under review

ஆறு. இராமநாதன்

From Tamil Wiki
பேராசிரியர், முனைவர் ஆறு. இராமநாதன்
ஆறு. இராமநாதன்

ஆறு. இராமநாதன் (முனைவர் ஆறு. இராமநாதன்; ஆறு. ராமநாதன்; ஆறுமுகம் இராமநாதன்; ஆறுமுகம் ராமநாதன்) (பிறப்பு: ஆகஸ்ட் 3, 1950) தமிழ்ப் பேராசிரியர். நாட்டுப்புறவியல் ஆய்வறிஞர். தஞ்சாவூர், தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவர் உள்படப் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். இலக்கண, இலக்கிய ஆய்வு நூல்களையும், பொது வாசிப்புக்குரிய நூல்களையும் எழுதினார். பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

ஆறு. இராமநாதன், சிதம்பரம் வட்டம் வீராணம் அருகே உள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தில் ஆறுமுகம் - சீதாலட்சுமி இணையருக்கு, ஆகஸ்ட் 3, 1950 அன்று பிறந்தார். பள்ளிக் கல்வியை மஞ்சக்கொல்லையில் படித்தார். கல்லூரிக் கல்வியை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கற்றார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ‘நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ஆறு. இராமநாதன், மணமானவர். மனைவி: பவளக்கொடி. மகன்: அருணன். மகள்: எழிலரசி.

கல்விப் பணிகள்

ஆறு. இராமநாதன், கிருஷ்ணகிரியில் உள்ள அரசுக் கல்லூரியில், தமிழ்த் துறையில் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றினார். தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகத் தொடங்கி, பேராசிரியர், நாட்டுப்புறவியல் துறைப் பேராசிரியர், மொழிப்புலத் தலைவர், அஞ்சல்வழிக் கல்வி நிறுவன இயக்குநர், பதிப்புத்துறை இயக்குநர் எனப் பல பொறுப்புகளில் பணியாற்றினார்.

பணி ஓய்வுக்குப் பின், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கௌரவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

ஆறு. இராமநாதன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

ஆறு. இராமநாதன், நடவு, வையம் போன்ற இலக்கிய இதழ்களில் கவிதைகள் எழுதினார். பல்வேறு இதழ்களில் பொதுவாசிப்புக்குரிய சிறுகதைகள் எழுதினார். ’குமுறல்’, ‘இன்னொரு கொலசாமி’ என்பவை ஆறு. இராமநாதன், எழுதிய சிறுகதைத் தொகுப்புகள். இதழ்களில் இலக்கியம், ஆய்வு, நாட்டுப்புறவியல் சார்ந்து பல கட்டுரைகளை, நூல்களை எழுதினார்.

ஆறு. இராமநாதன், தென்னிந்திய நாட்டுப்புறக் கதைகளை ஆங்கிலத்தில் தொகுத்து வெளியிட்டார். தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்து 15 தொகுதிகளாக வெளியிட்டார். அத்தொகுப்பின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தார். 45-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

பேராசிரியர், முனைவர் ஆறு. இராமநாதன்

ஆய்வுகள்

ஆறு. இராமநாதன், நாட்டுப்புறவியல் ஆய்வில் தொடங்கி பல்வேறு ஆய்வுகளை முன்னெடுத்தார். பன்னாட்டு மாநாடுகள், கருத்தரங்குகள், செயலரங்குகள் போன்றவற்றில் பங்கேற்றார், பொறுப்பேற்று நடத்தினார். ஆறு. இராமநாதனின் ’தமிழில் புதிர்கள்’ என்னும் ஆய்வு நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்று. தனது முனைவர் பட்ட ஆய்வான ‘நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல்’ என்பதை நூலாக்கி வெளியிட்டார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பிலுள் தீப்பாஞ்சாயி என்ற சிறு தெய்வம் எவ்வாறு தீப்பாய்ந்த நாச்சியம்மன் திருக்கோயிலானது என்பதைத் தக்க சான்றுகளுடன் வெளிப்படுத்தினார்.

ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்டம் முழுவதும் நாட்டுப்புறவியல் சார்ந்த களப்பணியில் ஈடுபட்டார். ஆய்வின் முடிவுகளை ‘நாட்டுப்புறப் பாடல் களஞ்சியம்’ என்ற தலைப்பில் பத்து தொகுதிகளாக வெளியிட்டார். முதல் ஐந்து தொகுதிகள் ஆறு. இராமநாதன் தொகுத்தவை. பிற ஐந்து தொகுதிகளுக்கும் முதன்மைப் பதிப்பாசிரியராகச் செயல்பட்டார்.

ஆறு. இராமநாதன், தனது ஆய்வை, ‘வரலாற்று நிலவியல் ஆய்வுமுறை’ என்ற வகைமையில் மேற்கொண்டார். ஒரு கதை வாய்மொழியாக ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு பரவும்போது நிலவியல் கூறுகள் அக்கதையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை ஆவணப்படுத்தினார். நாட்டுப்புறக் கலைகள் குறித்து ஆய்வு செய்து அதனை நூலாக வெளிக்கொணர்ந்தார்.

