under review

உன்னதம்

From Tamil Wiki

To read the article in English: Sublime. ‎


உன்னதம் கவிதை எழுப்பும் உணர்வின் உயர்நிலையைக் குறிக்கும் கலைச்சொல். இச்சொல் கிரேக்க செவ்வியல் காலம் தொட்டு வருவது. நாம் அறிந்த சாதாரண அனுபவங்களுக்கு மேலாக வாழ்க்கையின் உன்னதங்கள், மானுடத்தின் உச்சங்கள், இயற்கையும் பிரபஞ்சமும் உருவாக்கும் பேருணர்வுகள் ஆகியவை நம்மில் உருவாக்கும் உள எழுச்சியே உன்னதம் என்னும் சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இலக்கியத்தில் உன்னதம் ஒரு அழகியல் கலைச்சொல்லாக பயன்படுத்தப்படுகிறது.

தோற்றம்

உன்னதம் என்ற கலைச்சொல் குறித்த சிந்தனை கிரேக்க இலக்கியத்தில் பிறந்தது. பொ.யு. 300-ல் லாஞ்ஜைன்ஸ் (Longinus) என்னும் கிரேக்க ஆசிரியர் "உன்னதத்தைப் பற்றி" (On the Sublime) என்ற தன் நூலில் விரிவான விளக்கங்களை முன்வைத்துள்ளார். லான்ஜைன்ஸ்க்கு முன்னால் உன்னதம் மூன்று வகை பேச்சு வழக்கோடு தொடர்புடையதாகப் பயன்படுத்தப்பட்டது. உயர், நடுத்தர, தாழ்ந்த என மூன்று வகைப் பேச்சு வழக்கினை மதிப்பிட இச்சொல் பயன்படுத்தப்பட்டு வந்தது. லான்ஜைன்ஸ் இதனைக் கவிதையை மதிப்பிடப் பயன்படுத்துகிறார். இலக்கியத்தில் உன்னதம் என்பது "சொற்களில் இயல்பாக அமையும்" மேன்மை என்றும், "உயரிய ஆன்மாவின் வெளிப்பாடு" என்றும், "மெய்மறந்த இன்பத்தை நோக்கி இட்டுச்செல்லும் சக்தி" என்றும் குறிப்பிடுகிறார். மேலும் ஒரு வரியை எத்தனை முறை வாசித்தாலும் அதில் தோன்றிய உன்னத நிலை மாறாமல் இருக்கும் தன்மை கொண்டது என்கிறார் லாஞ்ஜைனஸ்.

லாஞ்ஜைனஸ் இத்தகைய இலக்கிய ஆக்கத்திற்கான வாசகர்களையும் பட்டியலிடுகிறார். அவை,

  • இவ்விலக்கிய ஆக்கங்களின் வாசகர்கள் ஒரு சமுதாயத்தின் நன்கு இலக்கிய பரிச்சயம் கொண்ட பண்பட்ட வாசகர்களாக இருப்பார்கள்.
  • அத்தகைய வாசகர்களே ஓர் எழுத்தாளன் தொட நினைத்த உன்னத நிலையை மறுபடியும் தன் வாசிப்பில் தொடும் பயிற்சி உடையவர்களாக இருப்பார்கள்.
  • லாஞ்ஜைனஸ் குறிப்பிடும் இந்த வாசகர்கள் கீழ்மை மற்றும் குரூரமான எண்ணங்களில் இருந்து விடுபட்டவர்களாக இருப்பார்கள். எனவே இவர்கள் கிட்டத்தட்ட அரிஸ்டாக்ரடிக்(aristocratic) தன்மையுடையவர்களாக அல்லது மேட்டிமை சமூகத்தினராக இருப்பார்கள்.
  • இந்த அணுகுமுறை கற்பனாவாத காலகட்டம் வரை கேள்விக்குள்ளாகப்படவில்லை/எதிர்க்கப்படவில்லை.

நிக்கோலஸ் பாய்லூவ் டெஸ்பிரசோ (Nicholas Boileau - Despréaux) நவீன விவாதங்களில் இக்கலைச்சொல்லை அறிமுகம் செய்கிறார். இவர் லாஞ்ஜைன்ஸ் இன் உன்னதத்தைப் பற்றி நூல் மொழிபெயர்ப்பின் முகவுரையில் இதனைக் குறிப்பிடுகிறார்.

