under review

எம். ஆஷா தேவி

From Tamil Wiki
ஆஷா தேவி

எம். ஆஷா தேவி (ஜூலை 2, 1944- ஆகஸ்டு 7, 2012) ஒரு திருநங்கை. இவர் மலேசிய இந்திய திருநங்கைகளுக்கு அரணாகத் திகழ்ந்தார். திருநங்கைகளால் 'ஞானி' என்றும் 'பாட்டி' என்றும் அழைக்கப்பட்டவர்.

பிறப்பு

ஆஷா தேவி, ஜூலை 2, 1944 அன்று பிறந்தார். அவருக்கு ஓர் அண்ணனும் ஒரு தங்கையும் உண்டு. தன்னைப் பற்றி அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாததால், ஆஷா தேவியினுடைய தாய் தந்தையரின் பெயர் தெரியவில்லை.

தனிவாழ்க்கை

எம். ஆஷா தேவி, கோலாலம்பூரை பூர்வீகமாகக் கொண்டவர். அவரிடம் இருந்த பெண் தன்மை அவருடைய குடும்பத்தாரால் ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆஷா தேவியை வீட்டிலிருந்து வெளியேற்றினர். அவருடைய தந்தையார் இறந்தபோதும் ஆஷா தேவி வீட்டில் அனுமதிக்கப்படவில்லை. தாயின் இறப்பின்போது காவல் துறை அதிகாரிகளின் துணையோடு சென்று ஈமக்கடன் செய்தார்.

எம்.ஆஷா தேவிக்கு பெண் என்ற முழுத்தகுதி வழங்கப்பட்ட அடையாள அட்டை 29-ஆவது வயதில் கிடைத்தது. எம். ஆஷா தேவி திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தார்.

இந்திய பயணம்

வீட்டிலிருந்து விரட்டப்பட்ட ஆஷா தேவி, தமிழ்நாட்டிற்குச் சென்றார். அங்கு தன்னுடைய வாழ்க்கையை ஏனைய திருநங்கைகளோடு அமைத்துக் கொள்ள முயன்றார். ஆனால் தமிழகத்தில் அடிமைபோல நடத்தப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளானார்.

தமிழகத்தில் இவர் நிர்வாண பூஜையின் வழி 'தாயம்மா கை' வகையில் தன் உறுப்பை நீக்கிக்கொண்டார்.

காண்க: நிர்வாண பூஜை

பின்னர், மற்றொரு திருநங்கையின் உதவியோடு மீண்டும் மலேசியாவிற்கு திரும்பி வந்த ஆஷா தேவி, தொடக்கக்காலத்தில் கோலாலம்பூரில் உள்ள “சௌகிட்” பகுதியில் பாலியல் தொழில் செய்தார். அதன் பின்னர், அதே பகுதியில் ஒரு உணவகத்தைத் தொடங்கிய ஆஷா தேவி தன்னுடைய வாழ்க்கையை மற்ற திருநங்கைகளுக்கு எடுத்துக்காட்டாக அமைத்துக் கொண்டார்.

மலேசியா - சிங்கப்பூரில் 'தாயம்மா கை' முறையில் திருநங்கையாக மாறியவர் ஆஷா ஒருவரே என்பதால் அவரை எல்லா திருநங்கைகளும் தங்களின் தாயாகவே எண்ணி மரியாதை செலுத்தினர்.

பொது வாழ்க்கை

திருநங்கைகளுக்கு அரண்

மலேசிய - சிங்கப்பூர் திருநங்கை அமைப்பின் தலைவியாக எம். ஆஷா தேவி பதவி வகித்தார். இது ஒரு பதிவு பெறாத அமைப்பு. குடும்பத்தினரால் விரட்டியடிக்கப்பட்ட பல திருநங்கைகளுக்கு ஆஷா தேவி அடைக்கலம் கொடுத்தார். மேலும், அவர்களைப் பெண் என்ற முழுத்தகுதியுடைய அடையாள அட்டை பெறுவதற்கும் ஆஷா தேவி உதவினார். அதுமட்டுமல்லாது, அவர்கள் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்குண்டான ஆலோசனைகளையும் பண உதவிகளையும் ஆஷா தேவி வழங்கியுள்ளார்.

சடங்குகள்

இந்தியாவிற்கு சென்று திரும்பியது முதல் திருநங்கை என்பதால் திருநங்கைகள் பின்பற்ற வேண்டிய சடங்குகளை மலேசியாவில் ஆஷா தேவியே வடிவமைத்தார். 'அம்மா பாம்படுத்தி' (அம்மா என்னை ஆசீர்வதியுங்கள்), 'ஜியோ' (நலமாக இரு) போன்ற திருநங்கை குழு குறிகள் இவராலேயே மலேசியாவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

பாஹூச்சாரா தேவி ஆலயம்

மலேசியாவிலுள்ள கிள்ளான் மாநகரில், பண்டமாறான் எனும் இடத்தில் அமைந்திருக்கும் பாஹுச்சாரா தேவியினுடைய ஆலயம் ஆஷா தேவி அவர்களால் வித்திடப்பட்டது. முதன் முதலாக பாஹுச்சாரா தேவியினுடைய சித்திரத்தை மட்டுமே தன்னுடைய இல்லத்தில் வைத்து ஆஷா தேவி பூசை செய்து வணங்கினார். மந்திர உச்சாடனங்கள் ஏதும் அப்போது பயன்படுத்தப்படவில்லை. பின்னாளில், ஆலயம் பெரியதாக எழுப்பப்பட்ட போதும் இவரே முன்னோடியாக இருந்து பூசைகளையும் செய்துள்ளார்.

காண்க: பண்டமாறான் ஜகன்மாதா திருக்கோயில் (மலேசிய இந்திய திருநங்கைகளின் ஆலயம்)

மரணம்

ஆகஸ்டு 7, 2012-ல் தனது 68-ஆவது வயதில் மாரடைப்பால் ஆஷா தேவி காலமானார்.

இலக்கியம்

ஆஷா தேவியின் ஆளுமை ஏற்படுத்திய தாக்கத்தைக் கொண்டு 'சிகண்டி' நாவல் உருவானது என எழுத்தாளர் ம. நவீன் தன் நேர்காணலில் குறிப்பிடுகிறார். மேலும் அந்நாவலை ஆஷா தேவி அவர்களுக்கே சமர்ப்பணம் செய்துள்ளார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Dec-2022, 12:05:57 IST