under review

சிகண்டி (நாவல்)

From Tamil Wiki
சிகண்டி,நாவல்

சிகண்டி மலேசிய தமிழ் எழுத்தாளர் ம.நவீன் எழுதிய இரண்டாவது நாவல். திருநங்கையர் வாழ்வும், மலேசிய நிழல் உலகம் பற்றி சித்திரமும் அடங்கிய நாவல் இது. 2021 இறுதியில் யாவரும் பதிப்பகம் வெளியீடாக வந்தது.

பதிப்பு

ம. நவீன் இந்த நாவலை 2021-ம் ஆண்டு முற்பாதியில் எழுதி முடித்தார். கொரோனா பாதிப்பு காரணமாக பல கட்ட அச்சு தடங்கலுக்கு பின் 2021-ம் ஆண்டின் இறுதியில் யாவரும் வெளியீடாக இந்த நாவல் வந்தது.

பின்புலம்

சிகண்டி நாவல் கோலாலம்பூரில் உருவாகி வந்த சௌகிட், புக்கிட் பிந்தாங், பெட்டாலிங் சாலை என்னும் நிழலுலக இடங்களின் பின்புலத்தில் எழுப்பட்ட நாவல். மலேசியாவின் நிழல் உலகம் தோட்டக்காடுகளில் இருந்து பிழைப்புதேடி நகருக்கு வந்துகொண்டிருந்தவர்களால் எழுபது எண்பதுகளில் படிப்படியாக உருவாகி வந்த சித்திரத்தை அளிக்கிறது.

கதைச்சுருக்கம்

இந்நாவலின் மையக்கதாப்பாத்திரம் தீபன் என்னும் இருபது வயதை கடந்த வாலிபன். குடும்ப சூழ்நிலை காரணமாக லுனாஸ் எனும் சிற்றூரிலிருந்து கோலாலம்பூர் வருகிறான். கோலாலம்பூரில் இருக்கும் சௌவாட் எனும் துணை மாவட்டமும் அதில் உள்ள காராட், சாகார் போன்ற நிழலுலக வீதிகளே இந்நாவலின் களம். மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் வந்த தீபனுக்கு இந்த உலகம் அறிமுகமாகிறது. இங்கே அவனுக்கு திருநங்கை பெண்ணான சராவும், நிழலுலகில் வாழும் காசியும் அறிமுகமாகிறார்கள்.இவர்கள் அனைவரும் வியந்து பார்க்கும் ஆளுமையாக ஈபு எனும் முதிய திருநங்கை இருக்கிறார்.

அதுவரை அனுபவம் இல்லாத ஒரு புதிய உலகம் அது. பரிச்சியமில்லாத அந்த உலகில் நுழைய அவனுள் உள்ள சிறுவன் உந்துகிறான். அவனது சிறுவனின் தன்மையை அழித்து நிழலுலகின் இருளை புகுத்த காசியும் ஷாவும் முயல்கின்றனர். அவனது மாமாவின் மகன் கண்ணன் அவனை தொடர்ந்து சிறுவனின் மனநிலையில் வைத்திருக்கும் கதாபாத்திரமாக வருகிறான். சிறுவனாகவும் இளைஞனாகவும் தடுமாறி நிற்கும் அவன் பாம்பு வித்தை காட்டும் அமிர்கான், ஊக்க மருந்து விற்கும் இந்தோனேசிய இளைஞன் என பலரிடமும் ஏமாந்து அலைக்கழிகிறான், அதன் மறு எல்லையில் அவனுக்கு அன்பை மட்டுமே வழங்க திருநங்கையான சரா வருகிறாள். சரா ஒரு திருநங்கை என உணர்ந்த தருணத்தில் தொடங்கி அவளுடைய ஆளுமையில் அப்பாலினத்தின் கடவுளான பகுச்சரா மாதாவை தீபன் எப்படி கண்டடைகிறான் என்ற இடம் வரைச் சென்று நாவல் முடிகிறது.

கதைமாந்தர்

  • தீபன் - கதைநாயகன
  • சரா - திருநங்கை. தீபனின் காதலி
  • ஈபு (சிகண்டி) - திருநங்கை உலகத்தின் அன்னையாக கருதப்படுகிறவர்
  • நிஷாம்மா- ஈபுவின் தங்கை முறை
  • காசி - சௌவாட்டில் தீபனுக்கு அறிமுகம் ஆகும் இளைஞன்
  • ஷாவ் - பாலியல் தொழில் மற்றும் ரகசிய குழுவின் தலைவன்
  • கண்ணன் - தீபனின் மாமா பையன்
  • ரய்லி - தீபனின் மாமா

இலக்கிய இடம்

மிக வன்மையான ஓர் இருண்ட உலகின் பின்னணியில் தாய்மை, காதல் எனும் பேருணர்வுகளை குறைவாகவும் தீவிரமாகவும் சித்தரிக்கும் நாவல் சிகண்டி. "சமூகத்தின் பார்வையில் பொருளற்றவையென நிகழும் சிறு செயல்களுக்குப் பின்னால் பிரபஞ்சம் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. அப்படியான ஒழுங்கு முறையைப் படைக்கின்ற அன்னையே நிகர் செய்யக்கூடும் என்ற அறிதலே பழங்குடிச் சமூகத்தின் நம்பிக்கையாக இருந்தது. இந்நாவலில் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் திருநங்கைகளை அன்னையராகச் சித்திரித்துப் பிரபஞ்சம் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. அந்தப் பிரபஞ்சத்தின் ஒழுங்கை நிலைநாட்டும் சிகண்டி அன்னையின் தரிசனமாகவே சிகண்டி நாவல் விளங்குகிறது" என விமர்சகர் அர்வின்குமார் குறிப்பிடுகிறார்

உசாத்துணை


✅Finalised Page