under review

கண்ணம் புல்லனார்

From Tamil Wiki

கண்ணம் புல்லனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்களில் நற்றிணையில் ஒன்றும் அகநானூறில் ஒன்றும் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கை குறிப்பு

கண்ணம் புல்லனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கருவூரினை சேர்ந்தவர். கண்ணன் என்பாரின் மகன். புல்லன் என்னும் இயற்பெயர் உடையவர்.

இலக்கிய வாழ்க்கை

கண்ணம் புல்லனார் பாடிய பாடல்கள் நற்றிணையில் 159 -வது பாடலாகவும் அகநானூறில் 63-வது பாடலாகவும் இடம்பெற்றுள்ளன. நற்றிணை 159-வது பாடல் தலைவியின் பிரிவாற்றாமையை தலைவனுக்கு தோழி எடுத்துரைத்து வீட்டிற்கு அழைப்பதாக நெய்தல் திணையில் அமைந்த பாடல். அகநானூறு 63-வது பாடல் தலைவனுடன் உடன்போக்கு சென்று விட்ட தலைவியை நினைத்து வருந்தி செவிலித்தாய் தன் மகளிடம் கூறுவதாக பாலைத் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

நற்றிணை - 159
  • கடற்கரையோர கிராமத்து வீடுகளின் முற்றங்களில் புன்னை மரம் வளர்க்கப்படும். புன்னை பூக்கள் முற்றத்தில் விழுந்து கிடக்கும். வீடுகளில் பெரும்பான்மையாக சுவையான மீன்களை உணவாக கொள்வர்.
  • கடற்கரையோர புதர்க்காடுகளில் குருகு பறவைகள் வசிக்கும். காதலரை பிரிந்து வாடும் மகளிர் கரையில் அமர்ந்து பறவைகளை எண்ணிக்கொண்டிருப்பர். உணவுண்ண மாட்டார்.
  • உவமைகள்: கடலலைகள் நீலமணியை குவித்து வைத்தது போல் தோன்றும். மணல் குன்றுகள் நிலவு ஒளி குவிந்துள்ளது போல் காணப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
அகநானூறு - 63
  • வீட்டாரை மீறி தலைவனுடன் உடன்போகி விட்ட தலைவியை நினைத்து அவள் வீட்டார் துயரத்தில் ஆழ்வர்.
  • தலைவனும் தலைவியும் பயணம் செல்லும் பெருமலைகளால் சூழப்பட்ட பாதையில் இருக்கும் காட்டில் பொழுது விடிந்ததும் வெயில் கொளுத்தும் வேளையில், கொல்லும் கண் கொண்ட யானை காலால் உதைத்தும், கையால் அள்ளியும் பொன்னிறப் புழுதியை வாரி இறைக்கும். கருநிறக் காலும், கழுத்தும் கொண்ட செம்போத்து பறவையின் சேவல் தன் பெடையுடன் மண்ணைக் குடையும்.
  • காட்டில் இருக்கும் கள்வர் கன்றுகளைக் காணாமல் கறவை மாடுகள் வருந்தும்படி, கறவை மாடுகளைக் கவர்ந்து செல்வர். அவர்கள் ஓட்டிச் சென்ற மன்றில் தம் கன்றுகளைக் காணாமல் கறவை மாடுகள் சோகத்துடன் காணப்படும்.
  • வேட்டுவக் கள்வர்கள் காளை மாடுகளைக் கவர்ந்துவர, வரிந்து கட்டிய தண்ணுமை என்ற பறையை முழக்கி ஒலியை ஏற்படுத்துவர்.
  • பயணப்படும் இணையர் கறவைமாடுகளைக் கவர்ந்து செல்லும் மறவர்கள் வாழும் ஊரில் தங்குவர். சிற்றூரில் இரவு வேளையில் கல் போன்று அமைதியாக இருக்கும். குரம்பை புல்லால் கூரை வேய்ந்து சிவப்பு வண்ணம் பூசிய பந்தல்கால் நட்டு குடில்களை கட்டுவர். அங்கிருக்கும் மூதாட்டியர் திருமணமான இளம்பெண்ணை வாழ்த்துவர்.
  • உவமைகள்: தலைவியின் நடை மயில் போன்று இருப்பதாக கூறப்பட்டது.

பாடல் நடை

நற்றிணை - 159

  • திணை: நெய்தல்
  • கூற்று:தலைவியின் ஆற்றாமையும் உலகியலுங் கூறி வரைவு கடாயது.

மணி துணிந்தன்ன மா இரும் பரப்பின்
உரவுத் திரை கொழீஇய பூ மலி பெருந் துறை,
நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரை,
கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி,
எல்லை கழிப்பினம்ஆயின், மெல்ல
வளி சீத்து வரித்த புன்னை முன்றில்,
கொழு மீன் ஆர்கைச் செழு நகர்ச் செலீஇய,
'எழு' எனின், அவளும் ஒல்லாள்; யாமும்,
'ஒழி' என அல்லம் ஆயினம்; யாமத்து,
உடைதிரை ஒலியின் துஞ்சும் மலி கடற்
சில் குடிப் பாக்கம் கல்லென
அல்குவதாக, நீ அமர்ந்த தேரே!

அகநானூறு - 63

  • திணை: பாலை
  • கூற்று:தமைகன் புணர்த்துடன் செல்லச் செவிலி தன் மகளுக்குச் சொல்லியது

கேளாய்; வாழியோ! மகளை! நின் தோழி,
திரு நகர் வரைப்பகம் புலம்ப, அவனொடு
பெரு மலை இறந்தது நோவேன்; நோவல்
கடுங்கண் யானை நெடுங் கை சேர்த்தி,
முடங்கு தாள் உதைத்த பொலங் கெழு பூழி
பெரும் புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்ப,
கருந் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல்
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்,
அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி,
கன்று காணாது, புன் கண்ண, செவி சாய்த்து,
மன்று நிறை பைதல் கூர, பல உடன்
கறவை தந்த கடுங் கால் மறவர்
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ
முதுவாய்ப் பெண்டின் செது காற் குரம்பை
மட மயில் அன்ன என் நடை மெலி பேதை
தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள்,
'வேட்டக் கள்வர் விசியுறு கடுங் கண்
சேக் கோள் அறையும் தண்ணுமை
கேட்குநள்கொல்?' எனக் கலுழும் என் நெஞ்சே

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Nov-2025, 21:19:06 IST