under review

எ. சுப்பராயலு

From Tamil Wiki
எ. சுப்பராயலு

எ.சுப்பராயலு (பிறப்பு: டிசம்பர் 5, 1940) வரலாற்றாசிரியர், தொல்லியல், கல்வெட்டு ஆய்வாளர், இதழாசிரியர், பதிப்பாசிரியர். தமிழ்க் கல்வெட்டு சொல்லகராதியைத் தொகுத்தவர். சோழர் கால வரலாற்றாய்வாளர். எ. சுப்பராயலு தமிழ்நாட்டில் தற்போதுள்ள முதன்மை வரலாற்றாசிரியர், கல்வெட்டு ஆய்வாளராகக் கருதப்படுகிறார். இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள முக்கியமான கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆய்வு மாணவர்களுக்கு வரலாறு, தொல்லியல் சார்ந்த வகுப்புகள் எடுத்துள்ளார். இந்தோ-ஜப்பானிய தொல்லியல் ஆய்வுத்திட்டத்தின் கீழ் வியட்னாம், லாவோஸ், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, கம்பூச்சே, இலங்கை ஆகிய நாடுகளில் ஆய்வு மேற்கொள்ள உருவாக்கப்பட்ட குழுவில் இருந்தவர். பல்கலைக்கழகங்கள், அரசு நிறுவனங்கள் பலவற்றில் தொல்லியல் துறை சார்ந்த தலைவராக பொறுப்புகள் வகித்துள்ளார்.

எ. சுப்பராயலு

வாழ்க்கைக் குறிப்பு

எ. சுப்பராயலு திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தில் சின்னக்கலயம்புத்தூரில் டிசம்பர் 5, 1940-ல் பிறந்தார். தனது பள்ளிப்படிப்பைப் பழனியில் முடித்து மதுரைத் தியாகராசர் கலைக்கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பண்டைய வரலாற்று தொல்லியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1968-ல் அத்துறையில் எம்.லிட்., பட்டத்திற்காகச் 'சோழநாட்டு அரசியல்சார் நிலவியல்' (Political Geography of Chola Country) என்ற பொருளில் ஆய்வேடு செய்தார். இந்த ஆய்வேடு பர்டன் ஸ்டெயின், பேரா. நொபுரு கராஷிமா போன்ற தலைசிறந்த பேராசிரியர்களால் பாராட்டப்பெற்றது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இந்த ஆய்வு நூலை வெளியிட்டுள்ளது. மதுரைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும்போது 'இடைக்காலத் தென்னிந்தியாவில் அரசு' என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சுப்பராயலு.jpg

எ. சுப்பராயலு உஷாவை மணந்தார். கோவையில் தனது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். அவரது இல்லத்தின் முன் உள்ள அறையில் உள்ள கணினியும் ஆய்வாளர் பயன்பாட்டில் எப்போதும் இருக்கும்.

ஆசிரியப்பணி

சுப்பராயலு1.png

தமிழ்நாடு அரசுக் கல்லூரிகளில் மேலூர், திருவாரூர் முதலிய இடங்களில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். மதுரைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் விரிவுரையாளராகப் (1973-1975) பணியாற்றினார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியனின் நன்மதிப்பு இவருக்கு இருந்தது. எ. சுப்பராயலுவின் வழிகாட்டுதலின் கீழ் பத்து ஆய்வாளர்கள் முனைவர் பட்டமும், இருபது ஆய்வாளர்கள் இளம் ஆய்வாளர்கள் பட்டமும் பெற்றுள்ளனர்.

ஆய்வு வாழ்க்கை

Subbarayalu1.jpg

எ.சுப்பராயலுவின் ஆய்வுப்பணிகளை பார்வை நூல் உருவாக்கல், அமைப்புகளையும் ஆய்வு மாணவர்களையும் உருவாக்குதல், ஆய்வுத்திட்டங்களை மேற்கொள்ளுதல், ஆய்வு நூல்களையும் கட்டுரைகளையும் எழுதி வெளியிடல் என்று பிரிக்கலாம்.

