under review

எம்பிரான் சதகம்

From Tamil Wiki

எம்பிரான் சதகம்(பொ.யு. 18-ம் நூற்றாண்டு) காஞ்சிபுரத்தில் கோவில் கொண்ட அத்திகிரிப் பெருமானைப் பாடிய சதகம் என்னும் சிற்றிலக்கியம்.

ஆசிரியர்

எம்பிரான் சதகத்தை இயற்றியவர் கோபாலகிருஷ்ண தாசர். பொ.யு. 18-ம் ஆண்டில் வாழ்ந்தவர். பாயிரத்திலுள்ள 'அரிபத்தன் கோபால கிருஷ்ணனன்பால்' என்பதன் மூலம் இவர் பெயர் அறிய வருகிறது. ஶ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.

நூல் அமைப்பு

எம்பிரான் சதகம் சதகங்களின் இலக்கணப்படி காப்பு, பாயிரம் தவிர்த்து 100 செய்யுள்களைக் கொண்டது. எளிய நடையும், சந்த ஓசையும் நிறைந்த விருத்தப்பாக்களால் ஆனது. ஒவ்வொரு விருத்தமும் 'எம்பிரானெ' என்ற சொல்லில் முடிகிறது. பாயிரத்தில் திருமாலையும், எம்பெருமானார் எனப்படும் இராமானுஜரையும் வணங்கி, தன் பாடலை முன்னின்று கேட்டருளும்படி வேண்டுகிறார்.

எம்பிரான் சதகம் காஞ்சிபுரத்தில் கோவில் கொண்ட அத்திகிரிப் பெருமானைப் பாடும் சிற்றிலக்கியம். தலப்பெருமை, வேகவதி நதியின் பெருமை ஆகியவை கூறப்படுகின்றன. கோவிலில் அருளும் அர்ச்சாவதார மூர்த்தியாகவும், அவதாரங்களாகவும், பாற்கடலில் பள்ளி கொண்ட பரவாசுதேவனாகவும், உள்ளத்தில் உறையும் அந்தர்யாமியாகவும் திருமாலைப் பல நிலைகளில் போற்றுகிறார் கோபாலகிருஷ்ண தாசர்.

திருமாலின் அவதார நிகழ்வுகள் பல்வெறு பாடல்களில் கூறப்படுகின்றன. குறிப்பாக இராமாயண, மகாபாரதக் கதைகள் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன. தந்தை சொல் மீறாமை, சபரிக்கு அருளியது, வாலி வதம், கம்ச வதம், பூதனைக்கு முக்தியளித்தது, பாண்டவர்க்குத் தூது சென்றது, சிசுபால வதம் போன்ற நிகழ்வுகள் குறிப்பிடப்படுகின்றன.

அத்திகிரிப் பெருமானுக்கு சேவை செய்த திருக்கச்சி நம்பிகள், ராமானுஜர், அவர் ஏற்படுத்திய 74 சிம்மாசனாதிபதிகள், மணக்கால் நம்பி, நாதமுனிகள், உய்யக்கொண்டார், ஆளவந்தார் போன்ற வைணவ ஆசார்யர்களின் பக்தியும், சேவையும் குறிப்பிடப்பட்டுள்ளன. பன்னிரு ஆழ்வார்கள் பற்றிய நிகழ்வுகள் (முதலாழ்வார் வைபவம் , திருமங்கை மன்னனுக்கு எட்டெழுத்தை உபதேசித்தது, பெரியாழ்வார் பொற்கிழி பெற்றது, ஆண்டாள் சூடிக் கொடுத்தது, திருமழிசையாழ்வார் சொன்ன வண்ணம் செய்த பெருமாள்) இடம்பெறுகின்றன.

மாயை, ஆணவ மலங்களை அகற்றி, தனக்குப் பிறவாமையையும், வைகுந்த பதவியையும் அருள வேண்டும் என்ற வரம் வேண்டப்படுகிறது.

பாடல் நடை

உலகை உண்டு உமிழ்தல்

உலகங்க ளீரேழுங் கற்பாந் தத்தில்
    ஒருங்கவே யோர்கணத்தி லெளிதா யுட்கொண்
டலைவின்றிக் கற்பாந்த வெள்ளந் தன்னில்
    ஆலிலைமேற் குழவியாய்த் துயின்ற வந்தாள்
சலிலமற மதுகயிட வரையுண் டாக்கிச்
    சக்கரத்தாற் பிளந்துடலாற் சலத்தை மூடி
இலகமுனுண் டருளுலகை யுமிழ்ந்தே பண்டில்
    ஏற்றமுற வைத்தனையே யெம்பி ரானே.

ஆழ்வார்கள்

திறத்தபொய்கை யார்பூதத் தார்பே யாழ்வார்
    திருமழிசை யார்வில்லி புத்தூ ராழ்வார்
அறிக்கைமிகுங் குலசேக ராழ்வார் ஞான
    ஆரணத்தைத் தமிழ்செயுநம் மாழ்வார் பத்தி
குறைச்சலில்லாத் தொண்டரடிப் பொடியாழ் வார்பண்
    குளிர்ந்த சொல்லா லிசைபாடுந் திருப்பாணாழ்வார்
இறக்கவெட்டிப் பறித்ததிரு மங்கை யாழ்வார்
    இவர்பதின்மர்க் கருளினையே யெம்பிரானே.

பூதனைக்கு மோட்சமளித்தல்

முலையில்விட மருத்தியுனைக் கொல்ல வெண்ணி
    மோகினியாய் வந்தபூ தகியென் பாளோர்
மலையெனவீழ்ந் திடமுலையி னஞ்சும் பாலும்
    வல்லுயிருந் திருப்பவள வாயா லுண்டே
கொலை செய்ய வந்தவடன் பகையெண் ணாமல்
    கொடுத்தனைசா யுச்சியவீ டென்னிற் போற்றும்
இலகியமெய்த் தொண்டருக்குக் கதிதா னீவ
    தெளிதுனக்குச் சீரரியே யெம்பி ரானே.

உசாத்துணை

எம்பிரான் சதகம், மதுரைத் திட்டம்


✅Finalised Page