூடாரம்

உரிமைக் கிராமத்திற்கு வெளியில் தோப்பு, கோவில், பொதுவிடங்களில் கூடாரம் அமைப்பர். கூடாரம் அமைத்து அதனை வீடாக்க 2, 3 நாட்கள் எடுத்துக் கொள்வார். முன்னரே அடுப்பு கூட்டியிருந்தால் அதன் இடத்தை மாற்றுவர். அங்குள்ள கற்களை நீர் தெளித்து இடம் மாற்றி வைப்பர். அடுப்பை இடம் மாற்றி அமைத்ததும் கூடாரத்தை தங்கள் வாழ்விடமாக மாற்றிக் கொள்வர்.

உசாத்துணை

  • தமிழகத்தில் நாடோடிகள் சங்ககாலம் முதல் சமகாலம் வரை - பக்தவத்சல பாரதி (குடுகுடுப்பை நாயக்கர் பதிவின் ஆசிரியர், பதிப்பாசிரியர்)


✅Finalised Page