பார்வை நூல் உருவாக்கல்
Subbarayalu2.jpg

சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் பிரிவில் தொடர்ந்து ஆய்வுப்பணியை மேற்கொள்வதற்கு பேரா. டி.வி. மகாலிங்கம், எ. சுப்பராயலுவுக்கு வாய்ப்பளித்தார். தமிழ்நாடு, கேரள மாநிலக் கல்வெட்டு ஊர்வாரி அட்டவணைப்படுத்தும் திட்டமாக இது அமைந்தது. பல தொகுதிகளாக இவ்வாய்வுத் திட்டநூல் டி.வி. மகாலிங்கம் வழிகாட்டுதலுடன் வெளிவந்தது. இடைக்காலக் கல்வெட்டுகள் பற்றி ஆய்வு செய்வதற்கு இத்தொகுதிகள் தொல்லியல் ஆய்வாளருக்கு பயன்படுபவை.

டோக்கியோவில் அயலியல் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகச் சென்றார் (1973-75). அங்கு பேரா. கராஷிமாவுடன் (N.Karashima) இணைந்து சோழர்கால ஆள்பெயர்களைப் புள்ளியியல் முறையில் ஆய்வுசெய்தார். இவ்வாய்வு பின்னர் மூன்று தொகுதிகள் கொண்ட நூலாக வெளிவந்தது. கணினியைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட இவ்வாய்வு சோழர்கால நிர்வாகம், சமூகப் பொருளாதார அரசியல் நிலையை ஆள்பெயர்கள் மூலம் அறிந்துகொள்ள உதவும் ஆழமான ஆய்வாகும்.

2002-ல் "தமிழ் கல்வெட்டுச் சொல்லகராதி" என்ற தலைப்பில் அகராதி வெளியிட்டார். இது கல்வெட்டுச்சொல் (தடித்த எழுத்தில்), இலக்கணக்குறிப்பு, பொருள், சொல்வரும் கல்வெட்டின் காலம், மேற்கோள்பாடம் (சாய்வெழுத்தில்), சுட்டு நூல், இலக்கணக்குறிப்பில் பெயர், வினை, இடை, உரி என்ற முதனிலைப்பாகுபாடு ஆகியவை காட்டப்பட்டுள்ளது. பொ.யு 400 - 1800 வரையுள்ள கல்வெட்டுக்களில் உள்ள சொற்களுக்கு பொருள் தரப்பட்டுள்ளது.

சோழநாடு, தொண்டைநாடு, பாண்டியநாடு, கொங்குநாடு முதலிய பெரிய நாடுகளிலுள்ள கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் நாடு, கூற்றம் போன்ற உள்நாட்டுக் குறுநாட்டுப் பிரிவுகள் அரசால் உருவாக்கப்பட்ட நிர்வாகப்பிரிவுகள் அல்ல. இவை வேளாண் சமூக, இனமரபு, வட்டார நிலவியல் பிரிவுகள் என்ற கருத்தை 'சோழநாட்டு அரசியல்சார் நிலவியல்' என்ற ஆய்வேட்டின் மூலம் முதன்முதலில் பேராசிரியர் வெளிப்படுத்தினார். இவ்வாய்வு நூலே இளம் தலைமுறையினர் பலருக்கு இன்றும் வழிகாட்டியாக உள்ளது.

ராமாராவ் என்பவரிடமிருந்த 72 தனியார் ஆவணங்களை ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் சேகரித்து அதை தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு அன்பளித்தார். சிதைந்த நிலையிலிருந்த எட்டு ஆவணங்கள் நீங்கலாக 64 ஆவணங்களை "திருச்சிராப்பள்ளி மாவட்ட ஓலை ஆவணங்கள்" என்ற பெயரில் வெளியிட்டார்.

ஆய்வுத் திட்டங்கள்
காட்டு மன்னார்குடி கோவில்

தொல்லியல் அறிஞர் என்ற முறையில் 1983-2001 காலகட்டத்தில் தான் சுப்பராயலு தலைமையில் வல்லம் (1984), கொடுமணல் (1985-1990), இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பெரியபட்டணம் (1987) முதலிய இடங்களில் அகழாய்வுகள் செய்யப்பட்டன. அவர் தமிழ்நாட்டுத் தொல்லியல், கல்வெட்டு முதலிய ஆய்வுகளுக்காக தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது வளர்ச்சிப் பணிகள் செய்தார். கொடுமணலைப் புலவர் செ. இராசுடன் இணைந்து உலகறியச் செய்தார்.

