கார்த்திகேயன் வாசகசாலை
- கார்த்திகேயன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கார்த்திகேயன் (பெயர் பட்டியல்)
கார்த்திகேயன் - வாசகசாலை (7 அக்டோபர் 1982) தமிழ் எழுத்தாளர், நவீன இலக்கியச் செயல்பாட்டாளர். வாசகசாலை என்னும் அமைப்பை உருவாக்கி வாசிப்பைப் பரவலாகக் கொண்டு செல்லும் பொருட்டு பணியாற்றுபவர். வாசகசாலை என்னும் பதிப்பகத்தையும் இணைய இதழையும் நடத்தி வருகிறார். புரவி என்னும் இலக்கிய இதழையும் நடத்தி வருகிறார்
பிறப்பு, கல்வி
கார்த்திகேயன் 07 அக்டோபர் 1982-ல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் என்னும் ஊரில் வி.வெங்கட்ராமன், எஸ். கமலாதேவி இணையருக்குப் பிறந்தார்.
கார்த்திகேயன் கோட்டைப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஆரம்பக்கல்வியையும் , கோட்டைப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் முடித்தபின் ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி (திருப்புனவாசல்), அரசினர் மேல்நிலைப்பள்ளி (மணமேல்குடி) ஆகிய கல்வி நிலையங்களில் 1998-ல் பள்ளிக்கல்வியை நிறைவுசெய்தார். அய்யா வீரைய்யா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரி (பூண்டி)யில் இளங்கலை இயற்பியலை 2002-ல் முடித்து விட்டு பாரதிதாசன் பல்கலைக்கழகம் (திருச்சிராப்பள்ளி) யில் முதுகலைக் கணினிப் பயன்பாட்டியல் கல்வியை 2007-ல் நிறைவு செய்தார்.
தனிவாழ்க்கை
கார்த்திகேயன் கீழ்க்கண்ட பணிகளை ஆற்றியுள்ளார்
- ஆசிரியர் (கணிதம் & ஆங்கிலம்) - மகாத்மா நர்சரி பிரைமரி பள்ளி, மணமேல்குடி - 01/07/2002 முதல் 30/11/2002 வரை
- ஆசிரியர் (கணிதம், ஆங்கிலம் & கணிப்பொறியியல்) - சாணக்யா மெட்ரிகுலேஷன் பள்ளி, யாகூப் ஹசன் பேட்டை - 01/12/2002 முதல் 31/07/2008 வரை
- நிறுவன கணக்கு வழக்குகளை கணினி மயமாக்குதல் - எஸ்.ஆர்.எம் ட்ரேடர்ஸ், மணமேல்குடி - 01/08/2008 முதல் 31/01/2009 வரை
- தரவு ஒருங்கிணைப்பாளர்-- அரோவா இன்பர்மேட்டிக்ஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், சேலையூர், சென்னை - 4/3/2009 முதல் 30/11/2009 வரை
- மின்னூடக வணிகத்தொடர்பாளர் (இன்பவுண்ட்) - டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்காக - ஆண்ட்ரோமெடா மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட், ஜாபர்கான்பேட்டை, சென்னை - 01/12/2009 முதல் 30/09/2010 வரை
- தொழில் ஆய்வு மேலாளர் - சன்சார் ரிசோர்சஸ் லிமிடெட், மயிலாப்பூர், சென்னை - 01/10/2010 முதல் 20/10/2013 வரை
- உதவி மேலாளர் - அம்பலம் ஆர்ட்ஸ் அண்ட் கல்ச்சர் பிரைவேட் லிமிடெட், பெசன்ட் நகர், சென்னை - 23/11/2013 முதல் 01/10/2015 வரை
- பயிற்சி உதவி ஆசிரியர்-- தினமலர் (நெல்லை குழுமம்) - தி நகர், சென்னை - 04/11/2015 முதல் 14/07/2016 வரை
- உள்ளடக்க ஆசிரியர் - தினமணி டாட் காம், அம்பத்தூர், சென்னை - 16/07/2016 முதல் 25/03/2021 வரை
- உள்ளடக்க நிர்வாகி - பிஞ்ச் தமிழ் ஆஃப் (Bynge Thamizh App) – [நோஷன் பிரஸ் குழுமம்] - 25/06/2021 - 31/03/2022 வரை
- ஆசிரியர், புரவி - கலை இலக்கிய மாத இதழ், வடபழனி, சென்னை - 01/04/2022 முதல் 28/02/2023 வரை
- சுதந்திர பணியாளர் (ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு) - குரோம்பேட்டை, சென்னை - 01/11/2023 முதல் தற்போது வரை
கார்த்திகேயனின் பெற்றோர் மறைந்துவிட்டனர். மணமாகவில்லை.
