கருவூர் கோசனார்
கருவூர் கோசனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
கருவூர் கோசனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கருவூர் என்கிற ஊரில் வாழ்ந்தவர். கோசர் இனத்தை சேர்ந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
கருவூர் கோசனார் பாடிய ஒரு பாடல் நற்றிணையில் 214-வது பாடலாக அமைந்துள்ளது. பொருளீட்டுவதற்காகச் சென்ற தலைவனின் பிரிவினால் ஏற்பட்ட துன்பத்தை எண்ணி தோழியிடம் தலைவி உரைப்பதாக பாலைத் திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- உலகியல் வாழ்க்கை நடத்துவதற்குரிய பொருள் இல்லாதவருக்கு இப்பிறவியிலும் மறுபிறவியிலும் உண்டாகும் இன்பமும் இல்வாழ்க்கையில் ஏற்படும் புகழும், இரப்போருக்கு கொடையளித்து அறச்செயல் செய்யும் திறனும் ஆகிய மூன்றும் கிடைக்காது.
- கார்காலத்தே மலர்ந்த நீல வண்ணமும் பிற வண்ணங்களையும் கொண்ட பூக்களில் தேன் உண்ணுவதற்கு வண்டுகள் மொய்க்கும்.
- உவமை: கார் காலத்து மழையில் இடி இடித்து, மின்னல் மின்னுவது தோள் வளையல் நெகிழ்ந்து உடல் மெலிந்து பிரிவு துன்பத்தால் வாடும் என்னை பார்த்து சிரிப்பது போல் இருக்கிறது.
பாடல் நடை
நற்றிணை - 214
பாலைத் திணை துறை: உலகியலால் பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகன் குறித்த பருவம் கண்டு தலைமகள் சொல்லியது
இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம்' என,
வினைவயின் பிரிந்த வேறுபடு கொள்கை,
'அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல் போது
அணிய வருதும், நின் மணி இருங் கதுப்பு' என,
எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உணக் கூறி,
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து,
செய் பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர்
கேளார்கொல்லோ- தோழி!- தோள
இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி
நகுவது போல, மின்னி
ஆர்ப்பது போலும் இக் கார்ப் பெயற் குரலே?
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Dec-2024, 19:41:08 IST