பேராசிரியர் நொபுரு கராஷிமா குழுவினருடன் இணைந்து இலங்கையிலும் கிழக்காசிய நாடுகளிலும் பயணம்செய்து பல அரிய கண்டுபிடிப்புகளை இவர் வெளிப்படுத்தினார். தென்னிந்திய வெளியுலகப் பண்பாட்டுத் தொடர்புகளை வெளிப்படுத்தும் ஆய்வு நூலாக இது வெளியிடப்பட்டது.

திருச்சி மாவட்டக் கிராமங்களில் நிகழ்ந்துள்ள சமூகப் பண்பாட்டு மாறுதல்களை ஆய்வு செய்யும் இந்திய-ஜப்பானிய கூட்டுத்திட்டத்தில் இருந்தார். தென்னிந்தியாவில் சீனர்கள் நிகழ்த்திய பீங்கான் வணிகம் குறித்த இந்திய-ஜப்பான் ஆய்வுத்திட்டத்தில் இருந்தார். தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனும் இலங்கையுடனும் தென் இந்தியா கொண்டிருந்த வாணிபப் பண்பாடு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட இந்திய-ஜப்பானிய கூட்டுத்திட்டத்திலும் உறுப்பினராக இருந்தார்.

ஆய்வு மாணவர்கள்

பிரெஞ்சு இந்திய நிறுவனத்தின் மூலம் தென்னிந்திய வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து 'தென்னிந்திய வரலாற்றுமுறை நிலவியல்' ஆய்வுத் திட்டத்தைச் செயல்படுத்தினார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இவர் பணிபுரிந்த காலத்தில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்த தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள் கலந்துகொண்ட கருத்தரங்குகள் பல தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றன.

அமைப்புப் பணிகள்

சுப்பராயலு தமிழகத் தொல்லியல் கழகம் என்ற அமைப்பை நிறுவினார். தமிழகத் தொல்லியல் கழகத்தின் மூலம் பல துறைகளில் பணிபுரியும் தொல்லியல் ஆய்வாளர்கள், ஆர்வலர்களைத் திரட்டி தொல்லியல் தொடர்பான செய்திகளையும் கல்வெட்டுகளையும் வெளியிட்டு வருகிறார். ஆண்டுக்கு ஒருமுறை நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் இவ்வமைப்பில் கலந்து கொள்கின்றனர்.

இதழியல்

தமிழ தொல்லியல் கழகம் சார்பில் 'ஆவணம்' என்ற பெயரில் இதழை நடத்தி வருகிறார். இதுவரை (2025) முப்பத்து நான்கு இதழ்கள் வெளிவந்துள்ளன. 1992 முதல் 1997 வரை இதன் ஆசிரியராக இருந்தார். இதில் தொல்லியல் அகழாய்வுச் செய்திகள், ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளின் மூலபாடங்கள், நூற்றுக்கணக்கான செப்பேட்டு வாசகங்கள், ஓலை ஆவணங்கள் ஆகியவை வெளிவந்துகொண்டிருக்கின்றன.

பதிப்புப்பணி

சென்னைப் பல்கலைக்கழகப் பணிக்குப் பின்னர் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழ்நாட்டுத் தொல்பழங்காலம், சங்ககாலம் குறித்த நூல்கள் வெளிவருவதற்கு உதவிப் பதிப்பாசிரியராக எ.சுப்பராயலு இருந்தார்.

பொறுப்புகள்

எ. சுப்பராயலு இந்திய வரலாற்று ஆய்வுக்கழகம், தென்னிந்திய வரலாற்று ஆய்வுக்கழகம், இந்தியக் கல்வெட்டாய்வுக் கழகம், இந்திய நாணயவியல் கழகம், தமிழ்நாடு வரலாற்று ஆய்வுக்கழகம் ஆகியவற்றில் உறுப்பினராகவும் பொறுப்பாளராகவும் இருந்து பணியாற்றி யுள்ளார்.