இலக்கியப் பணிகள்
கார்த்திகேயனின் தந்தை வெங்கட்ராமன் இலக்கிய வாசகர். ஓரிரு கதைகளையும் எழுதியவர். அவரிடமிருந்து இலக்கிய ஆர்வத்தை அடைந்தார். தந்தை அஞ்சலகத்தில் பணியாற்றியமையால் அங்கு வரும் இதழ்களைப் பயின்றார். இலக்கிய ஆர்வம் உருவாகவே தீவிர வாசகராக மாறினார்.
சாரு நிவேதிதா வாசகர் வட்டம்
கார்த்திகேயன் 2008-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முகநூல் வழியாக வாசிப்பார்வம் கொண்ட சில நண்பர்கள் மூலம் எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் தொடர்பைப் பெற்றார். அவர்களுடன் இணைந்து 2009-ஆம் ஆண்டு முகநூலில் 'எழுத்தாளர் சாரு நிவேதிதா வாசகர் வட்டம்' எனும் முகநூல் குழுவைத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகள் சென்ற பின்பு அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, குழுவை முன்னின்று நடத்திய நண்பர்கள் பார்த்திபன் மற்றும் பாஸ்கர் ராஜா இருரும் விலகினர்.
வாசகசாலை
கார்த்திகேயன் மற்றும் எழுத்தாளர் சாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இருந்த நண்பர்கள் சேர்ந்து வாசிப்பினை முன்வைப்பதற்காக 'வாசகசாலை' என்ற குழுமத்தைத் தொடங்க முடிவெடுத்தார்கள். 'வாசகசாலை' எனும் பெயரில் ஒரு முகநூல் குழு 15 ஆகஸ்ட் 2012 அன்று தொடங்கப்பட்டது. புத்தகங்கள் சார்ந்த ஆழமான கருத்து பரிமாற்றங்களுக்கான களமாகவும், வாசிப்பு ஆர்வம் கொண்ட நண்பர்கள் சந்திக்கும் தளமாகவும் அது அமைய வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம். கார்த்திகேயன் மற்றும் அவர் நண்பர் அருண் இருவரும் வாசகசாலையின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.
