under review

விடைகள் ஆயிரம்

From Tamil Wiki
விடைகள் ஆயிரம் - கி.வா. ஜகந்நாதன்

விடைகள் ஆயிரம் (1980) இலக்கியம் மற்றும் சமயம் சார்ந்த பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். இந்நூலை எழுதியவர் கி.வா. ஜகந்நாதன். கலைமகள் இதழில் ‘இது பதில்’ என்ற தலைப்பிலும், ‘இதோ விடை’ என்ற தலைப்பிலும் வாசகர்களின் வினாக்களுக்கு கி.வா.ஜ. அளித்த ஆயிரம் பதில்களின் தொகுப்பே இந்நூல்.

பிரசுரம், வெளியீடு

விடைகள் ஆயிரம் நூல், அமுத நிலையத்தால் 1980-ல் வெளியிடப்பட்டது. மறுபதிப்புகள் 2004, 2010 மற்றும் 2012-ல் வெளியாகின. 2023-ல் இதன் மீள்பதிப்பை செண்பகா பதிப்பகம் வெளியிட்டது.

நூல் தோற்றம்

விடைகள் ஆயிரம் நூல் உருவான விதம் குறித்து, நூலின் முன்னுரையில் கி.வா. ஜகந்நாதன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “இலக்கிய இலக்கணத் துறைகளிலும் சமயத்துறையிலும் பிற துறைகளிலும் பல அன்பர்கள் பல வினாக்களை விடுக்க அவற்றிற்குரிய விடைகளைப் பல முறைகள் விட்டு விட்டுக் ’கலைமகளில்’ வெளியிட்டு வந்தேன். கடிதம் வாயிலாகப் பல அன்பர்கள் கேட்ட வினாக்களுக்குரிய விடைகளைத் தனியேயும் எழுதி வந்தேன். அந்த விடைகளைத் தொகுத்து வெளியிட்டால் பலருக்கும் பயன்படும் என்று அன்பர்கள் தெரிவித்தனர். அதனால், ‘விடையவன் விடைகள்’ என்ற பெயரில் இரண்டு பாகங்களை முன்பு வெளியிட்டேன். வினாக்கள் வந்த வண்ணமாக இருக்கின்றன. அவற்றிற்கெல்லாம் மாதப் பத்திரிகையாகிய கலைமகளில் வெளியிட இடம் இல்லை. எல்லா எல்லா வினாக்களுக்கும் அதில் விடைகளை வெளியிடுவது என்பது சாத்தியம் அன்று; ஆகவே ‘விடைகள் ஆயிரம்' என்ற பெயருடன் வினாக்களையும் விடைகளையும் தொகுத்து இப்போது வெளியிடலானேன்.”

உள்ளடக்கம்

விடைகள் ஆயிரம் நூலில் வாசகர்களின் பல்வேறு விதமான கேள்விகளுக்கு விடையளித்துள்ளார் கி.வா. ஜகந்நாதன்.

கேள்வி: திருநீலகண்ட நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் ஆகிய இருவரும் ஒருவரா?
பதில்: இருவரும் வேறு. திருநீலகண்ட நாயனார் குலால வம்சத்தைச் சேர்ந்தவர்; திருநீலகண்டயாழ்ப்பாணர் பாணர் குலத்தினர்.

