under review

கார்த்திகை தீப வழிபாடு

From Tamil Wiki
தீப வரிசை
கார்த்திகை தீபம், திருவண்ணாமலை

கார்த்திகை தீப வழிபாடு தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு நிலவி வரும் வழிபாடுகளுள் ஒன்று. வழிபாடுகளில் சிறந்ததாக தீப வழிபாடு கருதப்படுகிறது. கார்த்திகை தீபம் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகிறது. இந்நாள் முழுநிலவை ஒட்டியே அமைகிறது. தமிழர்கள் வாழும் பகுதிகள் அனைத்திலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது என்றாலும் தமிழ்நாட்டில், திருவண்ணாமலையில், மிகச் சிறப்பாக இவ்விழா நடைபெறுகிறது.

இல்லங்களில் கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபத்தன்று இல்லங்களில் வெள்ளி, வெண்கலக் குத்து விளக்குகளும், பாவை விளக்குகளும், மண் அகல்களும் வீட்டின் உள்ளும் வெளியிலும் ஏற்றப்படுகின்றன. மத்தாப்புகள் கொளுத்தும் வழக்கமும் உள்ளது. அப்பம், வெல்லப்பாகில் செய்த நெல்பொரி, அவல்பொரி,பனையோலைக் கொழுக்கட்டை, திரளி இலைக் கொழுக்கட்டை போன்ற பண்டங்கள் இறைவனுக்குப் படைக்கப்படுகின்றன.

வழிபாட்டின் நோக்கம்

இறை வழிபாடுகளில் சிறந்ததாக தீப வழிபாடு கருதப்படுகிறது. ஜோதி வடிவான இறைவனைத் தங்கள் இல்லங்களில் விளக்கேற்றி தீப வடிவில் வழிபடுவது தமிழர்களின் தொன்றுதொட்ட மரபாக உள்ளது. இல்லம் இருள் அகன்று ஒளிவீசுவது போல் வாழ்க்கையின் இருளும் மறைய வேண்டும் என்பதே தீப வழிபாட்டின் நோக்கம்.

மனிதர்களுள் இருக்கும் அஞ்ஞான இருளைப் போக்கி மெய்ஞானத்தைத் தேடுவதே தீப வழிபாட்டின் தத்துவமாகும். உடலே கொப்பரை; தவமே எண்ணெய்; அறிவே திரி; அதனால் விளையும் ஞானமே ’தீபம்’ என்ற ஒரு கருத்துமுண்டு.

கார்த்திகை தீப வழிபாட்டின் புராணக் கதை

சிவபெருமானின் கண்களை விளையாட்டாய்ப் பார்வதி தேவி மூடினார். அதனால் உலகம் இருண்டது. உயிர்கள் வாடின. சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து உலகை இயங்கச் செய்தார். விளையாட்டாகச் செய்தாலும் அது வினையாக ஆனது என்பதால் சிவபெருமானின் சாபத்திற்கு உள்ளானார் தேவி.

அதன்படி பூவுலகில் பிறந்து மாங்காடு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை போன்ற இடங்களில் தவம் செய்தார் பார்வதி தேவி. கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் சிவபெருமான் திருவண்ணாமலையில் ஜோதி உருவில் தோன்றி அன்னைக்குக் காட்சி அளித்தார். உமைக்கு இடப்பாகம் அளித்து தன்னோடு இணைத்துக் கொண்டார், அர்த்தநாரீஸ்வரர் ஆனார். சிவபெருமான் அவ்வாறு ஒளியுருவில் தோன்றிய நாளே கார்த்திகை தீப தினமாகக் கொண்டாடப்படுகிறது.

திருகார்த்திகை தீபம் கொண்டாடப்படும் நாளுக்கு அடுத்த நாள், எல்லா ஆலயங்களிலும் ‘சர்வாலய தீப’ நாளாகக் கொண்டாடப்படுகிறது.’

கார்த்திகை தீபம்
அண்ணாமலையார் - உண்ணாமுலை அம்மன், திருவண்ணாமலை

இலக்கியங்களில் கார்த்திகை தீபம் பற்றிய குறிப்புகள்

தொல்காப்பியம் ‘வேலியின் நோக்கிய விளக்கு நிலையும்’ என்று கார்த்திகையில் ஏற்றிய விளக்கு பற்றிக் கூறுகிறது.

மைம்மிசை யின்றி மலைவிளக்குப் போலோங்கி
செம்மையி னின்றிலங்குந் தீபிகை - தெம்முனையுள்

- என்று தொல்காப்பியம் புறத்திணை 85 -ஆம் பாடல் குறிப்பிடுகிறது.

நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கின் தகையுடைய ஆகிப்
புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழித்
தூதொடு வந்த மழை

- எனக் ‘கார் நாற்பது’ தீபத்தின் பெருமையைப் பேசுகிறது.

