under review

கழார்க்கீரன் எயிற்றியார்

From Tamil Wiki

கழார்க்கீரன் எயிற்றியார் சங்ககாலப் பெண்பாற் புலவர். இவர் பாடிய ஒன்பது பாடல்கள் சங்கத்தொகை நூல்களான அகநானூறு, குறுந்தொகை, நற்றிணையில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

தஞ்சாவூரில் கழார் என்னும் காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் இருக்கும் சிற்றூரில் கழார்க்கீரன் எயிற்றியார் பிறந்தார். காவிரிப்பூம்பட்டினத்திற்கு அருகில் இருக்கும் ஊர். மத்தி என்ற சோழ மன்னனின் ஆட்சி காலத்தில் வாழ்ந்த கீரன் என்பவரை மணந்தார். கீரன் என்பது சங்கை அறுத்து வளையல் செய்வதை குலத்தொழிலாகக் கொண்டவர்களை அழைக்கும் சொல்; நக்கீரர் பிறந்த குடி. எயினி, எயிற்றி போன்றவை குறிஞ்சி நிலப்பெண்கள் பெயர். குறிஞ்சி நிலத்தில் பிறந்து கீரன் குலத்தில் மணம் முடித்தவராக ஆய்வாளர்களால் கருதப்படுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

கழார்க்கீரன் எயிற்றியார் அகநானூற்றில் 163, 217, 235, 294 குறுந்தொகையில் 35, 261, 330 நற்றிணையில் 281, 312 ஆகிய பாடல்களைப் பாடினார். இவர் பாடல்கள் பெரும்பாலும் குளிர்காலத்தில் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் துன்பங்களை விளக்கும் பாடல்களாக உள்ளன.

