under review

கி.வா.ஜ. பதில்கள்

From Tamil Wiki
கி.வா.ஜ. பதில்கள் (மூன்று பாகங்கள்)

கி.வா.ஜ. பதில்கள் (2003), கி.வா.ஜகந்நாதன், கலைமகள் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், அவ்விதழில் எழுதிய பல்வேறு கேள்வி பதிகளின் தொகுப்பு. இந்நூலில் 2016 கேள்வி – பதில்கள் இடம்பெற்றுள்ளன.

பிரசுரம், வெளியீடு

கி.வா.ஜ. பதில்கள் மூன்று பாகங்கள் கொண்டது. இந்நூலை அல்லயன்ஸ் பதிப்பகம், 2003-ல் வெளியிட்டது.

நூல் அமைப்பு

கி.வா. ஜகந்நாதன் எழுதி ஏற்கனவே வெளிவந்த விடையவன் விடைகள், விடைகள் ஆயிரம் இவற்றுடன் கி.வா.ஜ. அளித்த தனிக் கேள்வி பதில்களும் இணைந்த முழுத் தொகுப்பே கி.வா.ஜ. பதில்கள் நூல். இந்நூல் பல்வகை, இலக்கண, இலக்கியம், சமயம் என்ற பிரிவுகளில் அமைந்துள்ளது.

கி.வா.ஜ. பதில்கள் நூலில் கேள்விகள் அகர வரிசைப்படித் தொகுக்கப்பட்டுள்ளன.

நூலில் இருந்து சில கேள்வி – பதில்கள்

கேள்வி: அக்கமணி என்று ருத்திராட்சத்தைக் கூறுவதற்குக் காரணம் என்ன?
பதில்: அட்சமணி என்பதே அக்கமணி ஆயிற்று. சிவபெருமானுடைய கண்ணிலிருந்து துளித்த நீர் ருத்திராட்சமாயிற்று. அட்சம் - கண். ருத்திரனது கண்ணிலிருந்து தோன்றியதாதலின் ருத்திராட்சம் எனப் பெயர் பெற்றது. அதையே அட்சமணி என்பர்.

கேள்வி: வங்கக் கடல் கடைந்த மாதவனை' என்று ஆண்டாள் பாடியது வங்காளக் குடாக் கடலைக் குறிப்பதா?
பதில்: வங்கம் என்பது கப்பலைக் குறிக்கும் சொல். கப்பல் ஓடும் கடல் என்று பொருள் கொள்ள வேண்டும்.

கேள்வி: ‘லாயக்கு’ என்பது தமிழா, அல்லது வேறு மொழியா? அதன் பொருள் என்ன?
பதில்: தக்கது என்னும் பொருளில் வழங்கும் அந்தச் சொல் உருதுவிலிருந்து வந்தது.

கேள்வி: வகையரா என்ற சொல் வகை என்பதிலிருந்து பிறந்ததா?
பதில்: முதலியவை என்ற பொருளை உடைய உருதுச் சொல் அது.

கேள்வி: அக்கினிக்கு எழுநா என்ற பெயர் வந்ததற்குக் காரணம் என்ன?
பதில்: அக்கினிக்கு ஏழுநாக்கு அல்லது ஏழு ஜ்வாலைகள் உண்டென்று சொல்வார்கள். அதனால் ‘எழு நா’ என்று பெயர் வந்தது. ஏழு நாக்கை உடையது என்று அன்மொழித் தொகையாகக் கொள்ளவேண்டும். ஏழு ஜ்வாலைகளாவன: காளி, கராளி, தூம்ரா, லோஹிதா, மனோஜவா, ஸ்புலிங்கினீ, விச்வரூபா என்பவை. ‘ஸப்தஜிஹ்வா’ என்று வடமொழியில் கூறுவர்.

கேள்வி: திருச்சூர் என்று கேரளத்தில் உள்ள ஊரைச் சிவத்தலம் என்கிறார்கள். அதன் இயற்பெர் என்ன?
பதில்: ‘திரிச்சிவப் பேரூர் என்பது’ அதன் இயற்பெயர். அங்குள்ள திருக்கோயிலுக்கு வடக்கு நாதன் கோயில் என்று பெயர்.

கேள்வி: கோவைகளில் ராஜாக் கோவை, மந்திரிக் கோவை என்று இரண்டு இருக்கின்றனவாமே; அவற்றை இயற்றியவர் யார்?
பதில்: மாணிக்கவாசகர் இயற்றிய திருச்சிற்றம்பலக் கோவையாரை ராஜாக் கோவை என்றும், சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய திருவெங்கைக் கோவையை மந்திரிக் கோவை என்றும் புலவர் கூறுவர்.

கேள்வி: முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியனுடைய பெயரில் குடுமி என்பது எதைக் குறிக்கிறது?
பதில்: மதிலின் உறுப்புக்குக் குடுமி என்று பெயர். அந்தப் பாண்டியனுடைய மதிலும் அதில் உள்ள உறுப்புக்களும் பகைவர்களால் சிதைவு படாமல் பலகாலமாக இருத்தலினால் 'முதுகுடுமி' என்ற பெயர் வந்தது. பகைவர்களால் எதிர்ப்பதற்கரியவன் என்று அவன் வீரச் சிறப்பைக் குறிப்பால் அந்த அடை புலப்படுத்துகிறது.

கேள்வி: ஓரம் போகியார் என்ற புலவர் எப்போதும் சாலை ஓரத்திலேயே நடப்பவரா? அவருக்கு என் அந்தப் பேர் வந்தது?
பதில்: ஓரம் என்பது பட்சபாதத்தைக் குறிக்கும். போகியார் = நீங்கியவர். பட்சபாதமின்றி நடுநிலையில் நிற்பவர் என்பது அந்தப் பெயருக்குப் பொருள்.

கேள்வி: 'ஓதிய ஐந்து ஓங்காரம்’ என்று கந்தர் கலிவெண்பாவில் வருகிறது. ஐந்து ஓங்காரம் என்பவை எவை?
பதில்: பிரணவமாகிய ஓங்காரத்தின் உறுப்புக்கள் ஐந்தையும் எண்ணிச் சொன்னது அது. அகாரம், உகாரம், மகாரம், நாதம், விந்து என்பவை அவை. நாதம் என்பது இணைந்த ஒலியையும் விந்து என்பது நிறைவையும் குறிக்கும்.

மதிப்பீடு

‘கி.வா.ஜ. பதில்கள்’ வழமையான கேள்வி-பதில்கள் தொகுப்பு நூல்களிலிருந்து மாறுபட்ட நூல். பொழுபோக்குக் கேள்வி-பதில்களாக அல்லாமல் அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு விடைகூறும் நூலாக இந்நூல் அமைந்துள்ளது. இலக்கணம், இலக்கியம், சமயம் போன்றவற்றைப் பற்றிய பல சந்தேகங்களுக்கு தெளிவான விடைகூறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page