இலக்கியத்தில் உன்னதம் பேசத் தொடங்குவது பதினேழாம் நூற்றாண்டில். இச்சொல் அல்கெமி (Alchemy) தத்துவ விவாதத்தில் பயன்படுத்தப்பட்டு பின் பதினெட்டாம் நூற்றாண்டில் முக்கிய கலைச்சொல்லாக மாறியது. ஜேம்ஸ் பெட்டியின் டிசர்டேஷன் மாரல் அண்ட கிரிட்டிகல் (Dissertations Moral and Critical) நூலில் இச்சொல்லின் தோற்றம் குறித்து ஆராயப்படுகிறது. 1757-ல் எட்முண்ட் பர்க் (Edmund Burke) எழுதிய கட்டுரையிலும் இச்சொல்லைப் பற்றிய குறிப்பு வருகிறது. பின்னாளில் உன்னதம் குறித்தான சிந்தனையை இமானுவேல் காண்டும் (Immanuel Kant) ரொமாண்டிக் கவிஞர்களும் (குறிப்பாக வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்) எடுத்தாண்டனர்.

உன்னதம் என்பது படைப்பாளியின் ஆன்மாவிலிருந்து கவிதையின் ஊடாக வாசகனை அடைகிற படைப்பாளியின் ஆன்ம ஒளி. கவிதையின் ஓர் அழகியல் கூறாக அமையாமல் கவிதை முழுவதும் ஊடுருவி நிற்பது. தன்னிகரற்ற சாதனையாக, சாதனையின் சிகரமாக, உயர்வெண்ணங்களில், புனித உணர்வுகளில், படிம மொழியில், சொல்லாட்சியில், அமைப்பின் ஒழுங்கில் பரந்து நிற்பது. உன்னதம், உணர்வுபூர்வமாக அமைவதால் அதை உணர்ந்து கொள்ளவே முடியும். உன்னதம் ஒரு கலைஞனிடம் இயல்பாக அமைவது. தன் திறமையால் தேடிக் கொள்வதல்ல. உன்னதக் கலைஞனின் குறைபாடுகளை உடைய படைப்பு, சாதாரணக் கலைஞனின் வடிவச் சிறப்பினைக் கொண்ட படைப்பை விட உயர்ந்தது.

வரலாறு

ஜான் பெய்லி (John Baillie)

1747-ம் ஆண்டு ஜான் பெய்லி என்னும் ஸ்காடிஷ் எழுத்தாளர், "உன்னதத்தைப் பற்றி" என ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

எட்மண்ட் பர்க் (Edmund Burke)

1757-ல் எட்மண்ட் பர்க் எழுதிய A Philosophical Inquiry into the Origin of Our Ideas of the Sublime and Beautiful என்ற கட்டுரை இக்கலைச்சொல் குறித்தான ஆய்வுமுறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல் எனலாம். இக்கட்டுரை ஒரு தனி மனிதன் புறவய உலகத்தோடு ஏற்படும் தொடர்பால் எப்படி அழகு மற்றும் கலை குறித்தான சிந்தனை எழுகிறது என ஆராய்கிறது. பர்க் உன்னதத்தை அவர் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார், "ஆபத்து மற்றும் பயம் குறித்தான சிந்தனையை எது தூண்டுகிறதோ, எது பயங்கரத் தன்மை கொண்டதோ அல்லது பயங்கரத் தன்மைக் கொண்ட பொருள் குறித்தான தாக்கத்தை எது ஏற்படுத்துகிறதோ அல்லது பயத்தை ஒத்த சிந்தனையை எது விளைவிக்கிறதோ அதுவே உன்னதம்". பயங்கரமும், வலியும் உணர்வு நிலையில் தீவிரத் தன்மைக் கொண்டதால், உன்னதம் வாசகர்களிடையே பயங்கரத் தன்மையை கூட்டும் ஒரு செயலென பர்க் கருதினார். இருப்பினும் இதில் உள்ளார்ந்த இன்பம் இருப்பதாக அவர் கருதினார். எது உயர்ந்ததோ, முடிவின்மையுடையதோ அல்லது தெளிவற்றதோ அது பயங்கரத்தை உருவாக்கும். உன்னதத்தில் அறியமுடியாத் தன்மை உடையதால் அதுவும் பயங்கரத் தன்மைக் கொண்டது என்றார் ப்ருக். ஜான் மில்டனின் பேரடைஸ் லாஸ்ட் (Paradise Lost) என்னும் கவிதையை ஆராயும் பர்க் அதில் உள்ள மரணம் மற்றும் சாத்தான் குறித்தான படிமங்களில் இருந்து உன்னதத்திற்கும், பயங்கரத்திற்கும் ஆன கேள்வியை எழுப்புகிறார். அவர் மேலும் உன்னதத்திற்கும், அழகிற்குமான வேறுபாட்டை அளிக்கிறார். அவர் அழகு நன்கு வடிவமைக்கப்பட்ட அழகியல் அமைதி கொண்ட ஒன்று என்றும், உன்னதம் அழிக்கும் சக்தி கொண்டது என்றும் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இமானுவேல் காண்ட் (Immanuel Kant)

