under review

ஔவையாரம்மன் கோயில்

From Tamil Wiki
ஔவையாரம்மன் (நன்றி சதீஷ்குமார்)
விஷ்ணு(நன்றி சதீஷ்குமார்)
பிள்ளையார்(நன்றி சதீஷ்குமார்)
காவல்தெய்வம்(நன்றி சதீஷ்குமார்)

ஔவையாரம்மன் கோயில் (பொ.யு. எட்டாம் நூற்றாண்டு) குமரிமாவட்டம், தோவாளை வட்டத்தில் , குறத்தியறை என்னும் ஊரில் உள்ள கோயில். இது ஔவையாரம்மன் கோயில் என்று நாட்டார் வழிபாட்டு முறையில் உள்ளது. ஆனால் நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு ஆலயம் என தொல்லியலாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். தமிழகத்தில் ஔவையாருக்கு அமைக்கப்பட்ட ஒரே ஆலயம் என சிலரால் சொல்லப்படுகிறது. ஔவையார் என்பது கவிஞர் ஔவையாரை அல்ல என்றும் இங்கு வழிபடப்பட்ட தொன்மையான அன்னைதெய்வமே ஔவை எனப்படுகிறது என்றும் நாட்டாரியலாளர் கூறுகின்றனர். அந்த அன்னைதெய்வம் சமணப்பின்னணி கொண்டதாக இருக்கலாமென்றும் கூறப்படுகிறது.

இடம்

நாகர்கோயிலில் இருந்து கடுக்கறை செல்லும் வழியில் அழகியபாண்டிபுரத்திற்கு முன்னால் திரும்பும் சாலை குறத்தியறை என்னும் சிற்றூரைச் சென்றடைகிறது. இங்கே மலையைக் குடைந்து செய்யப்பட்ட சிறிய ஆலயமாக இது அமைந்துள்ளது. இந்த ஊரின் பழையபெயர் நெல்லிமடம். கோவிலின் பழைய காலத்து பெயர் அவ்வையாரம்மன் கோயில்.

அமைப்பு

ஔவையாரம்மன் கோயில் லாடவடிவமான சிறிய குடைவரைக் கோயில். இந்த ஆலயம் முழுக்கச் செதுக்கி முடிக்கப்படாத நிலையிலேயே உள்ளது. இது இறைநிறுவுகை செய்யப்படாமல் விடப்பட்ட ஆலயமாக இருக்கலாம். பின்னர் நாட்டார் வழிபாட்டுக்குள் வந்திருக்கலாம்.

கருவறையின் சுவரில் நாற்பது செண்டிமீட்டர் உயரத்தில் அமையுமாறு கோட்டம் ஒன்று அகழப்பட்டு அதில் புடைப்புச் சிலையாக விஷ்ணு செதுக்கப்பட்டுள்ளார். இந்த அகழ்வால் பின்சுவரின் கிழ்ப்பகுதி ஒரு மீட்டர் அகலத்தில் விஷ்ணு நிற்கும் தலம் உருவாகியுள்ளது. கோட்டத்தின் இருபுறமும் நன்கு செதுக்கப்படாத நான்முக அரைத்தூண்கள் என சுவர்த்துண்டுகள் அமைந்துள்ளன. மேலே போதிகைகள் உள்ளன. போதிகைகளின் விரிகோணக் கைகள் தாங்குமாறு அமைந்துள்ள உத்திரம் உள்ளது. வாஜனம், வலபி, கபோதம் இடம்பெறவில்லை.

சமபாத நிலையிலுள்ள விஷ்ணுவின் சிற்பம் தொடர்ந்த எண்ணைப்பூச்சால் மழுங்கியுள்ளது. தலைச்சக்கரம் பெற்ற கிரீடமகுடம், குண்டலங்கள் இவற்றை அடையாளம் காணமுடிந்தாலும் குண்டலங்கள் இவ்வகைப்பட்டவை என உறுதிசெய்ய முடியவில்லை. பின் கைகளில் வலப்புறம் சங்கு , இடப்புறம் சக்கரம் உள்ளன. முன்கைகளில் வலக்கை இடுப்பில் அமர, இடக்கை இடுப்பருகே ஏந்தாக உள்ளது. நிவீதம், முப்புரி நூல், கச்சம் வைத்த பட்டாடை, முடிச்சுத்தொங்கல்களுடன் இடைக்கட்டு அமைந்திருக்கும் விதம் சிற்பத்தின் காலத்தை பொயு எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என கூறும்படி செய்கிறது.

இக்கருவறைக் குடைவரையில் வெளியே பாறைசரிவின் மேற்கில் ஒரு கோட்டமும் கிழக்கில் ஒரு கோட்டமும் குடைவரையாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேற்குக்கோட்டத்தில் பிள்ளையார் இலலிதாசனத்தில் வலம்புரியாக காட்டப்பட்டுள்ளார். கரண்ட மகுடம், சரப்பளி, தோள்வளைகள், கைவளைகள் சிற்றாடை ஆகியவை உள்ளன. வலத்தந்தம் முழுமையாக இருக்க இடத்தந்தம் உடைந்த நிலையிலுள்ளது. கடகத்தில் பின்கைகள் சிதைந்துள்ளன. வலது முழங்கைமேல் உள்ள வலைக்கைப்பொருளை சிதைவின் காரணமாக அடையாளம் காணமுடியவில்லை இடமுன்கை தொடைமேல் கடகமாக உள்ளது, பாதத்தின் மேற்புறம் தெற்கு பார்வையாகுமாறு இடக்கால் கிடையாக அமைய, வலக்கால் குத்துக்காலாகப் பாதம் பார்சுவத்தில் திருப்பப்பட்டுள்ளது.

