under review

கிருங்கை சேதுபதி

From Tamil Wiki
கிருங்கை சேதுபதி (படம் நன்றி: விகடன்)
முனைவர் எழுத்தாளர், கவிஞர் கிருங்கை சேதுபதி

கிருங்கை சேதுபதி (சொ. சேதுபதி; சொக்கலிங்கம் சேதுபதி ) (பிறப்பு: ஜீன் 16, 1970). கவிஞர், எழுத்தாளர். நாடக ஆசிரியர். ஆய்வாளர். சொற்பொழிவாளர். பேராசிரியராகப் பணியாற்றினார். சிறார்களுக்கான பல படைப்புகளைத் தந்தார். ‘சிறகு முளைத்த யானை' என்னும் சிறார் படைப்புக்காக 2018 -ஆம் ஆண்டிற்கான பால் சாகித்ய புரஸ்கார் விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

கிருங்கை சேதுபதி என்னும் சொ.சேதுபதி, ஜீன் 16, 1970 அன்று, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை அடுத்துள்ள கிருங்காக்கோட்டையில், பொ.சொக்கலிங்கம் - சௌந்தரம் அம்மாள் இணையருக்குப் பிறந்தார். உள்ளூரில் ஆரம்பக் கல்வி கற்ற இவர், உயர்நிலைக் கல்வியை, சிவகங்கை மாவட்டம் பிரான்மலை வள்ளல் பாரி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். மேல்நிலைக் கல்வியை, பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.

புதுக்கோட்டை மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்று இளங்கலை தமிழ் இலக்கியம் (பி. லிட்.) முதுகலை தமிழ் (எம்.ஏ.) பட்டம் பெற்றார். புதுக்கோட்டை அரசினர் கல்வியியல் கல்லூரியில் இளங்கலைக் கல்வியியல் பட்டம் (பி.எட்.) பெற்றார். மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்.) பட்டம் பெற்றார். கோவை பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

கிருங்கை சேதுபதி, மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்ச் கல்லூரியில் சில காலம் விரிவுரையாளராகப் பணியாற்றினார். புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மணமானவர்.

பால் சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற சிறகு முளைத்த யானை நூல்.
தமிழ் ஹரிஜன் இதழ் தொகுப்பு

இலக்கிய வாழ்க்கை

கிருங்கை சேதுபதி கிருங்காக்கோட்டை என்னும் தன் ஊரின் பெயரைச் சுருக்கித் தன் பெயருடன் இணைத்துக் கொண்டு கிருங்கை சேதுபதி என்ற பெயரில் எழுதினார். கோகுலம், ரத்னபாலா, பூந்தளிர், தினமணி சிறுவர்மணி, பூவுலகின் மின்மினி போன்ற பல இதழ்களில் சிறார்களுக்கான பல படைப்புகளை எழுதினார். அமுதசுரபி போன்ற இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள் எழுதினார். கம்பன் கழக விழா உள்பட பல்வேறு கருத்தரங்குகளில், பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். ஆய்வுக் கட்டுரைகள் பல சமர்ப்பித்தார்.

கிருங்கை சேதுபதி எழுதிய ‘சிறகு முளைத்த யானை’ என்ற சிறார் பாடல்கள் நூலுக்கு, 2018-ம் ஆண்டிற்கான பால் சாகித்ய புரஸ்கார் விருது கிடைத்தது. மகாத்மா காந்தி ஆசிரியராக இருந்து செயல்பட்ட ‘ஹரிஜன்’ இதழின் தமிழ்ப் பதிப்பான, ‘தமிழ் ஹரிஜன்’ நூலை, அருணன் கபிலனுடன் இணைந்து தொகுத்தார். கிருங்கை சேதுபதி அறுபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். நூல்கள் சிலவற்றைத் தொகுத்தார்.

இதழியல்

கிருங்கை சேதுபதி, ‘தொடரும்’ என்ற இலக்கிய இதழை நடத்தினார். புதுச்சேரியில் ‘மஹா கவிதை’ என்னும் கவிதைக்கான இலக்கிய இதழை நடத்தினார்.

பாரதி பாசறை விருது

விருதுகள்/பரிசுகள்

  • பூந்தளிர் சிறுவர் கதைப் போட்டியில் இரண்டாம் பரிசு - ‘பால்’ சிறுகதைக்காக.
  • குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறார் கதைப் போட்டியில் இரண்டாம் பரிசு (1989).
  • திருப்பூர் தமிழ்ச் சங்க விருது - ‘அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்’ நாடகத்திற்காக.
  • பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய கவிதை நூலுக்கான பரிசு - ‘குடைமறந்த நாளின் மழை’ தொகுப்புக்காக.
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருது.
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கிய விருது.
  • ராஜபாளையம் மணிமேகலை மன்றம் வழங்கிய ’சிறுவர் இலக்கியச் செம்மல்' விருது.
  • அழ.வள்ளியப்பா இலக்கிய வட்டம் அளித்த ‘குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா விருது’.
  • தமிழ்நாடு அரசின் குறள்பீட விருது.
  • புதுச்சேரி அரசு வழங்கிய கம்பன் இலக்கிய விருது.
  • கவிஞர் சிற்பி இலக்கியப் பரிசு.
  • கோவை பாரதி பாசறை வழங்கிய பாரதி விருது
  • பேரூர் ஆதினம் வழங்கிய தெய்வத்தமிழ் நாவலர் விருது.
  • புதுவை பாரதிதாசன் அறக்கட்டளை வழங்கிய பாரதி இலக்கியச்சுடர் விருது.
  • புதுவை பாரதி பல்கலைப் பேரவையின் பாரதிச் செல்வர் விருது.
  • சாகித்ய அகாடமியின் பால் சாகித்ய புரஸ்கார் விருது.

