under review

பகல் வேடம் (நிகழ்த்துக்கலை)

From Tamil Wiki
பகல் வேஷம்.jpg

பகல்வேடம் :பகல் வேளையில் நிகழ்த்தப்படும் கலையாதலால் இதனை பகல் வேடம் அல்லது பல வேடம் என்றழைக்கின்றனர். பல வேடங்களைப் புனைந்து ஆடுவதால் இதனை பொது மக்கள் பல வேடம் என்கின்றனர். இது ஒரு நடமாடும் அரங்குக் கலை. மதுரை நாயக்கர்கள் தமிழகம் வந்த போது பகல் வேடக் கலைஞர்கள் அவர்களுடன் வந்தனர் என்ற கருத்து உள்ளது.

வரலாறு

பகல் வேடம் கலை நிகழ்த்தும் ஜங்கம பண்டாரம் சாதியினர் நாயக்க மன்னர்கள் தமிழகம் வந்த போது அவர்களுடன் வந்து குடியேறியவர்கள். பகல் வேடம் நிகழ்த்துக்கலை தமிழகத்தில் பொ.யு. 15-ம் நூற்றாண்டிற்கு பின்னரே வழக்கில் இருந்தது. ஆந்திரா மாநிலத்தில் பொ.யு. 13-ம் நூற்றாண்டிற்கு முன்னர் இக்கலை நிகழ்ந்ததற்கு தெலுங்கு இலக்கிய சான்றுகள் கிடைக்கின்றன. நாயக்க மன்னர்கள் ஜங்கம பண்டாரங்களை ஒற்று வேலைகளுக்கு பயன்படுத்தினர். அதற்காக அவர்களுக்கு வல்லம் பகுதியில் மானியங்கள் வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் தற்போது இருபத்தைந்திற்கும் மேற்பட்ட குழுக்கள் உள்ளனர். ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்து கலை நிகழ்த்தி செல்பவர்களும் உள்ளனர்.

ஆந்திராவில் மூன்று முதல் நான்கு மணி நேரம் இசை நாடகத்தோடு நிகழ்ந்த பகடி வேஷம் தமிழகத்திற்கு வந்த போது பல மாற்றங்கள் கண்டு வீதியில் நடக்கும் பகல் வேடமானது. இன்று கடைகள், வீடுகள் வழியாக ஒரு கதையின் சிறு கூறினை மட்டும் நடித்துக் காட்டி பாடிச் செல்லும் முறையிலேயே பகல் வேடம் உள்ளது. நாயக்க மன்னர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்ததும் மாராட்டிய மன்னர்களின் ஆதரவில்லாமல் ஆனதால் இக்கலை நலிவடைந்தது.

நடைபெறும் முறை

பகல் வேடம்

இக்கலை கோவில் அல்லது சடங்குகளுடன் தொடர்பில்லாதது. எனவே இது சமூகச் சார்புக்கலை. ஊரின் தன்மையைப் பொறுத்து இக்கலை நிகழ்த்தப்படும் நாட்கள் தீர்மானிக்கப்படுகிறது. சிறிய ஊராக இருந்தால் ஐந்து முதல் பத்து நாட்கள் வரையிலும், பெரிய ஊராக இருந்தால் இருபது முதல் முப்பது நாட்கள் வரையிலும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. பொதுவாக இது ஞாயிறுக்கிழமை நிகழ்த்தப்படுவதில்லை. ஊரின் தன்மை, ஊர் மக்களின் ஆர்வம் இவற்றை பொறுத்து கதை நிகழ்த்தப்படும் நேரம் அமையும். காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை இக்கலை நிகழும். இடையில் நண்பகல் வேளையில் கலைஞர்கள் ஓய்வெடுத்துக் கொள்வர்.

