under review

இரா. மணியன்

From Tamil Wiki
பேராசிரியர், முனைவர் இரா. மணியன் (படம்-நன்றி: நியூஸ் செவன் தொலைக்காட்சி)

இரா. மணியன் (இராமையா மணியன்) (பிறப்பு: ஜூன் 1, 1932) ஒரு தமிழகக் கவிஞர். எழுத்தாளர், மேடைப்பேச்சாளர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். இலக்கிய நூல்கள் சிலவற்றுக்கு உரை எழுதினார். வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதினார். அவற்றுள் குறிப்பிடத்தகுந்தது, பெரியார் காவியம். திராவிட இயக்கம் சார்ந்தவர். தனது நூல்களுக்காகத் தமிழக அரசின் பாரதியார் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பேராசிரியர் இரா. மணியன்

பிறப்பு, கல்வி

இரா. மணியன், ஜூன் 1, 1932 அன்று, நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கை வட்டத்தில் உள்ள நத்தம் என்னும் சிற்றூரில், இராமையா - சரசுவதி இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். மயிலாடுதுறை நகராட்சிப் பள்ளியில் பள்ளிக் கல்வி கற்றார். தருமை ஆதீனத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்து வித்துவான் பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல். பட்டம் பெற்றார். சென்னை ஆசிரியர் கல்லூரியில் பி.டி. பட்டம் பெற்றார். பச்சையப்பன் கல்லூரியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ‘அறிஞர் அண்ணாவின் மேடைத் தமிழ் – ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

இரா. மணியன், சென்னையின் சில பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மணலி தமிழ்க் கல்லூரி, சென்னை சர் தியாகராயர் கல்லூரி, தஞ்சை கரந்தைப் புலவர் கல்லூரி, நாட்டார் தமிழ்க் கல்லூரி ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். மணமானவர். இவருக்கு இரண்டு மகள்கள்; ஒரு மகன்.

இலக்கிய வாழ்க்கை

இரா. மணியன், இலக்கியச் சிற்றிதழ்களில் கவிதை, கட்டுரைகளை எழுதினார். உரை நூல்கள், ஆய்வு நூல்கள் எனப் பல நூல்களை எழுதினார். அண்ணாவின் முதல் நினைவு நாளன்று, 'அண்ணா கோவை' என்னும் நூலை எழுதி வெளியிட்டார். தொடர்ந்து வ. உ. சிதம்பரம் பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதினார். இரா. மணியன் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்களுள் பெரியார் காவியம் குறிப்பிடத்தகுந்த ஒன்று.

பதிப்பு

இரா. மணியன், தனது நூல்களை வெளியிடுவதற்காக கவின்மதி பதிப்பகம் என்ற பதிப்பகத்தைத் தொடங்கி நடத்தினார்.

விருதுகள்

  • பெரியார் காவியம் நூலுக்கு தமிழக அரசின் சிறப்புப் பரிசு ரூபாய் 30000/- (2009)
  • தமிழக அரசின் பாரதியார் விருது (2010)

மதிப்பீடு

இரா. மணியன், இலக்கிய நூல்கள் சிலவற்றுக்கு உரை எழுதினார். சங்க இலக்கியம் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு சில ஆய்வு நூல்களைப் படைத்தார். மாணவர்கள் ஆங்கிலத்தை முறையாகப் பயில வேண்டும் என்பதற்காக ‘அசோகா ஆங்கிலபோதினி’ என்ற அகராதி நூலை எழுதினார். இரா. மணியன் திராவிட இயக்கம் சார்ந்த படைப்பாளிகளுள் ஒருவராக அறியப்படுகிறார்.

இரா. மணியன் நூல்கள்

நூல்கள்

  • வாழ்வும் இலக்கியமும்
  • விடுதலை வீரர் வ.உ.சி.
  • அண்ணா கோவை
  • அறிஞர் அண்ணாவின் மேடைத் தமிழ்
  • பெரியார் காவியம்
  • பெரியாரின் இலக்கியச் சிந்தனைகள்
  • கலித்தொகை காட்டும் பாலைத் தமிழும் குறிஞ்சித் தமிழும்
  • கலித்தொகை – உரையும் விளக்கமும்
  • புறநானூறு ஓர் அழகோவியம்
  • பாட்டுத் தோட்டம் (கவிதை நூல்)
  • பூமியின் வரலாறு (கற்கோளம், நீர்க்கோளம், வளிக்கோளம், உயிர்க்கோளம்)
  • அசோகா ஆங்கில போதினி
  • எளிய ஆங்கிலக் கட்டுரைகள்

உசாத்துணை


✅Finalised Page