நாட்டுப்புறவியல் மற்றும் ஆய்வு சார்ந்து ஆறு. இராமநாதன் எழுதிய நூல்கள் சில தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்திலும் பாட நூல்களாக வைக்கப்பட்டன.

சிறந்த நூலாசிரியர் விருது

விருதுகள்

  • ஆறு. இராமநாதன் எழுதிய ‘தமிழர் வழிபாட்டு மரபுகள்’ நூல், 2006-ல், தமிழ் வளர்ச்சித் துறையின், நாட்டுப்புறவியல் துறை சார்ந்த சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றது.
  • தமிழர் கலை இலக்கிய மரபுகள் நூல், 2007, சிறந்த நூலுக்கான தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசு பெற்றது.
  • நொண்டிப் பிள்ளையார் சிறுகதை நன்னன் அறக்கட்டளை வழங்கிய அண்ணல் நினைவுப் பரிசைப் பெற்றது.
  • நாட்டுப்புற கலைகள் - நிகழ்த்து கலைகள் நூலுக்கு, 2001-ல், காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது கிடைத்தது.
  • தமிழர் கலை இலக்கிய மரபுகள் நூலுக்கு சிறந்த நாட்டுப்புறவியல் நூலுக்கான தமிழக அரசின் பரிசு கிடைத்தது.
  • பாரதியார் உரைநடைகள் நூலுக்கு கவிதை உறவுகள் வழங்கிய இரண்டாம் பரிசு கிடைத்தது.
  • பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கிய நாட்டுப்புறவியல் ஆய்வுகளுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது
  • நெய்வேலி புத்தக் கண்காட்சியில் வழங்கப்பட்ட சிறந்த எழுத்தாளர் விருது (2008)
  • திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வழங்கிய சிறந்த களப்பணியாளர் விருது
  • டாக்டர் மு.வ. நினைவுப் பரிசு


மதிப்பீடு

ஆறு. இராமநாதன் பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை எழுதினார். நாட்டுப்புறவியலில் களப்பணியாற்றி பல குறிப்பிடத்தகுந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டார். நாட்டுப்புறப் பாடல் களஞ்சியத்தைத் தொகுத்ததும், நாட்டுப்புறவியல் கதைக் களஞ்சியத்தைத் தொகுத்ததும் இவரது முக்கிய பணிகள். ஆறு. இராமநாதன் அறிமுகப்படுத்திய 'வரலாற்று நிலவியல் ஆய்வுமுறை’ ஒரு குறிப்பிடத்தகுந்த ஆய்வுமுறை.

ஆறு. இராமநாதன் தமிழறிஞராகவும், தமிழின் குறிப்பிடத்தகுந்த நாட்டுப்புறவியல் ஆய்வாளராகவும் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

சிறுகதைத் தொகுப்பு
  • குமுறல்
  • இன்னொரு கொலசாமி
ஆய்வு நூல்கள்
  • தமிழ்ப் புதிர்கள் - ஓர் ஆய்வு
  • நாட்டுப்புறவியல் ஆய்வுகள் – இரண்டு பாகங்கள்
  • நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல்
  • நாட்டுப்புறப் பாடல் வகைகள்
  • நாட்டுப்புறவியல் கோட்பாட்டுப் பார்வைகள்
  • நாட்டுப்புறவியல் கள ஆய்வு நெறிமுறைகள்
  • நாட்டுப்புறவியல் ஆய்வு முறைகள்
  • நாட்டுப்புறக் கதைகள்
  • நாட்டுபுறக் கலைகள் – நிகழ்த்துக்கலை
  • நாட்டுப்புறப் பாடல் களஞ்சியம் – 10 பாகங்கள்
  • நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் - பதினைந்து தொகுதிகள்
  • தென்னிந்திய நாட்டுப்புறக் கதைகள்
  • வரலாற்று நிலவியல் ஆய்வுமுறை - அறிமுகமும் ஆய்வுகளும்
  • காதலர் விடுகதைகள்
  • வாழும் மரபுகள்
  • மாறிவரும் சமூகம்
  • தமிழர் அடையாளங்கள்
  • தமிழர் வழிபாட்டு மரபுகள்
  • தஞ்சை நாட்டுப்புறவியல்
  • தமிழர் கலை இலக்கிய மரபுகள்
  • சிறுவர், சிறுமியர் வழக்காறுகள்
  • சிட்டுக்குருவிகளா… வாய்மொழிப்பாடல்கள்
  • பாரதிதாசன் உரைநடைகள்
  • தெய்வங்களின் தோற்றக்கதைகள்
  • எழுத்திலக்கியங்களும் வாய்மொழி இலக்கியங்களும்
  • வாய் மொழி மரபும் எழுத்து மரபும்
  • கார்த்திகைத் திருவிழா – தொல் தமிழர் விழா
  • ஆநிரை கவர்தல், மீட்டல், ஏறு தழுவுதல் = மாட்டுப்பொங்கல்
  • ராமனும் தீயில் இறங்கியிருந்தால்… நாட்டுப்புற இலக்கியச் சிந்தனைகள்
  • தேசிங்குராஜன் கதைப் பாடல்கள்

உசாத்துணை


✅Finalised Page