இக்கலையை ஆண்கள் மட்டும் நிகழ்த்துக்கின்றனர். பெண் வேடங்களையும் ஆண்களே புனைகின்றனர். இந்நிகழ்த்துக் கலையில் பங்கு பெறும் கலைஞர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டுக் கூற முடியாது.

புராண இதிகாசக் கதைகளும், இனச் சார்புக் கதைகளும் பகல் வேடக் கலையின் பாடுபொருள். மக்கள் பெரும்பாலும் அறிந்த புராணக் கதைகளையே கலைஞர்கள் நிகழ்த்துக்கின்றனர். மேலும் சிதம்பரம் தீட்சதர் பட்டாச்சாரி கதை, மடாதிபதிச் சாமியார், ராஜா மந்திரி கதை ஆகியனவும் நடிக்கப்படுகின்றன. இந்தக் கதைகளில் எதாவது ஒரு நீதியை முக்கியத்துவப்படுத்திப் பேசுகின்றனர். வாழ்க்கை நெறியை எடுத்துரைக்கும் கதை மடாதிபதிச் சாமியார் கதை, ராஜாவின் மடமைச் செயலைச் சொல்லும் கதை ராஜா மந்திரி கதை. இனச் சார்புக் கதைகளாக ராவுத்தர் கதை, வெட்டியான் கதை ஆகியவற்றைக் கூறலாம். இசுலாமியர்கள் அதிகம் உள்ள பகுதியில் ராவுத்தர் கதையும், ஒடுக்கப்பட்ட மக்கள் நிறைந்த பகுதியில் வெட்டியான் கதையும் நிகழ்த்துகின்றனர். இந்த கதைகளில் சில அறக் கருத்துகள் கூறப்படுகின்றன. தமிழ் இலக்கிய தொடர்புடைய அப்பர், சம்பந்தர், சுந்தரர், ஞானசம்பந்தர் ஆகியவர்களின் வரலாறுகளும் இக்கலையில் நிகழ்த்தப்படுகின்றன. குறவன், குறத்தி கதையும் அண்மைக் காலமாக நிகழ்த்தப்படுகின்றன.

இக்கலை உரையாடலும், பாடலும் கலந்து நிகழ்த்தப்படும் கலை. பாடல்கள் இசையுடன் பாடப்படும். பாடல்கள் பல்லவி, அனுபல்லவி, சரணம் போன்ற அமைப்புடையவை.

குறிப்பிட்ட ஊரில் பகல் வேஷம் நிகழப் போகிறது என நோட்டீஸ் வினியோகித்து அறிவிக்கின்றனர். ஊரில் குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்து அங்கிருந்து தொடங்கி அடுத்த பகுதிக்குக் கதை நிகழ்த்திச் செல்வர். ஒரு இடத்தில் சொல்லப்பட்ட கதையின் தொடர்ச்சியே அடுத்த இடத்தில் சொல்லப்பட்டாலும் பார்வையாளர்கள் கதையின் போக்கினைப் புரிந்துக் கொள்வர்.

பகல் வேஷக் கலைஞர்கள் பல ஊர்களில் பிரிந்து வாழ்ந்தாலும், பல குழுக்களாக பிரிந்து ஊர் ஊராகச் சென்று கலை நிகழ்த்துக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட குழு குறிப்பிட்ட ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதையும் அவர்களுக்குள்ளாகவே முடிவு செய்துக் கொள்கின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ஊரில் என முடிவு செய்து, கலை நிகழ்த்தும் ஊரிலேயே தங்குகின்றனர்.

இக்கலையின் பார்வையாளர்கள் வீதியில் நிற்பவர்கள், செல்பவர்கள், கடைக்காரர்கள். இவர்கள் யாவரும் முழு நேரமும் கலையை ரசித்து பார்ப்பதில்லை. இக்கலையின் பார்வையாளர்கள் துண்டு துண்டாக இதனைக் கேட்டாலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக இக்கதைகளைக் கேட்டு வருவதால் கதையைப் புரிந்து கொள்வதில் இவர்களுக்குச் சிரமம் ஏற்படுவதில்லை.