இமானுவேல் காண்ட் தன்னுடைய க்ரிட்டிக் ஆப் ஜட்ஜ்மெண்ட் (The Critique of Judgement, 1970) புத்தகத்தில் பர்கின் உன்னதம் குறித்த வரையறையை மேலும் விளக்குகிறார். பெரும்பாலும் பர்க் முன்வைத்த அழகைப் பற்றிய வரையறையில் இருந்து முரண்பட்டு காண்ட் செல்கிறார். காண்ட் இயற்கையில் உள்ள அழகை வரையறை செய்ய முடியாது என்கிறார். மாறாக ஒரு பொருளின் நிறம், அமைப்பு, பரப்புப் பற்றிய பிரக்ஞை மட்டும் நாம் கொள்கிறோம். எனவே அழகு என்பது ,"அறிதலின் முடிவில்லா கருத்தை முன்வைப்பது" என்கிறார். காண்ட் உன்னதத்தை மேலும் முடிவற்றது என்றும் எனவே பொருளற்ற உருவிலும் அதனை காண இயலும் என்றும் கருதினார். அவர் உன்னதத்தை, "காரணிகளின் முடிவிலா கருத்தை முன்வைப்பது" என்கிறார். அழகு அறிதலின் தற்காலிக தன்மை கொண்டது மாறாக உன்னதம் காரணிகளின் முடிவிலி நோக்கி செல்லும் அழகியல் தன்மை கொண்டது எனக் கருதினார்.

பர்க் பயங்கரத்தை தூண்டும் பொருளில் இருந்து உன்னதம் தோன்றும் என வாதிடும் போது, காண்ட் ஒரு பொருள் பயங்கரத்தைத் தூண்டும் பண்பைக் கொண்டிருக்கலாம் எனவே அவை அறிபவனைப் பயப்படுத்தாமலே உன்னதத்தை நோக்கி செல்லும் தன்மை கொண்டது என்கிறார். மேலும் உன்னதம் தன்னளவில் உயரிய தன்மை கொண்டது எனவே அதனுடன் எதுவும் ஒப்பிடத்தக்கதற்ற சிறிதாகவே இருக்கும். எனவே நினைத்துப்பார்க்க முடியாத ஒன்றின் உயரிய தன்மையை புரிந்துக் கொள்ள ஒருவரின் கற்பனையைத் தூண்டுவதே உன்னதத்தின் வேலை என வாதிடுகிறார். உன்னதத்தின் முக்கிய கூறு என்பது மனித மனத்தின் ஆற்றல் கொண்டு அதனை அறிய முற்படுவதே என்கிறார். காண்ட் பர்க் சொல்லும் இயற்கையின் பயங்கரத் தன்மையில் இருந்து உன்னதத்தை மனித தர்க்க புத்தியின் சிக்கலைத் தொடும் கருவியாக அதிலிருந்து அறத்தை நோக்கிச் செல்வதாகப் பார்க்கிறார்.

