under review

கங்குல் வெள்ளத்தார்

From Tamil Wiki

கங்குல் வெள்ளத்தார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

கங்குல் வெள்ளத்தார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. எனவே இவரது பாடலில் இடம்பெற்றுள்ள 'கங்குல் வெள்ளம்' என்ற உவமையின் சிறப்பை முன்னிட்டு, அதையே புலவரின் பெயராகக் கொண்டனர்.

இலக்கிய வாழ்க்கை

கங்குல் வெள்ளத்தார் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் 387-வது பாடலாக அமைந்துள்ளது. தலைவனின் பிரிவால் வாடும் தலைவியை ஆற்றியிருக்கும்படி சொன்ன தோழிக்கு தலைவி தன் துயரத்தை உணர்த்துவதாக அமைந்துள்ள பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

தலைவனின் பிரிவால் வாடும் தலைவியை நோக்கி தோழி துயரம் தவிர்த்து ஆற்றியிருக்கும்படி கூறுகிறாள். அது கேட்டு சினந்த தலைவி, தோழிக்கு தன் துயரை உணர்த்த கூறுவதாக அமைந்துள்ள பாடல்.

  • பகல் பொழுது முடிந்து முல்லை பூக்கள் மலர்ந்துள்ளன. சூரியன் மறைந்து வெப்பம் குறைந்து செயல்கள் ஓய்ந்த மாலை நேரம். இவை அனைத்தும் வருகின்ற இரவுக்கு எல்லையாக அமைந்துள்ளன.
  • உவமை: இரவு பொழுதில் வரும் இருளின் வெள்ளம் போன்ற பெருக்கானது கடலை விட பெரிதாக உள்ளது.

பாடல் நடை

குறுந்தொகை - 387

முல்லைத் திணை துறை: ஆற்றியிருக்கும்படி சொன்ன தோழிக்கு தலைவி தன் துயரை கூறுதல்.

எல்லை கழிய முல்லை மலரக்
கதிர்சினந் தணிந்த கையறு மாலையும்
இரவரம் பாக நீந்தின மாயின்
எவன்கொல் வாழி தோழி
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2024, 10:09:55 IST