ஆர்.எஸ். ஜேக்கப்
- ஜேக்கப் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஜேக்கப் (பெயர் பட்டியல்)
ஆர்.எஸ். ஜேக்கப் (நவம்பர் 19, 1926 - டிசம்பர் 22, 2021) தமிழ் எழுத்தாளர், ஆசிரியர், பத்திரிகையாசிரியர், பதிப்பாளர், அரசியல்வாதி, கள ஆய்வாளர், சொற்பொழிவாளர். சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளார்.
பிறப்பு, கல்வி
ஆர்.எஸ். ஜேக்கப் தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி அருகே ராஜாவின் கோயில் கிராமத்தில் சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு 1925-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் பதினொருவர். தந்தை விவசாயி. பருத்தி வணிகமும் செய்தார். ராஜாவின்கோவில் மிஷன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார். அருகிலுள்ள புதியம்புத்தூர் கிராமத்தில் உயர் நிலைக்கல்வி பயின்றார். எட்டாம் வகுப்பில் தாய் இறந்ததால் பள்ளிப் படிப்பு தடைபட்டது. பின் திருநெல்வேலி அரசு போதனாமுறை பயிற்சிப் பள்ளியில் இரண்டாண்டுகள் பயின்றார்.
தனிவாழ்க்கை
ஆர்.எஸ். ஜேக்கப் 1956-ல் வயலட் மேரி ஃப்ளாரன்சை திருமணம் செய்து கொண்டார். மனைவி ஆசிரியர்.
ஆசிரியப்பணி
திருநெல்வேலி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பண்ணையூர் கிராமத்தில் கிறிஸ்தவ மிஷினரி பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்ற அழைக்கப்பட்டார். பண்ணையூர் கிராமத்தில் ஏழை, எளிய பிள்ளைகள் படிக்க பள்ளிக்கூடம் தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென ஊர் ஜமீனைச் சந்தித்தார். ஜமீன் மறுத்ததால் ஜமீனுக்குத் தெரியாமல் தலித் மக்கள் தெருவில் கிணற்றடியில் கூரை வேய்ந்து பள்ளிக்கூடம் ஒன்றைத் துவங்கினார். வீடு, வீடாகச் சென்று குழந்தைகளை தேடிப்பிடித்து மாணவர்களாக்கினார். ஜமீன் அதைக் கண்டறிந்து அடித்ததால் பண்ணையூரிலிருந்து தப்பித்து ஸ்ரீவைகுண்டம் வந்தார்.
நெல்லை சதிவழக்கில் சிறைப்பட்டு 1956-ல் சிறையிலிருந்து வெளிவந்த பின் மீண்டும் ஆசிரியப்பணி செய்தார். கதீட்ரல், தூய யோவான் பள்ளிகளில் வேலை பார்த்த பின் 1985-ல் பணி ஓய்வு பெற்றார்.
அரசியல் வாழ்க்கை
ஆர்.எஸ். ஜேக்கப் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர். பாலதண்டாயுதம் மற்றும் சில தோழர்களுடனான தொடர்பு மூலம் அரசியல் விழிப்புணர்வு பெற்றார். ஆர்.எஸ்.ஜேக்கப் இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக இயங்கியவர். தென் மாவட்டங்களில் ஆங்கிலேய அரசை எதிர்த்து கலகம் நடந்து கொண்டிருந்தபோது ரயிலைக் கவிழ்க்க கம்யூனிஸ்ட்காரர்கள் முடிவு செய்து அதை நடத்திய பின் தலைமறைவாயினர். தலைமறைவான தோழர்களுக்கு வீட்டில் தஞ்சம் கொடுத்தாகச் சொல்லி நெல்லை சதி வழக்கில் பதினெட்டாவது குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். சிறையில் தோழர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியரானார்.
இதழியல்
பதினெட்டாம் நூற்றாண்டு முதல் வெளிவரும் நற்போதகம் இதழின் ஆசிரியராகப் பன்னிரண்டு ஆண்டுகள் செயல்பட்டார். சிறுவர் சுடரொளி, பாலியர் நேசன், மனைமலர் போன்ற இதழ்களிலும் ஆசிரியராக இருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
ஆர்.எஸ். ஜேக்கப்பின் முதல் சிறுகதை ‘பாஞ்சைப் புலிகள்’ 1947-ல் தினசரிமடல் வார இதழில் வெளியானது. ஆர்.எஸ். கோபு என்ற பெயரில் எழுதினார். தமிழ்மணி, சிற்பி, தாமரை, ஜனசக்தி, பிரசண்ட விகடன், நிருபம், சுடரொளி போன்ற இதழ்களில் எழுதினார்.
ஆர்.எஸ்.ஜேக்கப் எழுதிய முதல் சிறுகதைத் தொகுப்பு ‘மோசம்போன மோதிரம்’ 1949-ல் வெளியானது. தொடர்ந்து ‘நூறு த்ருஷ்டாந்த கதைகள்’, ’நூறு ஜீவனுள்ள கதைகள்’, ’நூறு அருளுரைக் கதைகள்’ போன்ற தொகுப்புகள் வெளிவந்தன.