கோயில் அடையாளம்

இந்த கோயில் முற்காலப் பாண்டியர்களால் செதுக்கப்பட்டது. இது விஷ்ணுவுக்கான கோயில் என்பதை கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை 1928-1929 ஆண்டுகளில் கேரளா சொசைட்டி பேப்பர்ஸ் என்னும் தொல்லியல் இதழில் விரிவாகப் பதிவுசெய்துள்ளார். குறத்தியறைக்கு அருகிலிருக்கும் குறவன்தட்டுவிளையில் உள்ள ஒரு ஒரு தோட்டத்திலுள்ள திருமாலைப்போலவே இந்த குகையிலுள்ள திருமால் சிலையும் உள்ளது என்று கவிமணி குறிப்பிடுகிறார். அச்சிலை இப்போது அங்குள்ள சுடலைமாடன் கோயிலில் உள்ளதாக ஆய்வாளர் தெ.வே.ஜெகதீசன் குறிப்பிடுகிறார்.

இக்குடைவரைக்கோயிலின் பெயர் குன்றப்பள்ளி என்று கல்வெட்டுகள் தெரிவிப்பதாக பேராசிரியர் அ.கா. பெருமாள் தெரிவிக்கிறார். இப்பெருமாளின் பெயர் கோலப்பெருமாள் என்று இங்குள்ள கல்வெட்டில் செய்து உள்ளது. இந்த கோயிலுக்கு நிபந்தங்களும் பொன்கொடையும் அளிக்கப்பட்டதை அக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

இக்கோயிலின் அருகே தாழக்குடி என்னும் ஊரில் ஔவையாருக்கு இன்னொரு ஆலயம் உள்ளது. ஔவையார் வழிபாடு இப்பகுதியிலுள்ள நாட்டார் வழிபாடாக இருந்துள்ளது. ஔவையார் என சொல்லப்படுவது சங்கக் கவிஞர் ஔவையாராக இருக்க வாய்ப்பில்லை. அன்னை என்பதன் இன்னொரு சொல் ஔவை. இது தொன்மையான தாய்த்தெய்வ வழிபாடாக இருக்கலாம்.

குமரிமாவட்டத்தில் சிதறால் மலையிலுள்ள கல்வெட்டு குறத்தியறையார் என்னும் சமணர் கொடுத்த கொடையை குறிப்பிடுகிறது. இவ்வூரின் பெயர் குறத்தியறை என உள்ளது. இந்த தாய்த்தெய்வ வழிபாட்டு சமணத்திலும் இருந்திருக்கலாம் என ஆய்வாளர் ஊகிக்கிறார்கள். பெருமாள் கோயிலாக இருந்த இந்த குடைவரை பின்னர் நாட்டார் வழிபாட்டுக்குள் வந்திருக்கலாம்.

இக்கோயிலை முற்காலப் பாண்டியர் காலத்து பத்து ஆலயங்களில் ஒன்றாக அடையாளம் கண்டுள்ள தமிழக அரசு தொல்லியல் துறை இதை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவித்துள்ளது.

தொன்மங்கள்

இங்கே திருமணம் உறுதியானபின் வந்து ஒரு தாம்பாளத்தை வைத்து வழிபட்டால் அதில் பெண்ணுக்கான நகைகளும் சீர்களும் ஔவையாரால் வைக்கப்பட்டு அளிக்கப்பட்டன என்று தொன்மம் இருந்துள்ளது. ஒருமுறை ஒருவன் அப்படி சீர் வைக்கப்படும்போது அதை ஒளிந்திருந்து பார்த்தமையால் அதன்பின் சீர் வைக்கப்படுவதில்லை.

நாட்டார் தெய்வமான வீரப்புலையனுக்கு திருமணம் ஆகி குழந்தை இல்லாத நிலையில் அவ்வையாரம்மனை வழிபட்டு குழந்தைப்பேறு பெற்றான் என்ற தொன்மும் உள்ளது.

வழிபாடு

இந்த ஆலயத்தில் ஔவையாரை திருமணத் தடைநீங்கவும், திருமணவாழ்வு சிறப்புற அமையவும் மங்கல அன்னையாக வணங்குகிறார்கள். ஆடி மாதம் செவ்வாய்க் கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன. சர்க்கரை, தேங்காய், ஏலம், சுக்கு, பச்சரிசி மாவு ஆகியவற்றை கலந்து ஆலயவளாகத்திலேயே கொழுக்கட்டை செய்து அதை படைத்து வழிபடுவது வழக்கம். கொழுக்கட்டையை ஆவியில் அவிக்காமல் நீரில் போட்டு வேகவைப்பதனால் இது கூழ்க்கொழுக்கட்டை என்றும் அழைக்கப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page