கார்த்திகைப் பாண்டியன்
- பாண்டியன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பாண்டியன் (பெயர் பட்டியல்)
To read the article in English: Karthigai Pandiyan.
கார்த்திகைப் பாண்டியன் (மா. கார்த்திகைப் பாண்டியன்) (மே 28, 1981) தமிழில் கதைகளையும் மொழியாக்கங்களையும் செய்துவரும் நவீன எழுத்தாளர். ஆங்கிலம் வழி நவீன இலக்கியப்படைப்புகளை மொழியாக்கம் செய்கிறார். பெங்களூருவில் பொறியியல் கல்லூரி பேராசிரியராகப் பணிபுரிகிறார். தேசிய மற்றும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் துறைசார்ந்த பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
பிறப்பு, கல்வி
கார்த்திகைப்பாண்டியன் மதுரையில் மே 28, 1981 அன்று அ. மாணிக்கம் -க. மதனவல்லி இணையருக்குப் பிறந்தார். பள்ளிக்கல்வி ஏழாம் நாள் அட்வெந்து மேல்நிலைப் பள்ளி, ஜீவாநகர், மதுரை. 1998 முதல் 2002 வரை மின்னணு பொறியியலை காருண்யா தொழில்நுட்பக் கல்லூரி, கோவையில் படித்து முடித்தார். பயன்முறை மின்னணுவியலில் முதுகலை பொறியியலை ஆர்.வி.எஸ். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியிலும் (2004 - 2006) பேரளவு ஒருங்கிணைச்சுற்று வடிவமைப்பில் (VLSI Design) பொறியியல் முனைவர் படிப்பை தியாகராசர் பொறியியல் கல்லூரியிலும் (2011 - 2015) முடித்தார்
தனிவாழ்க்கை
கார்த்திகைப் பாண்டியனின் மனைவி பெயர் பூமா. மே 31, 2012 அன்று மணநாள். ஒரு மகன், கா.நகுலன்.
இலக்கியவாழ்க்கை
கார்த்திகைப் பாண்டியனின் முதல் படைப்பு 2009-ல் வெளிவந்த 'முடியாத கதை’ என்னும் கவிதை. அகநாழிகை சிற்றிதழில் வெளியாகியது. முதல் சிறுகதை நிழலாட்டம் என்னும் சிறுகதை 2011-ல் கதவு சிற்றிதழில் வெளியாகியது.
இவரது ’துண்டிக்கப்பட்ட தலையின் கதை’ தொகுப்பு அதிகம் பேசப்பட்ட ஒன்று, தமிழ் உள்ளிட்ட உலக இலக்கியங்களில் இடம் பெற்றிருக்கும் விநோதமான, நூற்றுக்கும் மேற்பட்ட உயிரினங்களை குறித்த கதைகள் மற்றும் குறிப்புக்களை கொண்ட இவரது ’கற்பனையான உயிரிகளின் புத்தகம்’ வெகுவாக கவனிக்கபட்டது. தன் இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் என எஸ்.ராமகிருஷ்ணன், பிரேம்-ரமேஷ், கோபிகிருஷ்ணன், ஆல்பர் காம்யூ, அலென் ராப் கிரியே ஆகியோரைக் குறிப்பிடுகிறார்
விருதுகள்
- சிறந்த மொழிபெயர்ப்புத் தொகுப்புக்கான விகடன் விருது – எருது (2016)
- சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான வாசகசாலை விருது – மர நிறப் பட்டாம்பூச்சிகள் (2016)
- சிறந்த இளம் படைப்பாளிக்கான சுந்தர ராமசாமி விருது (2017)
- தமிழ்நாடு கலை இலக்கிய மேடையின் கவிக்கோ விருது (2017)
- சிறந்த மொழிபெயப்பு கவிதை நூலுக்கான ஆத்மாநாம் விருது – நரகத்தில் ஒரு பருவகாலம் – ஆர்தர் ரைம்போ (2018)
- சிறந்த மொழிபெயர்ப்புத் தொகுப்புக்கான படைப்பு விருது – துண்டிக்கப்பட்ட தலையின் கதை (2019)
- சிறந்த மொழிபெயர்ப்புக்கான நல்லி திசை எட்டும் விருது - நரகத்தில் ஒரு பருவகாலம் – ஆர்தர் ரைம்போ (2019)
அரசியல் செயல்பாடுகள்
- நேரடி அரசியலில் பங்கு கொள்ளாதபோதும் இடதுசாரிக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டவர்.
நூல்பட்டியல்
சிறுகதைத் தொகுதிகள்
- மர நிறப் பட்டாம்பூச்சிகள்
மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்
- எருது
- சுல்தானின் பீரங்கி
- துண்டிக்கப்பட்ட தலையின் கதை
மொழிபெயர்ப்பு நாவல்கள்
- ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் – யுகியோ மிஷிமா
- காஃப்கா-கடற்கரையில் – ஹாருகி முரகாமி
மொழிபெயர்ப்பு கவிதைகள்
- நரகத்தில் ஒரு பருவகாலம் – ஆர்தர் ரைம்போ
மொழிபெயர்ப்பு (புனைவு/கட்டுரைகள்)
- கற்பனையான உயிரிகளின் புத்தகம் – ஹோர்ஹே லூயிஸ் போர்ஹேஸ்
உசாத்துணை
- கதைகளின் வழி | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
- புத்தகம் பேசுது-துண்டிக்கப்பட்ட-தலையின் கதைகள்-கார்த்திகைப் பாண்டியன்
- கவிஞர் ஆத்மாநாம் விருது 2018 | கார்த்திகைப் பாண்டியன் ஏற்புரை யுட்யூப் காணொளி
- பிளவு கார்த்திகைப் பாண்டியன் கனலி இதழ்
- கார்த்திகைப் பாண்டியன் மொழிபெயர்த்துள்ள "கற்பனையான உயிரிகளின் புத்தகம்" | பேசும் புத்தகம் -யூட்யூப் காணொளி
- எஸ்.ரா. வின் உறுபசி நாவல் பற்றி . . . கார்த்திகைப் பாண்டியன் கோயமுத்தூர் புத்தகத்திருவிழா -2018-யூட்யூப் காணொளி
- ஆத்மாநாம் விருதுகள் விழா | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:32:04 IST