இளம்பூதனார்
இளம்பூதனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
இளம்பூதனார் என்பதில் பூதன் என்பது இவரது இயற்பெயர் என்றும், பூதன் என்ற பெயரில் பல புலவர்கள் இருந்ததால் இவரின் இளவயது கருதி இளம்பூதன் என இவர் அழைக்கப்பட்டார் என்றும் கருதப்படுகிறது.
இலக்கிய வாழ்க்கை
இளம்பூதனார் இயற்றிய ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 334-வது பாடலாக இடம் பெற்றுள்ளது. தலைவனைப் பிரிந்திருந்தால் இழப்பதற்கு உயிர் மட்டுமே உள்ளது என தலைவி உரைப்பதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
பாடலால் அறியவரும் செய்திகள்
கானல் நிலத்தை விரும்பும் சிவந்த வாய் கொண்ட வெண்காக்கைக் கூட்டம் கடற்கரையில் பறக்கும். அவை பனி பொழிவதை விரும்புவதில்லை.
பாடல் நடை
குறுந்தொகை 334
"வரைவிடை ஆற்றகிற்றியோ?'' என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.
சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோ
டெறிதிரைத் திவலை யீர்ம்புற நனைப்பப்
பனிபுலந் துறையும் பல்பூங் கானல்
விரிநீர்ச் சேர்ப்பன் நீப்பி னொருநம்
இன்னுயி ரல்லது பிறிதொன்
றெவனோ தோழி நாமிழப் பதுவே
உசாத்துணை
- சங்கத் தமிழ் புலவர் வரிசை, அதியன் விண்ணத்தனார் முதலிய புலவர்கள் , புலவர் கா. கோவிந்தன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
- குறுந்தொகை 334, தமிழ்த் துளி இணையதளம்
- குறுந்தொகை 334, தமிழ் சுரங்கம் இணையதளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
01-Feb-2023, 09:24:30 IST