under review

ஊட்டியார்

From Tamil Wiki

ஊட்டியார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் அகநானூற்றில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

ஊட்டியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. இவர் பாடிய இரு பாடல்களில் பயின்று வந்த 'ஊட்டி' என்ற சொல்லையொட்டி தொகுப்பாசிரியர்கள் இவரை ஊட்டியார் என்று அழைத்தனர். ஊட்டி என்பது பெண்கள் கால்களில் சாயம் பூசிக்கொள்வதைக் குறிக்கும் சொல்.

இலக்கிய வாழ்க்கை

ஊட்டியார் பாடிய இரு பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் அகநானூறு 68, 388 ஆகிய பாடல்களாக அமைந்துள்ளன. இரண்டும் குறிஞ்சித் திணைப் பாடல்கள்.

பாடல் வழி அறிய வரும் செய்திகள்

அகநானூறு 68
  • தோட்டத்து ஈர நிலத்தில் மண்டிக்கிடக்கும் கூதளம் பூச்செடி குழையும்படி இன்னிசையுடன் கொட்டி அருவி பாடும்
  • காலில் செம்பஞ்சுக் குழம்பு ஊட்டியது போன்ற சிவப்பு நிறத்துடன் தளிர் கொண்டிருக்கும் அசோக மரத்தில் நாம் ஆடிய பின்னர் வெறுமனே தொங்கும் ஊஞ்சல் கயிற்றைப் பார்த்துப் பாம்பு தொங்குகிறது என்று எண்ணி இடியானது அதனைத் தாக்கும்.
  • வளையல் கழலும்படியான பிரிவு
  • இடி முழக்கத்துடன் மேகக் கூட்டம் மழை பொழிந்திருக்கிறது. வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளத்தைக் கடந்து யானைக் குடும்பம் செல்கிறது. குழந்தை யானையால் கால் ஊன்றி நடக்க முடியவில்லை. பெண்யானைகள் பல செல்கின்றன. வெள்ளைக் கொம்புகளைக் கொண்ட ஆண்யானை ஒலி எழுப்பி அழைத்துக்கொண்டு செல்கிறது. பகலிலும் அஞ்சத்தக்க மலைப்பாம்பை (பாந்தள்) வெள்ளம் அடித்துக்கொண்டு வருகிறது.
அகநானூறு 388
  • மலையில் சந்தன மரங்களை வெட்டிச் சாய்த்து உழுது விதைந்து விளைந்திருந்த தினையைக் காத்தல்.
  • பூத்து மணக்கும் வேங்கை மரக் கிளையில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் ஏறி அமர்ந்துகொண்டு, மூங்கிலை அறுத்துச் செய்யப்பட்ட தட்டைக் கருவியில் ஒலி எழுப்பித் தினையைக் கவரும் குருவிகளை ஓட்டுதல். அப்போது தும்பி இன வண்டுகள் பூக்களில் தேன் உண்ணும் இன்னிசை கேட்பர்.
  • புண்பட்ட மேனியுடன் பெரிய தந்தம் கொண்ட ஆண்யானையைத் தேடிவரும் தலைவன். அவனைத் தொடர்ந்து வரும் வேட்டை நாய்கள். மார்பில் சந்தனமும் பூசியிருந்தான்.
  • வேலன் முருகனைப் பாடும் முதிர்ந்த வாயினை உடைய பூசாரி.
  • செம்பஞ்சுக் குழம்பு ஊட்டியது போன்ற தலைவியின் கண்ணாகிய அம்புக்கும், யானை மேல் பாய்ந்து குருதி தோய்ந்த அம்புக்கும் பொருந்தும் இரட்டுறுமொழி
  • மை மேகம் போல் நிறம் கொண்ட யானைக்கும், காதல் மயக்கம் கொண்ட தலைவனுக்கும் பொருந்தும் இரட்டுறுமொழி.

பாடல் நடை

  • அகநானூறு 68 திணை: குறிஞ்சி

அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத்
தண் அயத்து அமன்ற கூதளம் குழைய,
இன் இசை அருவி பாடும் என்னதூஉம்
கேட்டியோ! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை
ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை
ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என,
முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே;
பின்னும் கேட்டியோ? எனவும் அஃது அறியாள்,
அன்னையும் கனை துயில் மடிந்தனள். அதன்தலை
மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர்
வருவர்ஆயின், பருவம் இது எனச்
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்வயின்
படர்ந்த உள்ளம் பழுது அன்றாக,
வந்தனர் வாழி, தோழி! அந்தரத்து
இமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூத்
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப,
கன்று கால் ஒய்யும் கடுஞ் சுழி நீத்தம்
புன் தலை மடப் பிடிப் பூசல் பல உடன்
வெண் கோட்டு யானை விளி படத் துழவும்
அகல் வாய்ப் பாந்தட் படாஅர்ப்
பகலும் அஞ்சும் பனிக் கடுஞ் சுரனே.

  • அகநானூறு 388

அம்ம வாழி, தோழி நம் மலை
அமை அறுத்து இயற்றிய வெவ் வாய்த் தட்டையின்,
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத
உளைக் குரல் சிறு தினை கவர்தலின், கிளை அமல்
பெரு வரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி,
ஓங்கு இருஞ் சிலம்பின் ஒள் இணர் நறு வீ
வேங்கை அம் கவட்டிடை நிவந்த இதணத்து,
பொன் மருள் நறுந் தாது ஊதும் தும்பி
இன் இசை ஓரா இருந்தனமாக,

மை ஈர் ஓதி மட நல்லீரே!
நொவ்வு இயற் பகழி பாய்ந்தென, புண் கூர்ந்து,
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும்
புனத்துழிப் போகல் உறுமோ மற்று? என,
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப் புடை ஆட,
சொல்லிக் கழிந்த வல் விற் காளை
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து,
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள்,

நன்னர் நெஞ்சமொடு மயங்கி, வெறி என,
அன்னை தந்த முது வாய் வேலன்,
எம் இறை அணங்கலின் வந்தன்று, இந் நோய்;
தணி மருந்து அறிவல் என்னும்ஆயின்,
வினவின் எவனோ மற்றே கனல் சின
மையல் வேழ மெய் உளம்போக,
ஊட்டியன்ன ஊன் புரள் அம்பொடு
காட்டு மான் அடி வழி ஒற்றி,
வேட்டம் செல்லுமோ, நும் இறை? எனவே?

உசாத்துணை


✅Finalised Page