இலக்கிய உன்னதம், தத்துவ உன்னதம், அழகியல் உன்னதம் மூன்றும் இயல்பாகவே இயற்கையுடன் தொடர்புடையவை. ஆனால் மற்ற இலக்கிய கலைச்சொற்களைப் போல் உன்னதமும் இலக்கியத்தில் இருந்து பரிணாமம் கொண்டது. பல கலைஞர்கள் இயற்கை உன்னதத்தை பயங்கர உணர்வுடன் ஒப்பிட்டனர். கலைஞர்கள் உன்னத நிலையை, அதன் உள்ளார்ந்த முரண்பாடுகளில் (துக்கம்/இன்பம்) இருந்து ஒரு காலத்தின் அரசியல், பண்பாடு மாற்றத்திற்கான பிரதிநிதியாகப் பார்க்கத் தொடங்கினர். கலைஞர்கள் அக முரண்பாடுகளை வெளிப்படுத்தும் பிரதிநிதியாக உன்னதத்தை தங்கள் இலக்கிய ஆக்கங்களில் பயன்படுத்தினர். இதன் வாயிலாக உன்னதம் உணர்ச்சி மையவாதத்தை (Romantics) நோக்கி நகர்ந்தது.

ஆங்கில உணர்ச்சி மையவாதக் கவிதைகள்

இயற்கையை அறிதலில் இருந்து தான் உணர்ச்சி மையவாதம் உன்னதத்திற்கான கவர்ச்சி தொடங்கியது. ரொமாண்டிக் கவிஞர்கள் அதனை தங்கள் கவிதைகளில் பரிசோதிக்கத் தொடங்கினர். அக்காலக் கவிதைகளில் இயற்கை அறிதலை நோக்கிச் செல்லும் உன்னதத்தை கவிதைகளில் கையாளத் தொடங்கினர். இதனை கிறிஸ்டியன் ஹெர்ஷ்ஃபெல்ட் (Christian Hirschfeld) தன் தியரி ஆப் கார்டனிங் (1779 - 80) புத்தகத்தில் இவ்வியற்கை அறிதலை இலக்கிய உலகிலும் பொருத்திப் பார்க்கிறார். உன்னதத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது மனிதன் தன் ஆற்றலை இயற்கையின் பிரம்மாண்டத்தில் இருந்தும் அதன் முடிவற்ற அறிதலில் இருந்தும் பார்க்கிறான் என்கிறார் ஹெர்ஷ்ஃபெல்ட். அவர் மேலும் இதனை மனிதன் தன் சுதந்திரத்திலும், சுதந்திரமின்மையிலும் பொருத்தி தடைகளில் இருந்து விடுதலை நோக்கி தன் அகத்தை கொண்டு செல்கிறான் என நம்பினார். இவர் மூலம் உன்னதத்தைப் பற்றிய கருத்து உலகமயமாக்கப்பட்டது. இவர் இதனை மனித உடல் சார்ந்த பிரம்மாண்டத்தில் இருந்து ஆன்மா சார்ந்த பேரிருப்பு நோக்கி நகர்த்தினார். ஹெர்ஷ்ஃபெல்ட் இதன் மூலம் இயற்கையின் உன்னதம் மனிதனின் அக உண்மைகளை நோக்கி செல்லும் குறியீடாக அமையும் எனக் கருதினார்.

அவருக்கு பின்பு ஆங்கில ரொமாண்டிக்ஸ் உலகம் உன்னதத்தை மனித அனுபவத்திற்கு மேலான ஒன்றாகப் பார்க்கத் தொடங்கியது. அதாவது தர்க்கமான அறிதலுக்கு மேலாக, பயங்கரம், உன்னதம் என்ற இருண்மைக்கு மேலான ஒன்றாகக் கருதியது. மற்றவர்கள் காண்ட் முன்வைத்த மனித தர்க்கமும், பார்வையும் உன்னதத்தை நோக்கிய பார்வையில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை ஏற்றுக் கொண்டனர். ஆனால் அனைத்து உணர்ச்சி மையவாதக் கவிஞர்களும் இதனைப் படித்து ஒரு சித்திரம் உருவாக்க வேண்டும் என்பதை நம்பினர். அதன் வழியாக எல்லோருக்கும் இதில் ஒரு புரிதல் வருமென நம்பினர்.

ஒவ்வொரு ரொமாண்டிஸ் கவிஞர்களும் சிறு சிறு வேறுபாடுகளுடன் உன்னதம் குறித்த தங்கள் பார்வையை முன்வைத்தனர்.