அதன் பயனாக சென்னை திருவான்மியூரில் உள்ள பனுவல் புத்தக விற்பனை நிலையத்தில், மாதம் ஒரு கூட்டம் என்ற அடிப்படையில் வாசகசாலையின் முதல் கூட்டம், 14 டிசம்பர் 2014 அன்று எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரியின் '7.83 ஹெர்ட்ஸ்' எனும் அறிவியல் புனைவு நாவலுக்காக நடத்தப்பட்டது. இதன் பின்னர் பல்வேறு வடிவங்களில் பல்வேறு சிறப்புத் தலைப்புகளில் தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
இலக்கியம் சார்ந்த பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கி, ஐந்து அமர்வுகளுடன் வாசகசாலை சார்பாக முதல் முழுநாள் நிகழ்வு 17 மே 2015 அன்று திருவான்மியூர் பனுவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எழுத்தாளர்கள் மாலன், இமையம், த. அரவிந்தன், ஆர். அபிலாஷ், திலகபாமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்வில் பங்கேற்பதற்கான கட்டணம் ஏதுமில்லை. கலந்து கொண்ட பார்வையாள நண்பர்கள் அனைவருக்கும் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது. வாசகசாலையின் எல்லா முழுநாள் நிகழ்வுகளிலும் இதையே பின்பற்றி வருகிறார்கள். (பார்க்க: வாசகசாலை)
பதிப்பகம்
இளம் படைப்பாளிகளுக்கு ஒரு களமாக அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் 27 டிசம்பர் 2016 ல் வாசகசாலை பதிப்பகம் துவங்கப்பட்டது. அதன் முதல் வெளியீடாக தஞ்சை பிரகாஷ் எழுதிய 'மிஷன் தெரு' குறுநாவல் மறுபதிப்பாக வெளியிடப்பட்டது. வாசகசாலை முப்பெரும் விழாவின் ஒரு அங்கமாக நடைபெற்ற இந்த நிகழ்வில், நூலின் முதல் பிரதிதியை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வெளியிட, திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் பெற்றுக் கொண்டார். வாசகசாலை 2024 வரையில் 140-க்கும் மேற்பட்ட நூல்களை பதிப்பித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை இளம் படைப்பாளிகளுடையவை என்பதும், பெரும்பாலோனருக்கு அதுதான் அவர்களது முதல் நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதழியல்
வாசகசாலை இணைய இதழ்
இளம்படைப்பாளிகளுக்காக 16 அக்டோபர் 2016 ல் வாசகசாலை என்னும் பெயரில் இணைய இதழ் துவங்கப்பட்டது. அதற்கான அறிமுக வரைவினை எழுத்தாளர் விஷால்ராஜா பாஸ்கர் ராஜாவுடன் இணைந்து உருவாக்கினார். முதலாவது இதழில் அறிமுக எழுத்தாளரான தூயன் முதல் யுவன் சந்திரசேகர் வரை பலரது பங்களிப்பும் இருந்தது.
திரைக்களம்
திரைப்படங்கள் குறித்து விவாதிப்பதற்காக 22 மே 2017-ல் 'திரைக்களம்' என்றொரு தனியான பிரிவு துவங்கப்பட்டது.
புரவி அச்சிதழ்
கோவிட் பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு பாரம்பரிய அச்சுப் பத்திரிகைகள் பெரிய முடக்கத்தைச் சந்தித்திருந்த வேளையில் 'புரவி' என்னும் கலை இலக்கிய அச்சு இதழை வாசகசாலை வெளியிட்டது. ஏப்ரல் 2021 முதல் டிசம்பர் 2022 வரை 21 இதழ்கள் வெளிவந்தபின் நிதிச்சுமையால் நிறுத்தப்பட்டது.
புரவியின் முதலாம் ஆண்டு சிறப்பிதழ் (ஏப்ரல் 2022) வழக்கத்தைவிட மிகக் கூடுதலான பக்கங்களுடன் தமிழில் முக்கியமான ஆளுமைகளின் பங்களிப்புடன் வெளியானது. புரவியின் ஆண்டு விழா 9 ஏப்ரல் 2022-ல் சென்னை தி.நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
விருதுகள்
- உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை வழங்கும் சிறந்த இணையதள விருது 2019 - வாசகசாலை இணையதளம்
- படைப்பு இலக்கிய குழுமம் வழங்கும் சிறந்த இலக்கிய அமைப்பிற்கான விருது 2021 - வாசகசாலை இலக்கிய அமைப்பு
உசாத்துணை
- வாசகசாலை இணையப் பக்கம்
- வாசகசாலை- எஸ்.ராமகிருஷ்ணன்
- வாசிப்பால் இணைந்த இளைஞர்கள் குங்குமம்
- வாசகசாலை அருண் - கார்த்திகேயன் பேட்டி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Sep-2024, 22:02:40 IST