  • எ. சுப்பராயலு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 1983-2001 காலகட்டங்களில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறைத் தலைவராக இருந்தார்.
  • பாண்டிச்சேரி பிரெஞ்சு இந்திய நிறுவனத்தின் இந்தியவியல் துறைத் தலைவராகவும் (2008-2014) சுப்பராயலு பணியாற்றியுள்ளார்.
  • தமிழகத் தொல்லியல் கழகத்தினைத் தொடங்கி வைத்தார். இன்றும் அதன் அமைப்பாளராக இருந்து அதனை வழிநடத்திவருகிறார்.

வரலாற்றாய்வு இடம்

எ. சுப்பராயலு தற்போதுள்ள வரலாற்றாசிரியர்களில் முதன்மையானவராகக் கருதப்படுகிறார். எ. சுப்பராயலு பி.டி. சீனிவாச ஐயங்கார், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, கே.கே. பிள்ளை ஆகிய முக்கிய வரலாற்றாசிரியர்களின் நிறையில் வருபவர். சோழர் கால வரலாறு குறித்து எ. சுப்பராயலு செய்து வெளியிட்ட ஆய்வு முடிவுகள் முக்கியமானவை. தமிழ்நாட்டில் சோழ நாடு, தொண்டை நாடு, பாண்டிய நாடு, கொங்கு நாடு போன்ற பெரிய நாடுகளுக்குள் (மண்டலம்) காணப்படும் உள்நாடு என்பது நிர்வாக பிரிவாக அமைக்கப்பெற்றது என பொ.யு. 1968 வரை நம்பப்பட்டு வந்தது. எ. சுப்பராயலு சோழ அரசைக் கொண்டு அதனை விரிவாக ஆய்வு செய்து உள்நாடுகள் எனக் குறிப்பிடப்படும் நாடு, கூற்றம் ஆகியவை நிர்வாக பிரிவுகள் அல்ல அவை வேளாண் சமூக, இனமரபு, வட்டார நிலவியல் பிரிவுகள் என்பதை தனது ஆய்வு நூலில் (Political Geography of the Chola Country) முன்வைத்தார். பின்னால் சோழர் வரலாற்றை ஆய்வு செய்த பர்டன் ஸ்டெயின், நொபுரு கராஷிமா ஆகியோரின் ஆய்விற்கு எ. சுப்பராயலுவின் இவ்வாய்வு முன்னோடி முயற்சியாக அமைந்தது.

ஜப்பானிய ஆய்வாளரான நொபுரு கராஷிமாவுடன் இணைந்து சோழ கல்வெட்டுகளில் காணப்படும் பெயர்கள் மூலம் சோழ வரலாற்றை முன்வைக்கும் நூலும் ஒரு முன்னோடி முயற்சியாகக் கருதப்படுகிறது. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, பர்டன் ஸ்டெயின், நொபுரு கராஷிமா என சோழர் வரலாறு தொடர்ந்து முதன்மை ஆய்வாளர்களால் எழுதப்பட்ட பின்பும் அதிலுள்ள விடுபடல்களை உரிய கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் விளக்கியும், விரிவாக்கியும் முன் சென்றவர். தொண்ணூறுகள் வரை நம்பப்பட்டு வந்த சோழர் ஆட்சிகால ராணுவ பிரிவான வலங்கை - இடங்கை பிரிவு விவசாய நிலமுடையவர்களும் - வணிகர்களும் என்ற பார்வையை கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் மறுத்து இரு பிரிவுகளும் குறிப்பிட்ட சாதிப்பிரிவுகளில்லை அவை தொகுக்க சாத்தியமான பல சாதி குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்பதை முன்வைத்தவர். ஆரம்பத்தில் ராணுவ பிரிவுக்காக உருவாக்கப்பட்ட இவர்கள் பின்னாளில் நிலவுடைமையாளர்களாக மாறி பழைய வேளாண், பிராமண நிலவுடைமையாளர்களுக்கு எதிராக இருதரப்பும் சேர்ந்து கலகம் செய்தது வரை கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் முன்வைத்தவர்.

