காசிபன் கீரன்
காசிபன் கீரன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
காசிபன் கீரன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கீரன் என்னும் இயற்பெயர் உடையவர். காசிபன் என்ற சொல் இவரது தந்தையின் பெயராகும் என்றும் காசிபகுடியை சேர்ந்தவர் என்பதால் காசிபன் என அழைக்கப்பட்டுள்ளார் என்றும் இருவேறு கருத்துகள் அறிஞர்களிடையே நிலவுகிறது. காசிபகுடியை சேர்ந்தவர் என்று கருதுகையில் அக்குடி அந்தணர் வகுப்பைச் சேர்ந்தது என்பதால் இவர் அந்தணராக இருப்பார் என்றும் கருதப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
காசிபன் கீரன் பாடிய பாடல் நற்றிணையில் 248-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பொருளீட்டச் சென்ற தலைவன் கார்காலத்தே திரும்பி வராமை கண்டு வருந்திய தலைவிக்கு, இது கார்காலம் இல்லை என்று ஆறுதல் கூறும் தோழியின் கூற்றாக முல்லைத் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- மழை பொழியும் கார்காலத்தில் முல்லை கொடிகளில் பூக்கள் மலர்ந்து மணம் வீசும். மழையின் இடியொலி கேட்டு மயில்கள் தோகை விரித்து நடனமிடும்.
- இல்லம் நீங்கி வெளியூருக்கு பொருளீட்டச் செல்லும் ஆடவர் மழை பெய்யும் காலமான கார்பருவத்தில் வீடு திரும்புவது இயல்பு.
- உவமை: முல்லை பூக்களின் மலர்வு யானையின் மத்தகத்தில் தோன்றியிருக்கும் அழகிய புள்ளிகளை போல் உள்ளது.
பாடல் நடை
நற்றிணை - 248
- திணை: முல்லை
- கூற்று: பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி மழை மேல் வைத்துப் பருவம் மறுத்தது
'சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ,
பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்ப,
தண் புதல் அணிபெற மலர, வண் பெயல்
கார் வரு பருவம்' என்றனர்மன்-இனி,
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர்,
அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும்
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்
இன மயில் மடக் கணம் போல,
நினை மருள்வேனோ? வாழியர், மழையே!
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - அதியன் விண்ணத்தனார் முதலிய 44 புலவர்கள்: புலவர் க. கோவிந்தன்
- நற்றிணை - 248:Tamilvu
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 13:05:24 IST