  • ‘தீபாவளி' என்பதை விளக்கும்போது, ‘தீபாவளி’ எனும் சொல் ‘விளக்குகளின் வரிசை' என்ற பொருளில் வந்தது என்றும், காலப்போக்கில் வெடி வெடித்து வாணம் விடும் பழக்கமாகிவிட்டதாகவும் கி.வா.ஜ. குறிப்பிட்டுள்ளார்.
  • ’இல்லானை இல்லாளும் வேண்டாள்' என்று கூறியிருக்கும் ஔவையாரின், ‘ஈன்றெடுத்த தாய் வேண்டாள்’ என்ற கூற்று சரியாகுமா என்ற கேள்விக்கு, கி.வா.ஜ. “பணக்காரப் பிள்ளையிடமிருந்துகொண்டு ஏழைப்பிள்ளைகளைக் கவனிக்காத தாய்மார்கள் உலகில் இல்லையா?' என்று எதிர்கேள்வி எழுப்பியுள்ளார்.
  • கி,வா.ஜ மனிதர் என்பது காரணப் பெயரா என்ற வினாவுக்கு மனிதன் என்ற சொல், ‘மநுஜ’ என்ற வடசொல்லில் இருந்து வந்ததாகக் குறிப்பிடுவதுடன் காசியப முனிவரின் மனைவி மநுவிடம் பிறந்தமையால் அப்பெயர் வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
  • மேதாவி என்பது வட சொல் என்று குறிப்பிட்டிருப்பவர், அதனோடு தொடர்புடைய தமிழ்ச்சொல் மேதை என்றும் கூறியுள்ளார். பட்டினம், பட்டணம் வேறுபாட்டை விளக்கும்போது ‘பட்டினம்' என்பது கடற்கரையில் அமைந்த ஊரைக் குறிப்பதாகவும், ‘பட்டணம்' என்பது பெரிய ஊரைக் குறிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவற்றுக்கு மூலம் ‘பத்தனம்’ என்ற வடசொல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நூலிலிருந்து அறிய வரும் செய்திகள்
  • அரிக்கு இல்லமாகிய ஊர்தான் அரியிலூர். அதுவே மருவி அரியலூர் ஆகிற்று.
  • சீதை, அசோக வனத்தில் இருந்த காலம் பத்து மாதங்கள்.
  • பாவை என்பது பொம்மையைக் குறிக்கும். பொம்மை போல வண்ணங்களுடன் அழகாக இருப்பதால் பெண்களைப் பாவை என்கின்றனர். பூவை என்பது மைனாவிற்குப் பெயர். அதன் பேச்சைப் போல இனிமையாகப் பேசுவதால் மங்கையரை பூவை என்று அழைக்கின்றனர்.
  • கர்ணனுடைய இயற்பெயர் விஷுஷேணன் .
  • பொய்கை என்பது இயற்கையான நீர்நிலை. தடாகம் என்பது மனிதர் உருவாக்கிய நீர்நிலை.
  • தீய குணம் உடையவர்களோடு பழகுவது தீ நட்பு. அகத்தில் நட்பின்றி, புறத்தில் நண்பர்போல நடிப்பவரின் நட்பு கூடா நட்பு.
  • மனிதன் உண்பது உணவு. விலங்குகள் உண்பது இரை .
  • ஜல்பம், விதண்டை என்று வாதங்களில் இரு வகை உண்டு. வாதப் பிரதிவாதிகள் தமது குணங்களையும் எதிரியின் குற்றங்களையும் எடுத்துரைப்பது ஜல்பம். தமது குற்றம் மறைத்து எதிரியைக் கண்டிப்பது விதண்டை.
  • ஒரு கோவிலில் கர்ப்பக்கிரகத்துக்கு மேலே உள்ளதை விமானம் என்றும், மற்றவற்றைக் கோபுரம் என்றும் கூறுவது மரபு.
  • 'அனுத்தமா' என்பதற்கு 'தனக்கு மேற்பட்டவர் இல்லாதவள்' என்பது பொருள்.
  • ராமாயணத்தில் வரும் பஞ்சவடி என்னும் இடம் கோதாவரி தீரத்தில் உள்ள நாசிக் என்ற இடமே. 'வடம்' என்பது ஆலமரத்தின் பெயர். அங்கே ஐந்து ஆலமரங்கள் இருந்தன. அதனால் பஞ்சவடி என்ற பெயர் வந்தது. அங்கே வனவாசத்தின்போது ராமர் வந்து தங்கியபோது சூர்ப்பனகை வந்து மூக்கு அறுபட்டாள். ‘நாசிகை’ என்பது மூக்கு. சூர்ப்பனகையின் மூக்கு விழுந்த இடமாதலில் 'நாசிகா' என்று வந்து அதுவே 'நாசிக்' ஆயிற்று.
  • 'சாகா' மிருகம் என்று குரங்குக்குப் பெயர் சொல்வார்கள். ஆனால், அது சாகாது என்று பொருள் இல்லை! சாகா என்பது தழையைக் குறிக்கும். ஊனுண்ணாமல் தழை, தளிர் முதலியவற்றை உண்ணுவதால் குரங்குக்கு அந்தப் பெயர் வந்தது.
  • எத்தனையோ பழங்கள் இருக்க ஆண்டவன் வழிபாட்டுக்கு வாழைப்பழத்தை பயன்படுத்துவது ஏன்? என்று பலருக்குச் சந்தேகம். வாழைப்பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் என்பதே காரணம்!

மதிப்பீடு

திரைப்படத்துறை தொடர்பான கேள்வி பதில்களே வந்துகொண்டிருந்த காலத்தில், இலக்கியம், சமயம் தொடர்பான வினாக்களுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியான வினா-விடைகளின் தொகுப்பே விடைகள் ஆயிரம். தமிழில் வெளியாகியிருக்கும் வினா-விடை நூல்களுள் குறிப்பிடத்தகுந்த நூலாக, பல்வேறு சந்தேகங்களைப் போக்கும் ‘விடைகள் ஆயிரம்’ நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page