விளக்கொளி யாகிய மின்கொடி யாளை
விளக்கொளி யாக விளங்கிடு நீயே

- என திருமந்திரத்தில் ஒளியின் தன்மை பற்றிக் குறிப்பிடுகிறார் திருமூலர். அருணாசல புராணத்தில் இறைவன் கூறுவதாக கார்த்திகை தீபத்தின் சிறப்பு பலவாறாக விரித்துரைக்கப்பட்டுள்ளது. அடி முடி தேடிய மாலுக்கும் அயனுக்கும் சிவபெருமான் ஜோதி வடிவில் காட்சி அளித்தார். அந்த நாளே மஹா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது. தாங்கள் கண்ட அந்த ஜோதி உருவை அனைத்து மக்களும் காண வேண்டும் என திருமாலும் பிரம்மனும் தேவர்களும் சிவபெருமானிடம் வேண்டினர். அதற்குச் சிவபெருமான்,

கார்த்திகைக்குக் கார்த்திகை நாள் ஒரு ஜோதி
மலை நுனியில் காட்டா நிற்போம்
வாய்த்து வந்த சுடர்காணில் பசிபிணி
இல்லாது உலகில் மன்னி வாழ்வார்
பார்த்தவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு
தவிரும் இது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தில் இருபத்துஓர் தலைமுறைக்கு
முத்திவரம் கொடுப்போம் என்றார்

- என்று அருளிச் செய்ததாக அருணாசல புராணம் (பாடல்: 159) கூறுகிறது. கார்த்திகை தீப வெண்பாவும் தீபத்தின் பெருமையை,

புத்திதரும் தீபம் நல்லபுத்திரசம் பத்துமுண்டாம்
சித்திதரும் தீபம் சிவதீபம் - சக்திக்கு
உயிராகும் சோணமலை ஓங்கிவளர் ஞானப்
பயிராகும் கார்த்திகைத் தீபம்

- என்கிறது. திருஞானசம்பந்தர்[1] உள்ளிட்ட பலர் இயற்றிய கார்த்திகை தீபம் பற்றிய பாடல்கள் பக்தி இலக்கியங்களில் காணப்படுகின்றன.

புராணங்களில் கார்த்திகை தீபம் பற்றிய குறிப்புகள்

கார்த்திகை தீபம் பற்றிப் பல்வேறு புராணக் கதைகள் உள்ளன. அம்பிகை மகிஷாசுரனுடன் போர் புரிந்து அவனைக் கொன்ற போது அவன் கழுத்தில் அணிந்திருந்த சிவலிங்கம் அவள் கையோடு ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்ய, கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி அம்பிகை விரதம் இருந்தாள். அதுவே கார்த்திகை விரதம் என்றும், அந்த விரதத்தின் முடிவில் ஈசன் ஒளி வடிவில் தோன்றி அன்னையை ஆட்கொண்டார் என்றும் ‘தேவி புராணம்’ கூறுகிறது. எலி ஒன்று தினந்தோறும் ஆலய கர்ப்பக்கிரக விளக்கில் இருக்கும் எண்ணெயைக் குடித்து வந்தது. அப்படிக் குடிக்கும்போது, திரி தூண்டப்பட்டு வந்தது. இதன் காரணமாக கர்ப்பக்கிரகம் சதா சர்வகாலமும் பிரகாசமாக ஒளி வீசியது. தன்னை அறியாமலேயே ஆலயத்தில் விளக்கெரிய வைத்ததன் புண்ணிய பலனாக எலி, அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்தது. இறைவன் இறுதியில் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது அவர், தீப விழா எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற வேண்டும் என இறைவனிடம் வேண்டிக் கொள்ள, இறைவனும் ஆசிர்வதித்தார். அதன்படியே ஒவ்வொரு வருடமும் இவ்விழா கொண்டாடப்பட்டு வருவதாக ஒரு கதை கூறப்படுகிறது. சூரபத்மனை அழிக்க வேண்டி தேவர்கள் ஈசனைத் துதித்தனர். ஈசனும் தமது நெற்றிக் கண்ணைத் திறக்க, அதிலிருந்து ஒளிவடிவில் ஆறு நெருப்புப் பொறிகள் தோன்றி குழந்தையாய் உருமாறியது. அவ்வாறு ஆறுமுகன் அவதரித்த தினமே திருக்கார்த்திகை தினம் எனக் கொண்டாடப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