ஒரு கரிசல் காட்டுக் கிராமத்தின் அவல நிலையை மாற்றுவதற்காக எடுத்த நடவடிக்கைகளை 'வாத்தியார்' என்ற நாவலில் எழுதியுள்ளார். நெல்லைச் சதி வழக்கு சம்பவங்களை நூல்களாக அவர் எழுதியுள்ளார். மூன்றாண்டுகள் சிறைவாசத்தை 'மரண வாயிலில்' என்ற நாவலில் வெளிப்படுத்தியுள்ளார். 3 நாவல்கள், 18 சிறுகதைத் தொகுப்புகள், வரலாற்று கள ஆய்வுகள் உட்பட இதுவரை 104 நூல்கள் எழுதியுள்ளார்.
விருது
- ஆர்.எஸ். ஜேக்கப் சான்றோருக்கான ஜீவா விருது பெற்றார்.
மறைவு
ஆர்.எஸ். ஜேக்கப் டிசம்பர் 22, 2021-ல் காலமானார்.
இலக்கிய இடம்
கிறிஸ்தவ நவீன இலக்கியம் என அடையாளப்படுத்தப்படும் ஓர் எழுத்துமுறை தமிழில் உண்டு. கிருபா சத்தியநாதனின் நூல்களின் மொழியாக்கம் வழியாக இது உருவானது. அந்நூல்களை மொழியாக்கம் செய்த சாமுவேல் பவுல் அதன் முன்னோடிகளில் ஒருவர். மாற்கு ,ஐசக் அருமைராசன், டேவிட் சித்தையா என பல எழுத்தாளர்கள் கொண்ட இம்மரபின் முக்கியமான ஆளுமை ஆர்.எஸ்.ஜேக்கப். கிறிஸ்தவ இலட்சியவாதம் ஒன்றை முன்வைக்கும் எழுத்துக்கள் இவை. நேரடியான பக்தி இலக்கியங்கள் அல்ல. ஆர்.எஸ்.ஜேக்கப்பின் எழுத்துக்கள் அந்த இலட்சியவாதத்தை நேரடியாக முன்வைப்பவை, பிரச்சாரத்தன்மை கொண்டவை.
நூல் பட்டியல்
சிறுகதை
- மரண வாயிலிலே பைபிள்
- மோசம்போன மோதிரம்
- நூறு த்ருஷ்டாந்த கதைகள்
- நூறு ஜீவனுள்ள கதைகள்
- நூறு அருளுரைக் கதைகள்
- ஒலிக்கவில்லை
- சொல்லும் செயலும்
- பட்டுப்பாவாடை
- வரவேற்கப்படாத விருந்தாளி
- யானை மெழுகுவர்த்தி
- அக்கா வீட்டிற்குப் போனேன்
- பட்டணப் பிரவேசம்
- கிறுக்கன்
- ஆர்.எஸ். ஜேக்கப் சிறுகதைகள்
பிற
- தமிழில் முதல் சிறுகதை எது?
- பனையண்ணன்
- வாத்தியார்
- நெல்லை அப்போஸ்தலன் ரேனியஸ்
- உண்மைக்கதைகள்
- கரிசல் காட்டுக் கதைகள்
- நெல்லைச் சதிவழக்கின் தியாக தீபங்கள்
- அருமையான பிரசங்கங்கள்
- நகைமொழிக் கதைகள் நானூறு (நான்கு பாகங்கள்)
- ஒரு வாத்தியாரின் டைரி
- படைப்பாளியின் டைரி
- சின்ன சின்ன கதைகள் பெரிய பெரிய உண்மைகள்
- மணமும் குணமும்
- பக்தியூட்டும் பல்சுவைக் கதைகள்
- சான்றோரின் வாழ்வில் ஒரு நாள் நடந்த கதைகள்
- அருமையான பிரசங்க ஆதாரக் கதைகள்
- நெல்லைச் சரிதைக் கதைகள்
- கரிசல்காட்டுக் கதைகள்
- ஆர்வமூட்டும் அருட் கதைகள்
- உயரிய உண்மைக் கதைகள்
- உயிரூட்டும் உண்மைக் கதைகள்
- சாட்சிக்கு ஒரு சாட்டை சுவையான செய்திக் கதைகள் ஐநூறு
- உங்கள் குழந்தைகளுக்கு நல்ல நல்ல கதைகள்
- இளம் தம்பதிகளுக்கு இனிக்கும் செய்திகள்
- திருச்சபைத் தொண்டர்கள்
உசாத்துணை
- கீற்று.காம்: ஆர்.எஸ். ஜேக்கப்
- ஆர்.எஸ்.ஜேக்கப்: தென்றல்: அரவிந்த்
- நெல்லைச் சதி வழக்கில் நானும் அவரும்தான் எஞ்சியிருந்தோம்: வாத்தியார் ஆர்.எஸ்.ஜேக்கப் மறைவுக்கு நல்லகண்ணு புகழஞ்சலி
- வாத்தியாரைச் சந்தித்த கதை: கார்த்திக் புகழேந்தி
- ஆர் எஸ். ஜேக்கப்- குங்குமம் பேட்டி
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
14-Sep-2022, 05:25:12 IST