பாடல்வழி அறியவரும் செய்திகள்

அகநானூறு
  • முன்பனிக் காலம்: யானை பெருமூச்சு விடுவது போல் நீர் திவலைகளைத் தெளித்துக்கொண்டு குளிர்வாடைக்காற்று வீசும். தாமரைப் பூ கரிந்து போகும். குன்றமே நடுங்குவது போன்ற குளிர்.
  • ஆற்றில் நீர் ஓடும்போது அதில் உள்ள மணல் உருண்டு ஓடுவது போல என் நெஞ்சு நெகிழ்ந்து ஓடுகிறது.
  • குளிர்க்காலம்: உடம்பைப் பொத்தவைக்கும். வில்லால் அடித்த பஞ்சு போல் பனி கொட்டிக் கிடக்கும். வயலில் கரும்புப் பூ வெள்ளை நிறத்தில் பூத்து, காம்பில் வாடைக்காற்றில் அசைந்தாடும். பகன்றை தோலில் பதித்த வட்டக் கண்ணாடி போல் வெள்ளை நிறத்தில் மலரும். அவரை கோழிக்கால் போன்ற கொழுத்த இலைகளோடு மொட்டு விட்டுப் பூக்கும். உதிரும் பூவாகிய தோன்றி மலரும். குருகு குரல் எழுப்பும்.
  • பனிக்காலம்: முசுண்டைப் பூக்கள் விண்மீன் போலப் புதர்களில் பூத்துக் குலுங்கும். நண்டு வளைக்குள் ஓடி ஒளியும்.
  • பனிக்காலம்: மழைக்கட்டிகளுடன் மழை பொழியும். பூக்களின் உட்புறமெல்லாம் புள்ளிப் புள்ளியாக பனித்திவலைகள் நிறையும்படி பனி பொழியும். கருவிளை என்னும் காக்கணம் பூக்கள் காதலரைப் பிரிந்த மகளிரின் கண்ணீர் போலப் பனித்துளிகள் வழிய மலர்ந்தன. பஞ்சு போன்ற தலையுடன் ஈங்கைப் பூ, நெய்யில் நனைத்தது போல நீரில் நனைந்த தளிரோடு, இரண்டாகப் பிளந்த ஈரல் போல பனி ஈரத்துடன் மலரும். அவரையின் இளம் பூக்கள் மலரும். அகன்ற வயலில் நெல் கதிர் வணங்கி நிற்கும்.
  • மிகுதியாக மழை பெய்ததால் பதம் கெட்டு அழிந்து மெலிந்த உள்ளீடு இல்லாத காய்களை உடைய எள்ளுச்செடிகளைப் போல மன உளைச்சலுடன் தன் நிம்மதியை இழந்து வாடும் தலைவி.
  • குறைவாக மழை தூறும் கார்காலத்தின் இறுதி நாட்களில் சேற்றில் நிற்பதை வெறுத்து சிவந்த கண்களை உடைய எருமை இருள் செறிந்த நடு இரவில் ”ஐ” என்று கத்துகின்ற அச்சம் உண்டாகும் காலத்தில் தலைவியின் கண்கள் தூங்காமல் விழித்தன.
குறுந்தொகை
  • கூதிர்காலம்: கர்ப்பமான பச்சை பாம்பின் கருவின் முதிர்வு போன்ற திரண்ட கரும்பின் குவிந்த அரும்பு மலருமாறு நுண்ணிய மழை பொழிந்து துளி பொருந்திய, தண்ணிய வருதலை உடைய வாடைக்காற்று வீசும் காலம்
  • கஞ்சியிலே தோய்த்து எடுத்து, முதலில் துவைக்க வேண்டிய முறைப்படி துவைத்துவிட்டு, குளிர்ந்த நீர்நிலையில் போட்டபின், அந்நீரில், பிரியாத பருத்த ஆடையின் முறுக்கை ஒத்திருக்கின்ற, பெரிய இலைகளையுடைய பகன்றையின் முறுக்குடைய மொட்டுக்கள் விரிந்து மலர்ந்த வெண்மையான மலர்
நற்றிணை
  • சோழர் தம் வெற்றிக்குப் பின்னர் தங்கி மகிழும் நகரம் கழார். பலிக்கொடையாக ஊனும் சோறும் அளிக்கும் ஊர். தாம் உண்ணும் முன் காக்கைக்கு சோறு போடும் இயல்பு கொண்ட மக்கள். சோற்றுவளம் உடைய கழார் ஊர்.
  • நள்ளிரவில் விழித்திருந்து காவல் காக்கும் நகர்க்காவலர் இருக்கும் ஊர்.
  • பார்வை வேட்டுவன் பழக்கி வைத்திருக்கும் தன் குருகின் கால்கட்டை அவிழ்த்துவிட்டதும் அது பறந்து சென்று பனி பொழியும் காலை வேளையில் முள் இருக்கும் இண்டம்புதரில் தன் சிறகுகளை வருடிக்கொடுக்க அமர்ந்திருக்கும்.
  • மழை பொழிந்து நின்ற பின்னர், தோன்றும் பனிக்காலத்தில், வாடைக் காற்று வீசும்.

பாடல் நடை

துறை: பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது.

களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை
முளரி கரியும் முன்பனிப் பானாள்,
குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை!
எனக்கே வந்தனை போறி!

துறை: தலைவன் பிரியுமென வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.

வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க் காடவர் உயிரென
நமக்குரைத் தோருந் தாமே
அழாஅல் தோழி அழுங்குவர் செலவே.

துறை: வன்பொறை எதிர் அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது; 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழி தலைமகட்கு உரைத்தது

மாசு இல் மரத்த பலி உண் காக்கை
வளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி
வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்
நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும்
அடங்காச் சொன்றி, அம் பல் யாணர்
விடக்குடைப் பெருஞ் சோறு, உள்ளுவன இருப்ப
மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள்
தாம் நம் உழையராகவும், நாம் நம்
பனிக் கடுமையின், நனி பெரிது அழுங்கி
துஞ்சாம் ஆகலும் அறிவோர்
அன்பிலர் தோழி! நம் காதலோரே

உசாத்துணை


✅Finalised Page