எழில்முதல்வன்
மா.இராமலிங்கம் (எழில்முதல்வன்; எழில் முதல்வன்; மா.ராமலிங்கம்) (பிறப்பு: அக்டோபர் 5, 1930) பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற தமிழ்த் துறைத் தலைவர், திறனாய்வாளர், புனைவெழுத்தாளர், மரபுக் கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். புதிய உரைநடை நூலுக்காக சாகித்ய அகாதெமி பரிசு பெற்றார். புதினத்துறையில் பல ஆராய்ச்சிகளுக்குக் காரணமாய் அமைந்தார்.
பிறப்பு, கல்வி
மா.இராமலிங்கம் நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள தகட்டூரில் வ. மாணிக்கம் - மா. இராமாமிருத அம்மையார் இணையருக்கு அக்டோபர் 5,1930-ல் பிறந்தார். உயர்நிலைக் கல்வியைத் திருத்துறைப்பூண்டியிலும், சென்னை மாநிலக்கல்லூரியிலும், கும்பகோணம் அரசு கல்லூரியிலும் முறையே இளங்கலைப் பட்டமும், முதுலைப் பட்டமும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக 1975 -ல் முனைவர் பட்டம் பெற்றார். மு. வரதராசனின் மாணவர்.
1965-ம் வருடம் கமலா அம்மையாரை மணந்து கொண்டார்.
கல்விப்பணி
- 1964-துணை விரிவுரையாளர், கோவை அரசு கலைக் கல்லூரி
- 1964 -1974 துணைப்பேராசிரியர், சென்னை மாநிலக் கல்லூரி
- 1974-1985 மன்னார்குடி, இராமநாதபுரம், கோயமுத்தூர், இராசிபுரம், பொன்னேரி, கும்பகோணம் கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் துணைத்தலைவர்
- 1985 - 2000 தமிழ்த்துறைத் தலைவர், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம்.
இலக்கியப் பணி
மா.இராமலிங்கம் பெருமழைப் புலவருக்கும் கவிஞர் சுரதாவுக்கும் நெருங்கிய நண்பராக இருந்தார். பாரதிதாசன் நடத்திய குயில் பத்திரிக்கையில் வெளிவந்த எழில்முதல்வனின் முதல் கவிதையைப் பாராட்டி பாவேந்தர் எழுதிய குறள் வெண்பா
எழில்முதல்வன் நல்லநல்ல செய்யுள் எழுதும்
தொழில்முதல்வன் ஆகின்றான் சூழ்ந்து
எழில்முதல்வனின் முதல் கவிதை தொகுப்பு 1965-ல் வெளியானது. கவிஞர் சுரதா நடத்திய 'இலக்கியம்' என்னும் இதழில் பல கவிதைகளை எழுதினார்.
தமிழ் இலக்கிய விமர்சனம் குறித்து ஏழு புத்தகங்கள் எழுதினார். இவரது நவீன தமிழ் உரைநடை பற்றிய இலக்கிய விமர்சன நூலான 'புதிய உரைநடை' 1981-ம் ஆண்டில் தமிழுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது.
பல மாநிலங்களில் கருத்தரங்குகள் மற்றும் பணிமனைகளில் ஆய்வறிஞராகப் பங்காற்றினார். மலேசியா, யுகோஸ்லேவியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கருத்தரங்குகளில் பங்கு பெற்றார்.
இந்திய இலக்கியங்களை ஆங்கில முலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்தார். இரவீந்திரநாத் தாகூரின் கபீர்தாசரின் நூறு பாடல்கள் என்ற நூலை, ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்தார். இந்நூலை தாகூரின் 150-ஆவது பிறந்த ஆண்டான 2011- ல் 'தமிழ் அலை’ பதிப்பகம் வெளியிட்டது.
இதழியல்
மா. இராமலிங்கம் 'ஓங்குதமிழ்’ என்னும் இதழின் ஆசிரியராக இருந்தார். புவனேஸ்வர் நகரத்திலிருந்து வெளிவந்த உதயதாரகை என்னும் ஆங்கில இதழின் பதிப்பாசிரியர் குழுவில் இரண்டாண்டுகள் இருந்து பணிசெய்தார்.
புவனேஸ்வரிலிருந்து வெளிவந்த உதயதாரகை என்னும் ஆங்கில இதழின் பதிப்பாசிரியர் குழுவில் இரண்டாண்டுகள் பணிசெய்தார்.
