under review

இடையன் நெடுங்கீரனார்

From Tamil Wiki

இடையன் நெடுங்கீரனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்க இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

இடையன் நெடுங்கீரனார் என்னும் பெயரிலுள்ள நெடுங்கீரன் என்பதை இவரது இயற்பெயராகவும் இடையன் என்ற சொல்லின் மூலம் இவர் ஆடுமாடு மேய்க்கும் முல்லை நிலத்தை சேர்ந்தவர் எனவும் கொள்ளலாம்.

இலக்கிய வாழ்க்கை

இடையன் நெடுங்கீரனார் இயற்றிய ஒரு பாடல், சங்கத் தமிழ் இலக்கியத் தொகை நூலான அகநானூற்றில் 166- ஆம் பாடலாக அமைந்துள்ளது. பரத்தையொடு காவிரியாற்றில் நீராடிய தலைவன் தன் வீட்டுக்கு வந்தவுடன் தன் மனைவியிடம் ஊரார் சொல்வது போல அப்படி நான் நீராடவே இல்லை என்று தெய்வத்தின்மீது சத்தியம் செய்கிறான். இதனைக் கேள்வியுற்று அவனுடன் நீராடிய பரத்தை அவன் சொல்வது உண்மையாயின் தன்னுடன் நீராடியது யார் என்று கேட்டு அவனது நடிப்பை ஏளனம் செய்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

பாடலால் அறியவரும் செய்திகள்

வேளூர் என்ற ஊரின் கோவில் தெய்வத்துக்குத் தெளித்த மணப்பொருள்களையும், மாலையையும் வண்டுகள் தீண்டாது. குற்றம் செய்தவர்களைக் கொன்று உயிர்ப் பலி கொள்ளும். வேளூர் இன்றைய புள்ளிருக்கும் வேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்)

பாடல் நடை

அகநானூறு 166

மருதத் திணை

பரத்தையொடு புனலாடிய தலைமகன் தலைமகளிடைப் புக்கு, ''யான் ஆடிற்றிலன்'' என்று சூளுற்றான் என்பது கேட்ட பரத்தை, தன் பாங்காயினார் கேட்ப, சொல்லியது

நல் மரம் குழீஇய நனை முதிர் சாடி
பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின்,
மயங்குமழைத் துவலையின் மறுகு உடன் பனிக்கும்
பழம் பல் நெல்லின் வேளூர்வாயில்,
நறு விரை தௌத்த நாறுஇணர் மாலை,
பொறி வரி இன வண்டு ஊதல கழியும்
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்,
புனை இருங் கதுப்பின் நீ கடுத்தோள்வயின்
அனையேன்ஆயின், அணங்குக, என்!' என
மனையோட் தேற்றும் மகிழ்நன்ஆயின்,
யார்கொல் வாழி, தோழி! நெருநல்
தார் பூண் களிற்றின் தலைப் புணை தழீஇ,
வதுவை ஈர் அணிப் பொலிந்து, நம்மொடு,
புதுவது வந்த காவிரிக்
கோடு தோய் மலிர்நிறை, ஆடியோரே?

(தென்னை மரத்தில் கட்டியிருந்த முதிர்ந்த கள்ளுப் பானையின் கோப்பு உடைந்துவிட்டால், மழைத்துளி விழுவது போலத் தெருவெல்லாம் நடுங்கும் ஊர் வேளூர்வாயில். அது நெல்வளம் பெருகும் பழமையான வயல்களைக் கொண்ட ஊர். அந்த வேளூர்வாயில் ஊரின் கோயிலில் தெய்வம் இருக்கிறதே, அந்தத் தெய்வத்துக்குத் தெளித்த மணப்பொருள்களையும், மாலையையும் வண்டுகள் தீண்டாமல் இருக்குமே, குற்றம் செய்தவர்களைக் கொன்று உயிர்ப் பலி கொள்ளும் அச்சம் தரும் தெய்வமாயிற்றே அது, அதன் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். அந்தக் கூந்தல் ஒப்பனைக்காரியோடு எனக்குத் தொடர்பு இல்லை. இருக்குமாயின் அந்தத் தெய்வம் என்னைத் தண்டிக்கட்டும்" என்று சொல்லி அவன் மனைவியைத் தேற்றுகிறான். அந்த மகிழ்நன் அவன் மனைவியிடம் அப்படிச் சொல்லி அவளைத் தேற்றுகிறான் என்றால் நேற்று காவிரி வெள்ளத்தில் மாலை அணிந்த யானைபோல் என்னைத் தழுவிக் கொண்டு நீராடி,விளையாடினானே அவன் யார்? தோழி, நீயே சொல்.)

உசாத்துணை✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Jan-2023, 09:01:11 IST