under review

எழூஉப்பன்றி நாகன் குமரனார்

From Tamil Wiki

எழூஉப்பன்றி நாகன் குமரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் அகநானூறில் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கை குறிப்பு

எழூஉப்பன்றி நாகன் குமரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். குறிஞ்சி நிலத்து வேடர் மக்களைக் குறிக்கும் சொற்களில் ஒன்று நாகன். குமரன் எனும் சொல் முருகக் கடவுளை வழிபடு தெய்வமாக கொண்டவர்கள் வைத்து கொள்ளும் பெயர். எழூஉப்பன்றி என்பது புலவரின் தொழிற் சிறப்பை கூறும் ஆகுபெயராக இருக்கும் என கருதப்படுகிறது. எனவே புலவர் வேடர் குலத்தை சேர்ந்த குமரன் என்னும் இயற்பெயர் கொண்டவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

எழூஉப்பன்றி நாகன் குமரனார் பாடிய இரு பாடல்கள் அகநானூறில்(138, 240) இடம்பெற்றுள்ளன. 138 -ம் பாடல் இரவு காலத்தில் வந்து வீட்டிற்கு வெளியே தனக்காக காத்திருக்கும் தலைவனுக்குக் கேட்கும்படி தோழியிடம் தலைவன் தன்னை மணம் செய்து கொள்ளாமையால் தனக்கு ஏற்படும் துயரைத் தலைவி உரைப்பதாக குறிஞ்சித் திணையிலும் அனைந்தது. 240-ம் பாடல் இரவில் வந்த தலைவனிடம் பகலில் வந்தால் தலைவியுடன் கூடி இன்பம் தூய்க்கலாம் என தோழி கூறுவதாக நெய்தல் திணையில் அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • காதல் கொண்ட மகளிர் மேல் முருகு என்னும் தெய்வம் குடியேறியதாக கருதி, அத்தெய்வத்தின் பிடியிலிருந்து இளமகளிரை விடுவிக்க அன்னையர் பூசகரைக் கொண்டு சடங்குகள் செய்தனர்.
  • கட்டுவிச்சியும் வேலனும் வேப்பிலையாலும் நீல மலராலுமான மாலையை சூடி கொண்டு வருவர். ஒசைமிக்க ஒலிகளை எழுப்பும் இன்னிசை கருவிகளை வாசிப்பர். மனையில் முருகு தெய்வத்திற்கு உரிய பூசைகள் செய்து தெய்வம் எழுந்தருளச் செய்வர். முருகுக்கு உரிய கடம்ப மலரையும், ஊர்தியான யானை குறித்தும் போற்றிப் பாடி வழிபாடு செய்வர். பின்னர் முருகு தெய்வமேறிய இளமகளிரை சுற்றி வட்டமாக கூடி நின்று இரவு முழுவதும் நடனம் ஆடுவர்.
  • மலை நாட்டைச் சேர்ந்த ஆடவர் இருள் வழியில் தம் காதலியருக்காகத் துணிந்து மலையிறங்கி வருவர். பாம்பின் கண்களும் வண்டுகளும் ஒன்று போல் மாயம் காட்டும் கடும் வழி அது.
  • ஞாழல் மரத்தின் பூக்கள் சிவப்பாகவும் கிளைகள் கருமை நிறத்திலும் காணப்படும். நாரைகள் ஞாழல் மரத்தில் கூடுகட்டி குஞ்சு பொரிக்கும். குஞ்சுகளுக்கு உணவூட்டும் பொருட்டு தனியே அவற்றை விட்டுவிட்டு நீலமணி மலர்கள் பூத்திருக்கும் கரிய நீரோடும் நெய்தலின் உப்பங்கழியில் இரை தேடும்.
  • பரதவர் ஆண்கள் தம் பிள்ளைகளுடன் பகலில் திமிலில் விளக்கேற்றி கொண்டு மீன் பிடித்து வருவதற்காக தமது ஆண் பிள்ளைகளுடன் கடலுக்கு சென்று விடுவர். அப்படி செல்பவர் இரவிலும் திரும்ப மாட்டார்கள்.
  • மீனவப் பெண்கள் மாலை நேரத்தில் கடலன்னையை வணங்கும் பொருட்டு கூட்டமாக கிளம்பி செல்வர்.
  • கடற்கரைச் சோலையில் புன்னை மரங்கள் பூத்தும் மணல்வெளியில் செருந்தி கொடிகளின் பூக்கள் மலர்ந்தும் காணப்படும்.
  • உவமைகள்: தலைவியின் நீர் தளும்பி நிற்கும் கண்கள், பனியில் நனைந்த மலருக்கு ஒப்பாகக் கூறப்பட்டன. தலைவியின் முலையானது கோங்கம்பூவிற்கு உவமை கூறப்பட்டது. கட்டுவிச்சியும் வேலனும் முழங்கும் ஒலி வெற்றி மிக்க பாண்டியனது நாட்டில் அமைந்திருக்கும் பொதிகை மலையில் இருந்து பெருக்கெடுக்கும் அருவியின் ஒலிக்கு இணையாக இருக்கிறது.

பாடல் நடை

அகநானூறு - 240

  • திணை: நெய்தல் கூற்று:தோழி இரவுக்குறி வந்த தலைமகற்குப் பகற்குறி நேர்ந்தது.

செவ் வீ ஞாழற் கருங் கோட்டு இருஞ் சினைத்
தனிப் பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை
மணிப் பூ நெய்தல் மாக் கழி நிவப்ப,
இனிப் புலம்பின்றே கானலும்; நளி கடல்
திரைச் சுரம் உழந்த திண் திமில் விளக்கில்
பல் மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய,
எந்தையும் செல்லுமார் இரவே; அந்தில்
அணங்குடைப் பனித் துறை கைதொழுது ஏத்தி,
யாயும் ஆயமோடு அயரும்; நீயும்,
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி,
கோங்கு முகைத்தன்ன குவிமுலை ஆகத்து,
இன் துயில் அமர்ந்தனைஆயின், வண்டு பட
விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர்,
பூ வேய் புன்னை அம் தண் பொழில்,
வாவே தெய்ய, மணந்தனை செலற்கே.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-May-2025, 10:21:09 IST