இலக்கிய இடம்

கிருங்கை சேதுபதி குழந்தையிலக்கியவாதியாக முக்கியமானவர். முறையாகத் தமிழ் கற்றவர் என்பதால், சிறுவர் சிறுமியரைக் கவரும் பலவிதமான தலைப்புகளில் எளிய நடையில் பாடல்கள், சிறுகதைகள், நாடகங்களை எழுதினார். அருணன் கபிலனுடன் இணைந்து கிருங்கை சேதுபதி தொகுத்துள்ள ’தமிழ் ஹரிஜன்’ நூல் முக்கியமான நூலாக ஆய்வாளர்களால் முன் வைக்கப்படுகிறது. கிருங்கை சேதுபதி சிறார் இலக்கியம், தமிழாய்வு, சொற்பொழிவு, நூல் விமர்சனம் எனப் பல களங்களில் செயல்பட்டு வருகிறார்.

கிருங்கை சேதுபதி நூல்கள்

நூல்கள்

சிறார் பாடல்கள்
  • பூந்தடம்
  • சிரிக்கும் பனைமரம்
  • சிறகு முளைத்த யானை
  • எறும்பின் கனவு
  • சிறுவர் கதைப் பாடல்கள்
சிறார் சிறுகதை நூல்கள்
  • இன்று புதிதாய்ப் பிறந்தோம்
  • ரோஜாப்பூ என்ற பாம்பின் கதை
  • பரிசுத் திருநாள்
  • தேர்வு எழுதிய பூதம்
கவிதைத் தொகுப்புகள்
  • கனவுப்பிரதேசங்களில்
  • குடைமறந்த நாளின் மழை
  • வனந்தேடி அலையும் சிறுமி
  • சீதாயணம்
  • சாம்பலுக்குப் பின்னும் சில கனல்கள்
  • உயிர் மெய்
  • பொழுதுகளை வேட்டையாடுகிறவன்
சிறுகதைத் தொகுப்பு
  • பாரிவேட்டை
நாடகம்
  • அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்
  • என்றும் இருப்பேன்
  • வைகையில் வெள்ளம் வரும்
கட்டுரை/ஆய்வு நூல்கள்
  • கல்வியும் குழந்தையும்
  • வளரும் குழந்தைகளும் வாழ்வியல் கல்வியும்
  • சுற்றுப்புறச்சூழல் கல்வியும் நமது கடமைகளும்
  • பாரதிதேடலில் சில புதிய பரிமாணங்கள்
  • பருகித் தீராத பாக்கடல்
  • காரைக்குடியில் பாரதி
  • சொற்பொழிவாளர் பாரதியார்
  • பாரதியாரின் விநாயகர் வழிபாடு
  • தமிழில் மகாகவி தோன்றுக
  • சிறார் இலக்கியம் சில சிந்தனைகள்
  • வரலாறு நடந்த வழியில்
  • திருக்குறளில் தொல்காப்பிய மெய்ப்பாடுகள்
  • கம்பன் காக்கும் உலகு
  • உலகப் பொதுக்கவிதை
  • அரவிந்தர் போற்றிய அருந்தமிழ்ச் சான்றோர் (இரா. மீனாட்சிய்டன் இணைந்து எழுதியது)
  • தமிழ் இலக்கியவரலாறு (சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களுடன் இணைந்து எழுதியது)
வாழ்க்கை வரலாறு
  • குன்றக்குடி அடிகளார்
  • தீயினைத் தீண்டிய தீ செல்லம்மா பாரதி
  • பைந்தமிழ்க்காவலர் பழ. முத்தப்பனார்
  • அற்புதத்துறவி அடிகளார்
தொகுப்பு நூல்கள்
  • தமிழ் ஹரிஜன் (அருணன் கபிலனுடன் இணைந்து தொகுத்தது)
  • சிறுவர் கதைக்களஞ்சியம் (இரா. காமராசுடன் இணைந்து தொகுத்தது)
  • திரு.வி.க.வின் என் கடன் பணி செய்து கிடப்பதே
  • மாணவர்களுக்குப் பாரதியார் கவிதைகள்
  • மகாகவி பாரதியார் கவிதைகளில் புதுச்சேரி
  • வாழ்வியல் நோக்கில் சமயமும் சமுதாயமும்
  • சிற்பி கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)
  • சிற்பி: துளிகளில் ஒளிரும் வெளிகள்
  • உள்ளுக்குள் ஒரு நதி
  • நதிக்கரைச் சிற்பங்கள்
  • சிந்தை கவர்ந்த சித்தர் பாடல்கள்
  • கு.சா. கிருஷ்ணமூர்த்தி நூற்றாண்டு விழா உரையரங்கக் கட்டுரைகள்

உசாத்துணை


✅Finalised Page