அமைப்புப்பணிகள்
- 1988-92 ஆண்டுகளில் சாகித்ய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினராகவும் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
- கி.ஆ.பெ. விசுவநாதம் நடத்திய 'தமிழகப் புலவர் குழு' என்னும் அமைப்பில் இருபதாண்டுகள் உறுப்பினராக இருந்தார்.
இலக்கிய இடம்
எழில்முதல்வன் பாரதிதாசன் பரம்பரையின் இரண்டாம் தலைமுறைக் கவிஞராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், இதழாசிரியராகவும், இலக்கிய விமரிசன நூல்களின் ஆசிரியராகவும் அறியப்படுகிறார். புதினத்துறையில் பல ஆராய்ச்சிகளுக்குக் காரணமாக இருந்தார். புதிய உரைநடை நூலில் தமிழின் உரைநடை உருவாகி வந்த வரலாற்றையும் புதிய உரைநடைக்கான அவசியத்தையும் ஆராய்கிறார்.
பரிசுகள், விருதுகள்
- முதுகலை பயின்ற காலத்தில் G.U.போப் விருது
- பாவேந்தர் பாரதிதாசன் விருது (1991)
- மொழிபெயர்ப்புக்கான நல்லி குப்புசாமி செட்டி திசை எட்டும் விருது
- பாண்டித்துரைத் தேவர் விருது
- தமிழ் வளர்ச்சித்துறை விருது 'விடுதலைக்குப்பின் தமிழ்ச் சிறுகதைகள்' நூலுக்காக
- மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை விருது(2006)- திருச்சி தமிழ்ச் சங்கம்
- சிலம்பாய்வுச்செல்வர், தமிழ்மாமணி விருது, ஆய்புல அண்ணல் விருது, குறள் ஞாயிறு விருது
- புதிய உரைநடை நூலுக்கு1982-ல் சாகித்ய அகாதெமி விருது.
படைப்புகள்
·அபுனைவுகள்
- நாவல் இலக்கியம் (1972)
- இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் (1973)
- புனைகதை வளம் (1973)
- அகிலனின் கலையும் கருத்தும் (1974)
- விடுதலைக்குப்பின் தமிழ்ச்சிறுகதைகள் (1977)
- புதிய உரைநடை (1978)
- இலக்கியத் தகவு (1979)
- திறனாய்வுநெறி (1983)
- நோக்குநிலை (1984)
- உரைகல்லும் துலாக்கோலும் (1989)
- பனிப்பாறையும் சில தீப்பொறிகளும் (1990)
- கவண்கற்களும் சிறகுகளும் (2000)
கவிதைத் தொகுப்புகள்
- இனிக்கும் நினைவுகள் (1966)
- எங்கெங்கு காணினும் (1982)
- இரண்டாவது வருகை (1985)
- யாதுமாகி நின்றாய் (1986)
- தமிழ்க்கனல் (1987)
- எழில்முதல்வன் கவிதைகள் (2000)
புனைகதை நூல்கள்
- பொய்யான இரவுகள் (1973)
- அதற்கு விலையில்லை (1974)
- நாளைக்கும் இதே கியூவில் (1985)
- வாழ்க்கை வரலாறு
- பேராசிரியரியப் போராளி (2013)
மொழிபெயர்ப்புகள்
- மகாகவி உள்ளூர் (1986)
- ஜதீந்திரநாத் சென்குப்தா (1992)
- பாபா பரீத் (1994)
- நிச்சய தாம்பூலம் (2008)
- பொழுது புலர்ந்தது (2009)
- பாகிஸ்தான் கதைகள் (2010)
- கபீரின் நூறு பாடல்கள் (2011)
- கிழக்கு-மேற்கு பாகம்-1
பதிப்பித்த நூல்கள்
- Selected Poems of Bharathidasan (in English)
- Bharathidasan Centenary Souvenir (1991)
- Velvi (வேள்வி) A Collection of seminar Papers in Tamil (1991)
- Medieval Indian Literature in English Translation, Tamil Literature (1100-1800)
- உலகத் திருக்குறள் மாநாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகள் (2000)
- உலகத் திருக்குறள் மாநாட்டு மலர்
- பகவத் கீதை வெண்பா (2004)
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
24-Jun-2023, 19:47:16 IST