under review

ஐஸ்வர்யா

From Tamil Wiki
ஐஸ்வர்யா (V. ISwarya)

ஐஸ்வர்யா (V. ISwarya) (பிறப்பு: டிசம்பர் 23, 1987) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கங்கள் செய்து வருகிறார். ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஐஸ்வர்யா தமிழ்நாட்டிலுள்ள சென்னை நகரத்தில் நெ.ச. வைத்தியநாதன், சு. இந்திரா இணையருக்கு ஒரே மகளாக டிசம்பர் 23, 1987-ல் பிறந்தார். சென்னை அசோக் நகரில் உள்ள ஜி.ஆர்.டி. மகாலட்சுமி வித்யாலயாவில் பள்ளிக்கல்வி பயின்றார்.

தேனாம்பேட்டை ஜெ.பி.ஏ.எஸ்(J.B.A.S) மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் "Our Human Mystery: The Romantic Exploration of Consciousness in Tom Stoppard's Later Plays" என்ற தலைப்பில் ஆங்கில நாடகத்துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

ஐஸ்வர்யாவின் முதல் மொழியாக்கம் ஜெயமோகனின் அம்மையப்பம் (Ammaiyappam) 2022-ல் மொழி பரிசின் தேர்வுப்பட்டியலில் அ.முத்துலிங்கத்தின் சிறப்புப் பரிந்துரையுடன் இடம்பெற்றது. இவரின் முதல் நூல் 'Students Etched in Memory' பெருமாள் முருகனின் 'மனதில் நிற்கும் மாணவர்கள்' நூலின் ஆங்கில மொழியாக்கமாக பென்குயின் ராண்டம் ஹவுஸ் வழியாக 2025-ல் வெளியானது.

காலச்சுவடு, ஃப்ரண்ட்லைன், தி ஹைஃபென் ஆகிய இதழ்களில் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன. டி.எஸ். எலியட், டாம் ஸ்டாப்பார்ட்(Tom Stoppard) ஆகியோரைத் தன் ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார்.

விருதுகள்

  • சவுத் ஏசியா ஸ்பீக்ஸ் (South Asia Speaks) மொழிபெயர்ப்பிற்கான ஆய்வுநல்கைக்காக அருணவ சின்ஹாவின் நெறியாள்கையில் தேர்வு(2024).

நூல் பட்டியல்

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு
  • Students Etched in Memory by Perumal Murugan
  • One Million Footsteps by Jeyamohan

இணைப்புகள்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Mar-2026, 18:12:05 IST