வில்லியம் வெர்ட்ஸ்வோர்த் (William Wordsworth)

வில்லியம் வெர்ட்ஸ்வோர்த் ரொமாண்டிக் காலகட்டத்தில் உன்னதத்தை கவிதையில் கையாண்ட பிரபல கவிஞர். பல அறிஞர்கள் வெர்ட்ஸ்வோர்த் முன்வைத்த உன்னதத்தை ரொமாண்டிக் உன்னதத்தின் வரையறையாகக் கொண்டனர். வெர்ட்ஸ்வோர்த் உன்னதத்தைப் பற்றிய அவரது கட்டுரையில், "மனம் தொட நினைக்கும் தூரம் ஆனால் தொட முடியாமல் நிற்கும் ஒன்றே உன்னதம். இந்த உன்னத நிலையைத் தொட நினைக்கும் மனம் தன் போதத்தை இழக்கும். அந்த ஆற்றலால் உன்னதத்தை தொட முடியும். ஆனால் அவை நிரந்தரமானதல்ல." என்கிறார். இந்த உணர்வு நிலையை வெர்ட்ஸ்வோர்த்தின் கீழுள்ள "Lines Composed a Few Miles above Tintern Abbey" கவிதையின் வரிகள் வெளிப்படுத்துகின்றன.

Of aspect more sublime; that blessed mood,

In which the burden of the mystery

In which the heavy and weary weight

Of all this unintelligible world,

Is lightened (37-41)

இதன் மூலம் வெர்ட்ஸ்வோர்த் உன்னத மனநிலை மூலம் உலகியல் துக்கங்களை அகற்ற முடியும் எனச் சொல்கிறார். இதே போல் அவர் எழுதிய பல கவிதைகளில் இயற்கையில் உன்னதத்தைக் காண்கிறார். அவர் இயற்கையின் அழகிய வடிவத்தில் உள்ள பிரமிப்பைக் காண்கிறார். அதே சமயம் அதிலுள்ள பயங்கரத் தன்மையையும் காண்கிறார். வெர்ட்ஸ்வோர்த் உன்னதத்தின் இருநிலைகளையும் அறிய முற்படுகிறார். ஆனால் அவர் பர்க் மற்றும் காண்ட் கொடுத்த விளக்கங்களைத் தாண்டிச் செல்கிறார். வெர்ட்ஸ்வோர்தின் உன்னத்ததை மெய்மை நோக்கிச் செல்லும் கருவியாகப் பார்க்கிறார்.

சாமுவேல் டெய்லர் கூல்டிரிஜ் (Samuel Taylor Coleridge)

சாமுவேல் டெய்லர் கூல்டிரிஜ், கவிஞர், விமர்சகர், அறிஞர். அவரது முக்கிய ஆய்வு உன்னதம். குறிப்பாக உன்னதத்திற்கும், அழகிற்குமான முரண்பாட்டை அவர் ஆராய்ந்தார்.

கூல்டிரிஜ், "நான் சந்தித்து என்னால் அழகைக் காண இயல்கிறது. ஆனால் என்னால் உன்னதத்திற்கு ஒரு பங்களிப்பாற்றவே இயல்கிறது. எந்த ஒரு பொருளும் அந்த உள் உன்னதத்தைக் கொண்டிருப்பதில்லை. அவை ஒரு குறிப்பிட்ட சிந்தனையின் படிமமாகும் வரை. உதாரணமாக ஒரு வட்டம் அதனுள் அழகைக் கொண்டிருக்கும். ஆனால் அவை முடிவின்மையின் குறியீடாகும் போதே உன்னதத்தை அடைகிறது." என்கிறார்.