ஒரு ஊரில் கலை நிகழ்ச்சியை நடத்திவிட்டு அதற்கான அன்பளிப்பைத் தொகையைக் கலைஞர்கள் உடனே பெறுவதில்லை. அந்த ஊரில் திட்டமிட்டபடி நிகழ்ச்சிகளை ஆண்டு முழுவதும் நிகழ்த்தி கதை மொத்தமும் முடிந்த பின் இறுதி நாளுக்கு அடுத்த நாளிலிருந்து வசூலுக்குச் செல்கின்றனர். அனுமன் வேடம் கட்டியவரும், இசைக்கருவி இசைப்பவரும் வசூலுக்குச் செல்வர். இருவரில் ஒருவர் நோட்டில் அன்பளிப்புக் கொடுப்பவரிடம் பெயரை எழுதி வாங்கிக் கொள்வார். இறுதியில் மொத்தமாக கிடைக்கும் பணத்தைக் குழுவில் பங்கு வைத்துக் கொள்வர்.

ஒரு காலத்தில் ஆண்டு முழுவதும் நிகழ்ந்த இக்கலை பின் நாட்களில் கலைஞர்கள் இக்கலையை மட்டும் நம்பி வாழ முடியாத காரணத்தால் பெரும்பாலும் விவசாயக் கூலிகளாகச் செல்லத் தொடங்கினர். அதனால் இவர்கள் பகுதி நேரக் கலைஞர்களாக வாழ்கின்றனர். சுமார் இருபத்தைந்து குழுக்கள் இக்கலையை நிகழ்த்துகின்றனர்.

நிகழ்த்துபவர்கள்

இக்கலையை நிகழ்த்துபவர்கள் ஒரு குழுவாக தங்கி ஒரு ஊரில் நிகழ்த்த திட்டமிட்ட கதைகளை நிகழ்த்துகின்றனர். இவர்கள் பல ஊர்களில் பிரிந்து வாழ்ந்தாலும் பல குழுக்களில் பிரிந்து ஊர் ஊராகச் சென்று கலை நிகழ்த்துகின்றனர். ஒரு குறிப்பிட்ட குழு குறிப்பிட்ட ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதையும் அவர்களே முடிவு செய்து கொள்கின்றனர்.

அலங்காரம்

கதையின் தன்மை, பாத்திரங்களைப் பொறுத்து பகல் வேடக் கலைக்குரிய ஒப்பனை அமைகிறது. பரமசிவன், பார்வதி, அப்பர், சம்பந்தர் போன்ற கதைப் பாத்திரங்களைப் போல் ஒப்பனை செய்து கொள்வர். இவர்கள் காலை எட்டு மணிக்கே ஒப்பனை செய்யத் தொடங்கிவிடுவர். ஒப்பனை செய்வதற்கு முன் விரும்பிய தெய்வத்தை வணங்க வேண்டும் என்னும் நியதி உள்ளது. ஒப்பனை செய்ய குழுக்குள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துக் கொள்கின்றனர். ஒப்பனை செய்யும் போது அன்றைய தினத்திற்கான கதையை மனதிற்குள் பாடுவர். காலை பத்து மணிக்கு தொடங்கி மாலை வரை சிறிய இடைவேளை இன்றி நிகழ்வதால் இவர்கள் காலையில் செய்த ஒப்பனையை மாலை வரை கலைப்பதில்லை.

இசைக்கருவிகள்

  • ஜால்ரா
  • மிருதங்கம்
  • ஹார்மோனியம்
  • கஞ்சிரா
  • கட்டை

இதில் பெரும்பாலும் துணைப் பாத்திரங்கள் ஜால்ரா, கஞ்சிரா கருவிகளை இசைக்கின்றனர்.