பரணி தீபம்

கார்த்திகை தீப வழிபாடு மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல் நாள் பரணி தீபம் என்றும், கார்த்திகை நட்சத்திரம் அன்று கார்த்திகை தீபம் என்றும் மறுநாள் சர்வாலய தீபம் என்றும் மூன்று நாட்கள் கார்த்திகை விளக்குகள் ஏற்படுகின்றன. கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முன்னால் விடியற்காலையில் யாகசாலை பூஜைகளுக்குப் பின் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. கார்த்திகைப் பெண்கள் குழந்தை முருகனைச் சீராட்டி வளர்த்தனர். அம்பிகை அருளால் ஆறுமுகம் கொண்ட முருகப்பெருமான் கார்த்திகேயனாக ஒருமுகக் கடவுளாக ஆனார். அந்த கார்த்திகைப் பெண்களை கௌரவிக்கும் முகமாக திருக்கார்த்திகைக்கு முன் பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை ஆலயம்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப வழிபாடு

திருக்கார்த்திகை தினத்தன்று திருவண்ணாமலையில் மலை மீது தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக மலை மீது மிகப் பெரிய கொப்பரை உள்ளது. தீபம் ஏற்றப் பயன்படும் அவ்வெண்கலக் கொப்பரை பொ.யு. 1745-ல் மைசூர் சமஸ்தான அமைச்சர் வெங்கடபதிராயரால் வழங்கப்பட்டது. ஐந்தரை அடி உயரமும், ஐந்தடி அகலமும் கொண்ட மிகப் பெரிய உருண்டையான பாத்திரத்தில் (சுமார் 2000 லிட்டர் நெய் பிடிக்கும் அளவு) இத்தீபம் ஏற்றப்படுகின்றது. நூற்றுக்கணக்கான மீட்டர் காடாத் துணியும் கிலோக்கணக்கில் கற்பூரமும் இதற்குத் தேவைப்படுகிறது. இந்த ஜோதியின் ஒளி பல கி.மீ. தொலைவு வரை தெரியும் என்பதும், சில நாட்களுக்கு அணையாமல் தீபம் எரியும் என்பதும் இதன் முக்கியமான சிறப்புகளில் ஒன்று. மலை மேல் ஏற்றப்படும் அண்ணாமலை தீபம், அருணாசலேஸ்வரராகக் கருதப்பட்டு பக்தர்களால் வணங்கப்படுகிறது. அன்று ஆலயத்தில் அர்த்தநாரீஸ்வரர் ரூபத்தில் சிவனும் அம்பாளும் எழுந்தருளி பஞ்சமூர்த்திகள் உட்பட பக்தர்கள் எல்லோருக்கும் காட்சி கொடுக்கின்றனர். அன்று மட்டும் தான் அர்த்தநாரீஸ்வரர் தனது சன்னதியை விட்டு வெளியே வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொக்கப்பனை

கார்த்திகை தீபம் அன்று சொக்கப்பனை எல்லா சிவன்கோவில்களிலும் ஏற்றப்படுகிறது. காய்ந்த மற்றும் பச்சைப் பனை ஓலைகளைக் கோபுர வடிவில் செய்து சொக்கப்பனை ஏற்றப்படுகிறது. இதற்கு ‘சொக்கர் பனை’ என்ற பெயரும் உண்டு. ஜோதி வழிபாடே இதன் அடிப்படையாகும்.

கார்த்திகை தீப வழிபாட்டின் பலன்கள்

‘அருணாசல தீபோத்ஸவ மஹாத்மியம்’ என்ற நூலில் கார்த்திகை தீப வழிபாடு பற்றி பல்வேறு செய்திகள் கூறப்பட்டுள்ளன. “தீபத்தன்று சிவலிங்கத்தின் முன்னால் நெய் விளக்கு ஏற்றுபவன் வாழ்க்கை ஒளிரும். தீவினைகள் அகலும். அந்த தீபத்தை வலம் வருவனின் ஒவ்வொரு அடிக்கும் அஸ்வமேத யாகம் செய்த பலனுண்டு. சகல தானங்களும் செய்தால் ஒருவனுக்கு என்ன பலன் வருமோ, சகல தீர்த்தங்களிலும் நீராடினால் ஒருவனுக்கு என்ன பலன் வருமோ அது, கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்தாலே கிடைக்கும். கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நஷத்திரத்தில் சோணாசல ஷேத்திரத்தில் தீபமேற்றினால் சந்தான ப்ராப்தி உண்டாகும்.” - என்றெல்லாம் அது சிறப்பாக எடுத்துரைக்கின்றது.

கிரிவலம்

கார்த்திகை தீபத்தன்று பலரும் மலை வலம் வந்து இறைவனை வழிபடுவது வழக்கமாக உள்ளது. திருவண்ணாமலை, பர்வதமலை, திருக்கழுகுன்றம், திருப்பரங்குன்றம், குன்றக்குடி உள்ளிட்ட பல இடங்களில் பக்தர்கள் கிரிவலம் வந்து இறைவனைத் தொழுகின்றனர். சிவாலயங்களில் மட்டுமல்லாது முருகன் ஆலயங்களிலும் கார்த்திகை தீப வழிபாடு சிறப்புடன் நடைபெறுகிறது

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
    துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்
    தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
    விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Feb-2023, 07:03:56 IST