குங்குமம் (மகளிர் இதழ்)
- குங்குமம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: குங்குமம் (பெயர் பட்டியல்)
குங்குமம் (1948), மகளிருக்காக வெளிவந்த மாத இதழ். இதன் ஆசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் எஸ். விசாலாக்ஷி.
வெளியீடு
மங்கை உள்ளிட்ட இதழ்கள் மகளிருக்காக வெளிவந்து வரவேற்புப் பெற்றதைத் தொடர்ந்து எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான எஸ். விசாலாக்ஷியை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளராகக் கொண்டு, நவம்பர், 1948-ல் தொடங்கப்பட்ட மகளிர் மாத இதழ் குங்குமம். டி.வி. ராம்நாத்தின் ராம்நாத் அச்சகத்தில் குங்குமம் இதழ் அச்சடிக்கப்பட்டு வெளியானது.
ஆசிரியர் குறிப்பு
எஸ். விசாலாக்ஷி, எழுத்தாளரும், இதழாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சங்கு சுப்பிரமணியத்தின் சகோதரி. குறிப்பிடத்தகுந்த பல சிறுகதைகளை எழுதியிருக்கும் விசாலாக்ஷி மொழிபெயர்ப்பாளரும் கூட. ஃப்ரெஞ்ச் மற்றும் ஆங்கிலக் கதாசிரியர்கள் சிலரது நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். தமிழக எழுத்தாளர் சங்கத்திலும் முக்கியப் பொறுப்பு வகித்த விசாலாக்ஷி, குகப்ரியைக்குப் பின் சில காலம் மங்கை இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
இதழ் அமைப்பு
குங்குமம் இதழின் முகப்பு அட்டையில் இரண்டு குங்குமச் சிமிழ்களின் இடையில் ‘குங்குமம்’ எனும் இதழின் பெயர் இடம்பெற்றது. “பெண்களுக்குச் சேவை செய்வதே குங்குமத்தின் முக்கிய நோக்கம்” என்ற குறிப்பு இதழின் உள்ளடக்கப் பக்கத்தில் இடம்பெற்றது. ஓவியங்களும், ஒளிப்படங்களும் முகப்பு அட்டையில் இடம்பெற்றன. ஆங்கில மாதத்திற்குப் பதிலாக தமிழ் மாதத்தையே குங்குமம் இதழ் பின்பற்றியது. இதழின் ஆண்டினைக் குறிக்க ‘சிமிழ்’ என்பதையும், மாதத்தைக் குறிக்க ‘திலகம்’ என்பதையும் பயன்படுத்தியது. எட்டணா விலையில் நூறு பக்கங்களுடன் இதழ் வெளிவந்தது. இதழின் ஒரு வருடச் சந்தா: 6/- ரூபாய். இரண்டு வருடச் சந்தா: 11/- ரூபாய். ஆயுள்சந்தா 100/- ரூபாய்.
குங்குமம் இதழில், ”டைரக்டர் ஆஃப் பப்ளிக் இன்ஸ்ட்ரக்ஷன் அவர்களால் காலேஜுகளுக்கும் பள்ளிக்கூடங்களும் சிபார்சு செய்யப்பட்டிருக்கிறது” என்ற குறிப்பு இடம் பெற்றது.
உள்ளடக்கம்
குங்குமம் இதழில் பெண்களுக்கான பக்கங்கள், பார்லிமெண்ட், கேள்வி-பதில், அழகுக் குறிப்புகள், சமையல் பகுதி, கடிதங்கள், சிறுவர் பகுதி ஆகியன இடம்பெற்றன. சிறுகதைகள், கட்டுரைகள், இசைப் பாடல்கள், கர்நாடக சங்கீதப் பாடல்களின் ஸ்வரக் குறிப்புகள், துணுக்குகள் போன்றவற்றுக்கும் குங்குமம் இதழ் இடமளித்தது. கல்வி, சுகாதாரம், உள்நாட்டு, வெளிநாட்டுச் செய்திகள், துணுக்குகள், இசை மற்றும் இசைக் கலைஞர்களின் வரலாறுகள், பெண்களின் சமூக அந்தஸ்து, மருத்துவக் குறிப்புகள் போன்றவை பற்றிய செய்திகள் வெளிவந்தன. பெண்களின் உரையாடல் பகுதி ‘பெண்கள் பார்லிமெண்ட்’ என்ற தலைப்பில் வெளியானது. சிறுகதை மற்றும் உரையாடல் வடிவிலான ’நடைச்சித்திரம்’ பகுதி வெளியானது. நாடகங்களும் அவ்வப்போது வெளியாகின. புத்தகங்கள் பற்றிய அறிமுகங்களும், விமர்சனங்களும் வெளிவந்தன. கேள்வி - பதில் பகுதி இடம்பெற்றது. திரைப்பட விமர்சனங்களும் வெளியாகின. குங்குமம் இதழில் மிக அதிக அளவில் பல்வேறு வகையிலான விளம்பரங்கள் இடம்பெற்றன.
பங்களிப்பாளர்கள்
- ஸ்ரீமதி பாலாம்பிகை
- ஸ்ரீமதி என். பத்மா
- ஸ்ரீமதி செம்பகமணி
- ஸ்ரீமதி வே. சாரதா
- ஸ்ரீமதி விசாலாக்ஷி சுப்ரமணியம்
- ஸ்ரீமதி ராஜம் நரஸிம்மன்
- ஸ்ரீமதி வி. ராமன்
- ஸ்ரீமதி சௌ. தூரி
- வை. செல்லம்மாள்
- கல்பனா
- குமாரி சியாமளா
- மா. லக்ஷ்மி அம்மாள்
- மாலினி
- ஸ்ரீமதி ஜானகி கிருஷ்ணன்
- த.ந. ஸ்ரீ. ராகவாச்சாரி
- ருக்மணி எஸ்.வி. ராஜகோபாலன்
- டர்பன் திருமதி சா.மு. பிள்ளை
- ஸ்ரீமதி சுந்தரம்மாள் ராகவாச்சாரி
- சங்கு சுப்ரமணியன்
- எஸ். கணபதி சுப்ரமண்யம்
- டி. வி. சீதாராமய்யர்
- திருப்புகழ் மணி
- சாது ஸ்ரீ முருகதாஸ்
- ஸ்ரீ டி. பார்த்தசாரதி டி.டி.எஸ்.
- காரமடை கே. நஞ்சயன்
இதழ் நிறுத்தம்
குங்குமம் இதழ் எவ்வளவு காலம் வெளியானது, எப்போது நின்று போனது போன்ற விவரங்களை அறிய இயலவில்லை.
ஆவணம்
குங்குமம் இதழின் சில பிரதிகள் தமிழ் இணையக் கல்விக் கழக நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.
மதிப்பீடு
குங்குமம் இதழ், விடுதலைக்குப் பின் தமிழில் வெளிவந்த மகளிர் இதழ்களுள் குறிப்பிடத்தகுந்த ஓரிதழாக அறியப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Jun-2024, 18:44:26 IST