நிகழும் ஊர்கள்

பகல் வேடக் கலைஞர்கள் தென் ஆற்காடு மாவட்டத்தில் மதுரவயிரம் பேட்டை, வேங்கை ஆண்டார் குப்பம், தர்க்காய், ஓமந்தூர் ஆகிய ஊர்களிலும், திண்டிவனத்தை அடுத்த பகுதிகளிலும் வாழ்கின்றனர். இக்கலை இவர்களால் தமிழகம் முழுவதும் பரவலாக நிகழ்த்தப்படுகிறது. குறிப்பாக தஞ்சாவூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, கோயமுத்தூர், ஈரோடு, சிவகங்கை, மதுரை, விருதுநகர், செங்கல்பட்டு ஆகிய பதினொரு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் ஆண்டுதோறும் நிகழ்கிறது.

ஒரு காலத்தில் தஞ்சை பகுதியில் மட்டும் இது நிகழ்ந்தது என்றும் பின்பு மற்ற இடங்களுக்குப் பரவியது என்றும் கூறுகின்றனர். இக்கலையை நிகழ்த்தும் கலைஞர்கள் மதுரை நாயக்கர்கள் தமிழகம் வந்த போது உடன் வந்தனர் என்ற கருத்து உள்ளது. மதுரை நாயக்கர்கள் திருச்சியை தலைமை இடமாக மாற்றிய போது இக்கலைஞர்கள் திருச்சி, தஞ்சாவூர் பகுதியில் குடிப்பெயர்ந்தனர். இக்கலை 250 முதல் 300 ஆண்டுகள் பழமையுடையது.

இக்கலையை நிகழ்த்துவோர் தெலுங்கிலும் கதை நிகழ்த்துகின்றனர். ஆந்திரக் கலைஞர்களும் இக்கலையை நிகழ்த்துகின்றனர்.

நிகழ்த்தும் சாதிகள்

இக்கலைஞர்கள் அரசு ஆவணப்படி சங்கம பண்டார சாதியினர். எனினும் இவர்கள் தாங்கள் கலை நிகழ்த்தும் ஊர்களுக்கு ஏற்பத் தங்களைக் குல்லுக் கவர நாயுடு, பலிங்க நாயுடு, லிங்காயத்து நாயுடு என்று சொல்லிக் கொள்கின்றனர்.

இவர்கள் சிவனை முழுமுதற் கடவுளாகவும், வீரபத்திரனைக் குலத்தெய்வமாகவும் வணங்குகின்றனர்.

நடைபெறும் இடம்

பகல் வேஷம் கலை நிகழ்த்தப்படுவதற்குரிய இடம் பற்றிய வரையறை இல்லை. ஊரின் எல்லாப் பகுதியிலும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. குறிப்பாக பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும், கடை வீதிகளிலும், ஒரு குறிப்பிட்ட வீட்டின் முன்பாகவும் இக்கலை நிகழ்த்தப்படுகிறது.

உதாரணக் கதை

பகல் வேடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கதை நிகழ்ச்சி பெருமளவு தத்துவார்த்த விவாதமாக நிகழ்கிறது. இதில் அர்த்தநாரீஸ்வரர், பக்தன் என இருவர் பங்கு கொள்கின்றனர். இருவரும் சேர்ந்து துதிப்பாடலைப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்குகின்றனர்.

பின் பக்தன் அர்த்தநாரீஸ்வரரிடம், "சுவாமி நீங்கள் யார்?" எனக் கேட்பான். அவர் புராணக் கதைகளில் சிவனின் பங்கு குறித்த செய்திகளைச் சொல்வார். இறுதியில் தமது ஒரு பகுதியில் தேவி இருப்பதைக் காட்டி இணக்கம் கூறுவார். பின் அவர் தொடந்து கதை, தத்துவம் என உரையாடுவார்.

உசாத்துணை

  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள்

வெளி இணைப்புகள்

காணொளி


✅Finalised Page