தமிழ்நாட்டில் அச்சுவடிவம் பெற்ற அனைத்து கல்வெட்டுகளுக்கும் காலத்தைக் குறிப்பிடும் அட்டவணை நூலான தமிழ் கல்வெட்டுச் சொல்லகராதியை உருவாக்கி அதற்கு முன் கால குழப்பமிருந்த பல கல்வெட்டுகளுக்கு தெளிவான கால வரையறையை உருவாக்கியவர்.

மதிப்பீடுகள்

"தமிழ்நாட்டுத் தொல்லியல் கல்வெட்டாய்வில் ஆழமாகத் தடம் பதித்தவர் பேராசிரியர். எ.சுப்பராயலு. தமிழ்நாடு தொடர்பாக அவர் செய்த ஆய்வுகள் இந்தியாவைத் தாண்டி உலகெங்கும் அறிந்து போற்றும் தலைசிறந்த ஆய்வுகளாகும். தமிழ்நாட்டைத் தாண்டிப் பிற மாநிலத்தவர்களும் வெளிநாட்டவர்களும் அவரது ஆய்வு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் நன்கு அறிந்தவர்களாக இருக்கிறார்கள்." என வெ. வேதாச்சலம் மதிப்பிடுகிறார்.

"அச்சில் வெளியான கல்வெட்டுக்கள் சிலவற்றில் அதன் காலம்(ஆண்டு) குறீப்பிடப்படாது இருக்கும். சிலவற்றில் தவறாக குறிப்பிடப்பட்டு இருக்கும். இதனால் இத்தகைய கல்வெட்டுக்களைப் பயன்படுத்துவது இடர்பாடானதாய் இருக்கும். இக்குறையைப் போக்கும் வகையில் அச்சுவடிவம் பெற்றுள்ள கல்வெட்டுக்கள் அனைத்திற்கும் காலத்தைக் குறிப்பிடும் அட்டவணை நூல் ஒன்றை எ.சுப்பராயலு தயாரித்திருப்பது முக்கியமானது. உறுதியாகக் காலத்தைக் கணிக்க முடியாதவற்றையும் உள்ளபடி பதிவு செய்துள்ளார். இது ஒரு அவசியமான கடினமான பணி" என பேராசிரியர் ஆ. சிவசுப்ரமணியம் தமிழ் கல்வெட்டுச் சொல்லகராதி பற்றி குறிப்பிட்டுள்ளார்.

விருதுகள்

  • கொல்கத்தா ஏசியாட்டிக் சொசைட்டி இந்திய வரலாற்றுக்கு அவர் செய்த பணிகளைப் பாராட்டித் தங்கப் பதக்கத்தோடு விருது வழங்கியது.
  • அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக்கழகமும் விருது.
  • மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 'தமிழ்ச் செம்மல்' விருது.
  • செம்மொழி ஞாயிறு விருது - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

நூல் பட்டியல்

  • தமிழ் கல்வெட்டியலும் வரலாறும் (எ. சுப்பராயலு, செ.இராசு)
  • South Indian Under Cholas
  • Kaveri (studies in Epigraphy and Archaelogy)
  • தமிழ்க்கல்வெட்டுச் சொல்லகராதி முதல் தொகுதி (அ-ஞெ) (ஆசிரியர்: எ. சுப்பராயலு)
  • Archaeological Survey of India - South Indian Inscriptions - vol XXXIV (Inscriptions collected during 1914) (editor: Y. Subbarayalu) (Issued by: T. Ravishankar)
  • Vijaya Nagara Rulers (Part I) (ICHR, 2014) (Co editor)
  • திருச்சிராப்பள்ளி மாவட்ட ஓலை ஆவணங்கள் (கல்வெட்டியல் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம்)
  • Vijayanagar Rule in Tamil country as revealed through a statistical study of revenue terms in inscriptions (Y. Subbarayalu, N.Karashima, P.Shanmugam)
  • Concordance of the names in cola inscriptions (Y. Subbarayalu, N.Karashima, Toru Matsui)
ஆய்வுக்கட்டுரைகள்
  • Kudi and Kudumbin - Landowners or Landless Cultivators (Nehru memorial Museum and Library - workshop on - The Social worlds of Pre Modern Transactions: Perspectives from epigraphy and History)
  • A Note on the navy of chola state - Y. Subbarayalu
  • தமிழக வரலாற்றில் கங்கர்

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jul-2025, 11:40:39 IST