under review

உவர்கண்ணூர் புல்லங்கீரனார்

From Tamil Wiki

உவர்கண்ணூர் புல்லங்கீரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூறில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

உவர்கண்ணூர் புல்லங்கீரனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கீரனார் என்னும் இயற்பெயர் உடையவர். உவர்கண்ணூர் என்னும் ஊரில் பிறந்த புல்லன் என்பவரின் மகன்.

இலக்கிய வாழ்க்கை

உவர்கண்ணூர் புல்லங்கீரனார் பாடிய பாடல் அகநானூறில் 146-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. ஈயும் பொருள் வேண்டிச் சென்ற பாணரிடம் தலைவன் பரத்தையர் பின்னால் சென்றதால் தான் படும் துயரை தலைவி உரைப்பதாக மருதத் திணையில் அமைந்துள்ள பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • மலர்கள் பூத்து விளங்கும் குளத்தில் பகல்பொழுதில் படுத்துகிடக்கும் ஆண் எருமை, இரவில் பெண் எருமையை புணர்ந்து மகிழும். பின்னர் தோட்டங்களில் மேய்ந்து இளைப்பாறும்.
  • உவமை: தலைவனின் வாய்ச்சொற்களை நம்பி ஏமாந்து தலைவி விடும் கண்ணீர் மழைத்துளிகள் காற்றில் ஆடும் மலர் மேல் வீழ்ந்து வழிவது போல் உள்ளது.

பாடல் நடை

அகநானூறு - 146

  • திணை: மருதம் துறை:வாயில் வேண்டிச் சென்றபாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது

வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு
பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி,
மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ,
படப்பை நண்ணி, பழனத்து அல்கும்
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர்,
ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள்
இயங்கல் ஆனாதுஆயின்; வயங்கிழை
யார்கொல் அளியள்தானே எம் போல்
மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி,
வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின்
கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து,
ஆயமும் அயலும் மருள,
தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோளே?

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Mar-2025, 11:45:57 IST