under review

எம்.ஜே. பிரதாப் சிங்

From Tamil Wiki
சிங் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சிங் (பெயர் பட்டியல்)
எம்.ஜே பிரதாப் சிங்

எம்.ஜே பிரதாப் சிங் (எம். ஜோசப் பிரதாப் சிங்) (நவம்பர் 20, 1931 - ஜனவரி 18, 2024) தொழிலதிபர், பதிப்பாளர். 1954-ல், 'ஈகிள் டைரி' குழுமுத்தை நிறுவி பல நாட்குறிப்புகளை, குறிப்பேடுகளை அச்சிட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்தார். 1975-ல், பூம்புகார் பதிப்பகத்தைத் தொடங்கினார். அண்ணா, மு. கருணாநிதி, மு.க. ஸ்டாலின், புலியூர்க் கேசிகன், கோவி. மணிசேகரன், ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலரது நூல்களை வெளியிட்டார்.

பிறப்பு, கல்வி

எம். ஜோசப் பிரதாப் சிங் என்னும் எம்.ஜே. பிரதாப் சிங், 1931-ல், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளத்தில், மரிய அந்தோணி நாடார், சேசுமரியாள் இணையருக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தார். வடக்கன்குளத்தில் உள்ள சென். தெரசாள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி கற்றார்.

தனி வாழ்க்கை

எம்.ஜே. பிரதாப் சிங், திருநெல்வேலி மாவட்டம் வடக்கன் குளத்தில் உள்ள, தான் பயின்ற சென். தெரசாள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். பின் விவசாயத் தொழிலை மேற்கொண்டார். சென்னை பாரிமுனையில் பயோரியா பல்பொடி விற்பனையாளராகச் செயல்பட்டார். பின் அச்சு மற்றும் பதிப்புப் பணியில் ஈடுபட்டார். 1959-ல், பாப்பியைத் திருமணம் செய்துகொண்டார். பிள்ளைகள்: ராஜா சுந்தர்சிங், டாக்டர் ஷீலா சத்தியக்குமார், சாம்பிரசாத்.

எம்.ஜே பிரதாப் சிங் - இள வயதுப் படம்

அச்சும் பதிப்பும்

தொடக்கம்

எம்.ஜே. பிரதாப் சிங், வேலை நிமித்தம் சென்னைக்கு வந்தார். அச்சக நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். அச்சுக்கலையின் நுட்பங்களைக் கற்றார். சிறிய அளவில் காலால் இயக்கும் அச்சகம் ஒன்றை ஆரம்பித்து நடத்தினார். ஹோட்டல்களுக்கான பில்களை, ரசீதுகளை அச்சிட்டார். 1954-ல், 'ஈகிள் பிரஸ்' என்ற பெயரில் அச்சக நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அதன் மூலம் 'ஈகிள் டைரி'களைத் தயாரித்து விற்பனை செய்தார்.

ஈகிள் நிறுவனம், ஈகிள் பாக்கெட் டைரி, ஆஃபீஸ் டைரிகளை வெளியிட்டது. ஒலிம்பிக் டைரி அறிமுகப்படுத்தப்பட்டு அதிகமாக விற்பனையானது. இந்தியாவின் புகழ் பெற்ற டைரி வெளியீட்டு நிறுவனமாக 'ஈகிள் டைரி' நிறுவனம் வளர்ந்தது. டைரிகளை அநேக மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தது.

பூம்புகார் பதிப்பகம்

எம்.ஜே. பிரதாப் சிங், தந்தை மரிய அந்தோணி நாடார் மூலம் இலக்கிய ஆர்வம் பெற்றார். தந்தை, 'கிறிஸ்து வெண்பா' என்ற நூலை எழுதியவர். சிறு வயது முதலே இலக்கியம் மற்றும் பொது வாசிப்புக்குரிய நூல்கள் எனப் பல்வேறு நூல்களை வாசிப்பதில் பிரதாப் சிங் ஆர்வம் கொண்டிருந்தார். அந்த ஆர்வத்தால் இலக்கிய நூல்களை வெளியிடும் நோக்கில் 1975-ல், 'பூம்புகார் பதிப்பகம்' என்ற பிரசுர நிறுவனத்தைத் தொடங்கினார். முதல் நூலாக 'காமராஜர் ஒரு சரித்திரம்' நூல் வெளியானது. காமராஜரின் நெருங்கிய நண்பரான முருக தனுஷ்கோடி அந்நூலை எழுதியிருந்தார். அந்நூலுக்கு மிக நல்ல வரவேற்புக் கிட்டியது. தொடர்ந்து அண்ணா, மு. கருணாநிதி தொடங்கி புலியூர்க் கேசிகன், கோவி. மணிசேகரன், ராஜேஷ்குமார், மு.க. ஸ்டாலின், ஜ.ரா.சுந்தரேசன், ஸ்ரீவேணுகோபாலன், ஈரோடு தமிழன்பன் உள்ளிட்ட பலரது நூல்களை பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைப் பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டது.

எம்.ஜே பிரதாப் சிங்

தொழில் நிறுவனங்கள்

எம்.ஜே. பிரதாப் சிங், ஈகிள் நிறுவனம் தவிர்த்து கீழ்காணும் நிறுவனங்களைத் தொடங்கி நடத்தினார்.

  • மெட்ராஸ் செக்யூரிட்டி பிரிண்டர்ஸ்
  • ஈகிள் பிரஸ் பிரைவேட் லிமிடெட்
  • ஈகிள் சாப்ட்வேர்
  • ஹில்ட் எனர்ஜி பிரைவேட் லிமிடெட்
  • ஹில்ட் டிவென்ஸ்
  • ஹில்ட் ஏரோஸ்பேஸ்
  • ஹில்ட் லைஃப் சைன்ஸ் பிரைவேட் லிமிடெட்

விருது

எம்.ஜே. பிரதாப் சிங் பதிப்பித்த பூம்புகார் பதிப்பக நூல்களில், மூன்று நூல்கள் சாகித்ய அகாதெமி விருது பெற்றன. மேலும் பல தமிழக அரசின் பரிசையும், பல்வேறு இலக்கிய அமைப்புகளின் சிறப்பு விருதுகளையும், பரிசுகளையும் பெற்றன.

மறைவு

எம்.ஜே. பிரதாப் சிங், ஜனவரி 18, 2024 அன்று, தனது 93-ம் வயதில், வயது மூப்பால் காலமானார்.

மதிப்பீடு

எம்.ஜே. பிரதாப் சிங், இந்தியாவில் மிக உயர்தரமான டைரிகளையும் நோட்டுப் புத்தகங்களையும் தயாரித்து விற்பனை செய்த முன்னோடிகளில் ஒருவர். 'ஈகிள் பிரஸ்' நிறுவனர். நாட்குறிப்புகளோடு கூடவே அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் காசோலைகளையும் அச்சிட்டார். சில நாடுகளின் அனுமதி பெற்ற விசா படிவங்களை அச்சிடுவராகச் செயல்பட்டார். பூம்புகார் பதிப்பகம் மூலம் பல்வேறு நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். சமூக சேவைகளிலும் ஈடுபட்டார். இந்தியாவின் புகழ்பெற்ற டைரி விற்பனையாளராகவும், தமிழின் குறிப்பிடத்தகுந்த பதிப்பாளராகவும் அறியப்படுகிறார்.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Jul-2026, 07:20:19 IST