இங்கே கூல்டிரிஜ் முன்வைக்கும் உன்னதத்தைப் பற்றிய சிந்தனை மற்ற சிந்தனைகளில் இருந்து மாறுபடுகிறது. கூல்டிரிஜ் இயற்கையின் சில தருணங்களால் மட்டும் உன்னதத்தை அடைய முடிகிறது என நம்பினார். அதாவது கடல், வானம், பாலைவனம் அதில் மட்டுமே உன்னதத்தை காண இயலும் ஏனெனில் அவற்றில் முடிவின்மை உள்ளது. இந்த காரணத்திற்காக கூல்டிரிஜின் "Rime of the Ancient Mariner" என்ற கவிதை உன்னதத்திற்கு எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. இக்கவிதை கூல்டிரிஜின் இயற்கை உலகத்தை உன்னதமாக வெளிப்படுத்தும் கவிதைகளில் ஒன்றாக இருந்த போதும், அவர் முன்வைத்த கருத்திற்கு எடுத்துக்காட்டாக இக்கவிதைச் சொல்லப்படுகிறது. கூல்டிரிஜின் மற்ற கவிதைகளில் "மீபொருண்மை உன்னதம் (Metaphysical Sublime)" நோக்கி செல்கிறார். "In between's of the world (earth and sea, sky and sea, etc.)" இவ்வகை கவிதையின் சிறந்த உதாரணம். கூல்டிரிஜ் பயம் அல்லது பிரமிப்பு என்ற உன்னதத்தின் இருண்மையை நோக்கி செல்லாமல் அதிலுள்ள முடிவின்மையை நோக்கியே ஆராய்ந்தார்.

பிற்கால அம்சங்கள்

ரொமாண்டிசிஸத்தின் இரண்டாவது அலையிலும் உன்னதத்தைப் பயன்படுத்தினர். ரொமாண்டிசிஸத்தின் முதல் அலையில் உன்னதத்திற்கு உள்ள வெவ்வேறு மாற்றுக் கருத்துகள் போல் இரண்டாவது அலையிலும் பெர்ஸி பேஸ்சி ஷெல்லி (Percy Bysshe Shelley), லார்ட் பைரன் (Lord Byron), ஜான் கீட்ஸ் (John Keats) போன்றவர்கள் மாறுபட்டக் கருத்துக் கொண்டிருந்தனர். பலத் தருணங்களில் தங்கள் முன்னோர் சொன்ன மெய்மைக்கான ஆசையாக உன்னதத்தைப் பார்த்தனர். ஆனால் பெரும்பாலும் அவர்கள் லான்ஜைன்ஸ் மற்றும் காண்ட் முன்வைத்த கருத்தோடு ஒத்துப்போகின்றனர். அவர்கள் உன்னதத்தில் உள்ள பயங்கரத்தையும், அதன் பரவசத்தையும் நோக்கி கவனம் செலுத்தினர்.

பிற்கால விளைவுகள்

ரொமாண்டிக் கவிஞர்கள் இலக்கியத்தில் கொண்டு வந்த உன்னதம் அதற்கு பின்பு வந்த தலைமுறைகளிலும் ஒலித்தது. விக்டோரியன் காலகட்டக் கவிஞர்கள் தங்கள் கவிதையில் உன்னதம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தாவிட்டாலும் அதற்கு நிகரான உணர்வு நிலையே அவர்கள் எழுதில் காணப்பட்டது. ஐரிஷ் கவிஞர் வில்லியம் பட்லர் ஈட்ஸ் (William Butler Yeats) உன்னததிற்கு நிகரான "துயர மகிழ்வு" என்னும் கருத்தை முன்வைத்தார். சிக்மெண்ட் ஃப்ராய்ட் (Sigmund Freud) இலக்கியத்தில் பயின்று வரும் உன்னதத்தைப் பற்றி, அதற்கு பின்பான மனநிலைப் பற்றி ஆய்வு செய்கிறார். அதனை "உன்னதமாதல்" என அவர் வரையறுக்கிறார். இக்கருத்துக் கொண்டு ரொமாண்டிக் காலகட்டத்திற்கு பின்பு எழுதவந்த கவிஞர்களில் சார்லஸ் டிக்கன்ஸ் (Charles Dickens), வில்லியம் பட்லர் ஈட்ஸ் (William Butler Yeats) முக்கியமானவர்கள். அறிவியல் புனைவு கதைகளில் அதிசயத்தை நிகழ்த்தும்/உணர்த்தும் ஒன்றாக உன்னதம் பார்க்கப்பட்டது.

