கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி
கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி சங்க காலப் புலவர், கடைச்சங்க கால பாண்டிய மன்னர். அகநானூற்றிலும், நற்றிணையிலும் இவருடைய பாடல்கள் உள்ளன. கடைச்சங்க கால அகத்துறைப்பாடல்களைத் தொகுத்தது முக்கியமான பங்களிப்பு.
வாழ்க்கைக் குறிப்பு
பாண்டிய மன்னர். சங்க காலப் புலவர். பல சிற்றரண்களை உள்ளடக்கிய பேரரண்களை கொண்ட நாடென்பதால் "கானப்பேரெயில்" எனப் பெயர் பெற்ற ஊரை ஆண்ட வேங்கை மார்பன் என்ற குறு நில மன்னனை வென்று தன் நாட்டுடன் சேர்த்துக் கொண்டதால் 'கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி’ என்றழைக்கப்பட்டார்.
இவர் காலத்தில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் மூவரும் நண்பர்களாக இருந்தனர். சேரமான் மாரிவெண்கோ, சோழன் இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளியுடன், உக்கிரப் பெருவழுதி ஒற்றுமையுடன் இருந்ததை புலவர் ஔவையார் வாழ்த்தினார். பாரியின் பறம்புமலையை முற்றுகையிட்டவர்கள் இவர்களாகவும் இருக்கலாம் என தமிழறிஞர்கள் நம்புகின்றனர்.
இலக்கிய வாழ்க்கை
கடைச்சங்கப் புலவர்களின் அகத்திணைப்பாடல்களுள் பதின்மூன்றடிச் சிறுமையும் முப்பத்தியொரு அடி பெருமையும் கொண்ட நானூறு பாடல்களை அகநானூறு என்ற பெயரில் தொகுத்தார். இந்த தொகுத்தல் பணியில் இவருக்கு உதவியவர் மதுரை உப்பூரிக் குடிக்கிழார் மகனார் உருத்திர சன்மன். இவர் அவையில் தான் திருக்குறள் அரங்கேறியதாக தமிழறிஞர்கள் நம்புகின்றனர்.
பாடல் நடை
- அகநானூறு - 26
வளங்கேழூரனைப்
புலத்தல் கூடுமோ? தோழி!
சிறுபுறம் கவையின னாக உறுபெயல்
தந்துளிக் கேற்ற பலவுழு செஞ்செய்
மண்போல் நெகிழ்ந்தவர் கலுழ்ந்தே
நெஞ்சறை போகிய அறிவி னேற்கே
- நற்றிணை - 98
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்
செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில், தாழாது
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென,
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்!
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த்
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி,
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே-
வைகலும் பொருந்தல் ஒல்லாக்
கண்ணொடு, வாரா என் நார் இல் நெஞ்சே!
- புறநானூறு - 367
ஒளவையார் உக்கிரப் பெருவழுதியின் காலத்தில் சேர, சோழ, பாணிடியரின் ஒற்றுமையைப் பற்றி பாடிய பாடல்.
நாகத் தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினும் தம்மொடு செல்லா;
வெற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து,
பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,
இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி,
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்;
வாழச் செய்த நல்வினை அல்லது,
ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடக் கொடித்தேர் வேந்திர்;
யான் அறி அளவையோ இவ்வே; வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப்
பரந்து இயங்கும் மாமழை உறையினும்,
உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக, நும் நாளே!
உசாத்துணை
- புலவர் கா. கோவிந்தன் – திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் – சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை-3
- வைரத்தமிழ்-நற்றிணை 98
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:31:59 IST