under review

கண்ணன் சேந்தனார்

From Tamil Wiki

கண்ணன் சேந்தனார் (சங்கம் மருவிய காலம்) தமிழ்ப்புலவர். திணைமொழி ஐம்பது நூலின் ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

இவர் சாத்தந்தையாரின் புதல்வர். இவரது பெயரைக்கொண்டே இவர் வைதிக சமயச் சார்பினர் என்று கருதலாம். புறநானூற்றில் சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளியைப் பாடிய சாத்தந்தையார் (புறம்.80-82, 287) என்னும் புலவரே கண்ணன் சேந்தனாரின் தந்தையார் என்று டாக்டர் உ.வே.சாமிநாதையர் அந்நூலின் பாடினோர் வரலாற்றில் குறித்துள்ளார். இவ்வாறு கொள்ளுவதற்கு பெயர் ஒற்றுமை தவிர வேறொரு சான்று இல்லை. எனவே, இருவரும் ஒருவரே என்று துணிந்து கூற இயலாது. கண்ணஞ் சேந்தனார் சங்கப் புலவர்களுக்குப் பின் வாழ்ந்த புலவர் என்பதால், புறநானுற்றில் காணும் சாத்தந்தையார் இவர் தந்தையார் ஆவதற்கு வாய்ப்பில்லை. கார் நாற்பதின் ஆசிரியர் கண்ணங் கூத்தனார் என்று கூறப்படுதலால், சேந்தனாரும் கூத்தனாரும் ஒருகால் உடன் பிறந்தோராயிருக்க் கூடும் என்று ஊகிக்கப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

கண்ணன் சேந்தனார் திணைமொழி ஐம்பது நூலை எழுதினார். இது ஓர் அகப்பொருள் நூல். இந்நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் வரிசையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. இந்த வைப்பு முறை அகப்பொருள் நிகழ்ச்சிகளின் போக்கிற்கு ஒத்தது.

பாடல் நடை

குறிஞ்சி

யாழும் குழலும் முழவும் இயைந்தென
வீழும் அருவி விறல் மலை நல் நாட!
மாழை மான் நோக்கியும் ஆற்றாள்;
இரவரின்,ஊர் அறி கெளவை தரும். (தி.மொ.ஐ.- 7)

(யாழ், குழல், முழவு ஒலி ஒன்று சேர்தல் போன்ற ஒலியை உடைய அருவிகளை உடைய நாடனே, நீ இரவில் வருவதால் மான் போன்ற பார்வையை உடைய தலைவி உனக்கு ஏற்படும் துன்பத்தை நினைத்து வருந்துவாள். ஊரவர் அறியும் பழிச் சொற்களே பரவி நிற்கும்.)

பாலை

ஓங்கு குருந்தோடு அரும்பு ஈன்று பாங்கர்
மராஅ மலர்ந்தன, தோன்றி; விராஅய்க்
கலந்தனர் சென்றார் வலந்த சொல் எல்லாம்-
பொலந்தொடீஇ! - பொய்த்த குயில். (தி.மொ.ஐ.- 13)

(மராமரங்கள் பக்கத்தில் உயர்ந்த குருந்த மரங்களுடன் கூடி மொட்டுகள் மலர்ந்துள்ளன. வேனிற் பருவம் வருவதால் குயில்கள் கூவி தலைவர் கூறிய உறுதிமொழியை பொய்யாக்கி விட்டன.)

முல்லை

கரு இயல் கார் மழை கால் கலந்து ஏந்த,
உருகு மட மான் பிணையோடு உகளும்;-
உருவ முலையாய்! - நம் காதலர் இன்னே
வருவர்; வலிக்கும் பொழுது. (தி.மொ.ஐ.- 25)

அழகிய மார்பகங்களை உடையவளே! மழையானது காற்றோடு பொழிவதால், வெம்மையுற்றிருந்த ஆண் மான்கள், பெண் மான்களோடு, துள்ளி விளையாடுகின்றன. தலைவர் வருவதைக் கார்காலமே தெரிவிப்பதால் நம் தலைவர் வருவார், வருந்தாதே.

மருதம்

கருங் கயத்து ஆங்கண் கழுமிய நீலம்
பெரும் புற வாளைப் பெடை கதூஉம் ஊரன்
விரும்பு நாள் போலான்; வியல் நலம் உண்டான்;
கரும்பின் கோது ஆயினேம் யாம். (தி.மொ.ஐ.- 39)

குவளை மலரையும், வாளை மீனினையும் உடைய பெரிய குளத்தினை உடைய தலைவன்,, இன்பத்தை அனுபவித்துவிட்டான். நாங்கள் அவனுக்குச் சாறு பிழிந்து எடுக்கப்பட்ட கரும்புச் சக்கையைப் போல் ஆகிவிட்டோம். அவன் பெரிதும் மாறிவிட்டான்.
நெய்தல்

கறங்கு மணி நெடுந் தேர் கண் வாள் அறுப்ப,
பிறங்கு மணல்மேல் அலவன் பரப்ப,
வறம் கூர் கடுங் கதிர் வல் விரைந்து நீங்க,
நிறம் கூரும் மாலை வரும். 48

(தலைவனது மணியொலிக்கும் நீளமான தேர் மாலை வேளையில் நண்டுகள் நாற்புறமும் பரவி ஓடவும், வெயில் விரைந்து விலகவும், காண்பவர் கண்களின் ஒளிமிக்க பார்வை வருந்தும்படியாகவும் வருகிறது.)

நூல் பட்டியல்

  • திணைமொழி ஐம்பது

உசாத்துணை

இணைப்புகள்


‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 12:55:26 IST