கணக்காயன் தத்தனார்
கணக்காயன் தத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
கணக்காயன் தத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கணக்காயன் எனவும் கணக்காயன் தத்தன் எனவும் சில ஏடுகளில் குறிக்கப்படுகிறார். தத்தன் என்னும் இயற்பெயர் உடையவர். கணக்காயன் என்ற சொல்லுக்கு நூல் கற்பிப்பவர் என்று பொருளாதலால், இவர் ஆசிரியர் பணி செய்தார் என அறிய முடிகிறது.
இலக்கிய வாழ்க்கை
கணக்காயன் தத்தனார் பாடிய பாடல் குறுந்தொகையில் 304-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவன் பொருளீட்டுவதற்காக பிரிந்து சென்றதால் தலைவிக்கு ஏற்படும் துன்பத்தை தோழி அறிந்தாள். தன் துயர் அறிந்த தோழியிடம் தலைவி கூறுவதாக நெய்தல் திணையில் அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- நெய்தல் நிலத்து மீனவர்கள் இரும்பினால் செய்யப்பெற்ற ஈட்டி முனையை மூங்கில் கம்பில் பொருத்தி உருவாக்கிய கூரிய ஆயுதத்தை வைத்திருப்பர். அவ்வாறு செய்த ஈட்டியுடன் படகில் சென்று சுறா மீனை வேட்டையாடுவர்.
- மீனவர்களின் வேட்டையினை கண்டு அச்சமுற்று பூக்கள் நிறைந்த கடற்கரை சோலைகளில் வாழும் அன்னப்பறவைகள் பறந்து விலகி செல்லும்.
பாடல் நடை
குறுந்தொகை - 304
- திணை: நெய்தல் துறை:வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
கொல்வினைப் பொலிந்த கூர்வா யெறியுளி
முகம்பட மடுத்த முளிவெதிர் நோன்காழ்
தாங்கரு நீர்ச்சுரத் தெறிந்து வாங்குவிசைக்
கொடுந்திமிற் பரதவர் கோட்டுமீ னெறிய
நெடுங்கரை யிருந்த குறுங்கா லன்னத்து
வெண்டோ டிரியும் வீததை கானற்
கைதையந் தண்புனற் சேர்ப்பனொடு
செய்தனெ மன்றவோர் பகைதரு நட்பே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - வணிகறிற் புலவர்கள்: புலவர் க. கோவிந்தன்
- குறுந்தொகை - 304:nallakurunthokai
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Mar-2025, 11:47:45 IST