ஆரம்பக்கால நவீனத்துவ விவாதத்திலும், நகர்ப்புற நிலப்பரப்பு உன்னதத்தின் பேசு பொருளாக இருந்தது. வானைத் தொடும் கட்டிடங்கள், பெரு நகரங்கள் எல்லாம் நவீனத்துவ எழுத்தாளர்களின் மையம் ஆனது. எழுத்தாளர்களின் கவனம் இயற்கையின் அம்சம் நோக்கி இருந்தாலும், உன்னதம் பற்றிய விளக்கம் சற்று மாறுபடத் தொடங்கியது. கிறிஸ்டோபி டென் டாண்ட் (Christophe Den Tandt) "சமூக கட்டுமானம் உன்னதத்தை பயங்கரப்படுத்துவதற்கான காரணிகளில் ஒன்று" என்கிறார். டென் டாண்ட் உன்னதத்தின் அரசியலிலும், அதன் சட்டப்பூர்வமான தன்மைகளில் உள்ள பிரச்சனைகளிலும் கவனம் செலுத்தினார். அவர் மேலும் நகர்ப்புற கட்டுமானத்தை உண்மையின் வடிவமாக கருதினார். ஏனென்றால் நகரத்தை ஒரு தனி இயற்கை வடிவமாக கொள்ளமுடியாது என்றார். பதிலாக மனிதன் உருவாக்கி தந்த அம்சங்களே அதன் மேல் ஒரு நிலையின்மையை தருகிறது அதன் மூலம் ஒரு பயங்கரமும், உன்னதமும் அதனுள் சேர்கிறது எனக் கருதினார்.

பெண்ணிய இயக்கம் உன்னதத்திற்கு அதற்கான ஒரு விளக்கத்தைக் கொடுத்தது. பார்பரா கிளாரே ஃப்ரிமேன் (Barbara Clare Freeman) பரவலாகப் பேசப்பட்ட பெண்ணிய உன்னதம் மெய்யான உன்னதம் முன்வைத்த கோட்பாடு நோக்கிச் செல்லவில்லை என நம்பினார். மாறாக அதிலுள்ள பேரானந்தத்தையும், மீபெருண்மை ரகசியங்களையும், கூறுகளையும் பார்த்தனர். ஃப்ரிமேன் பெண்ணிய இலக்கியத்தில் உன்னதம் மட்டுமே பெண்ணியக் கூறுகளில் இருக்க வேண்டியதல்ல எனக் கருதினார்.

தமிழில் உன்னதம்

தமிழில் உன்னதத்தை கம்பன் கவிதைகளில் இனங்காண இயலும். கவிதையின் கூறுகள் அனைத்திலும் முழுமையாகப் பரந்து நிற்கும் உன்னதத்தை உணர்ந்து கொள்ள முடியும். பேராசிரியர் ஜேசுதாசன் கம்பன் கவிதைகளில் உணரமுடிகிற உன்னத உணர்வை முன்னிட்டே கம்பனைத் தமிழ்க் கவிதை மரபின் சிகரமாக இனங்காண்கிறார்.

சமகால இலக்கியத்தில் க.நா.சுப்ரமணியம், புதுமைப்பித்தனை மேதை என இனங்காட்டினார். புதுமைப்பித்தன் சிறுகதைகளின் வடிவக்குறைபாடுகளைச் சுட்டிய அவர் புதுமைப்பித்தன் மேதை என்னும் காரணத்தால் தமிழின் சிகரம் என்றார்.

தமிழ் கவிஞர்களில் தேவதேவன், அபி இருவரும் தங்கள் கவிதையில் இயற்கையின் உன்னதம் நோக்கி சென்ற கவிஞர்கள் என சொல்லலாம். "என் கவிதையில் உன்னதம் அமைக்கிறது எனச் சொல்லும் போது அதனை நான் சங்கப்பாடல்களின் கவித்துவத்தில் இருந்தே பெற்றேன்" என்கிறார் கவிஞர் அபி. மேலும் அவர், "கம்பனில் காணும் அதே உன்னதத்தை திருக்குறளிலும், சங்கப் பாடல்களிலும், இளங்கோவடிகளிடமும் நாம் காண முடியும். அதனை சமூக நோக்கில் ஆராய்வதை விட்டு அதன் கவித்துவம் நோக்கிச் செல்லும் பயிற்சி நமக்கு அமையும் போதே நாம் அதன் உன்னதத்தை உணர முடியும்." என்கிறார்.

உசாத்துணை

  • இலக்கியத் திறனாய்வுக் களஞ்சியம் - எம். வேதசகாயகுமார்


✅Finalised Page