ஆத்திசூடி சிந்து
- ஆத்திசூடி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஆத்திசூடி (பெயர் பட்டியல்)
ஆத்திசூடி சிந்து (1915), ஒரு நீதி நூல். ஔவையார் இயற்றிய ஆத்திசூடியைத் தொடர்ந்து பலரும் பல ஆத்திசூடி நூல்களை, ஆத்திசூடி வெண்பா, புராணம் எனப் பல நூல்களை இயற்றினர். அவ்வகையில் சிந்து இலக்கிய வகைமையில் இயற்றப்பட்ட நூல் ஆத்திசூடி சிந்து. இதனை இயற்றியவர் பெயரை அறிய இயலவில்லை.
வெளியீடு
ஆத்திசூடி சிந்து நூலின் முதல் பதிப்பு 1915-ல், சிதம்பரம் நடராஜ சுவாமிகளால் பார்வையிடப்பட்டு சென்னை சக்கரவர்த்தி அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு வெளியானது. இதன் பதிப்பாளர்: இட்டா பார்த்தசாரதி நாயுடு, சென்னை. ஆத்திசூடி சிந்து நூலின் இரண்டாம் பதிப்பு, 1923-ல், சென்னை சூளை சங்கநிதி விளக்க அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.
நூல் அமைப்பு
ஆத்திசூடி சிந்து நூலின் தொடக்கத்தில் ஆத்திசூடி சிந்து என்ற தலைப்பின் கீழ் 'ஓரடித் தங்கப்பண்' என்ற சொல் இடம்பெற்றது. தொடர்ந்து நூலாசிரியரின் வேண்டுகோள் வெண்பா வடிவில் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து மனதிற்கு உபதேசம் கூறுவது போல் சிந்துப் பாக்களைக் கொண்டதாய் நூல் அமைந்துள்ளது. நூலின் இறுதியில் வாழ்த்து இடம் பெற்றது.
உள்ளடக்கம்
ஆத்திசூடி சிந்து நூல், 'அத்திமுகத்தோனை அனுதினமும் மறவாதே', 'ஆதிசிவமூர்த்தி அடிகள் மறவாதே' என அகர வரிசையில் தொடங்கி, 'கட்டின மனைவி தன்னை கண்ணீர் சோர வையாதே', 'காசுபணஞ்ச் சேர்த்து கணுகக்கிட்டலையாதே' எனத் தொடர்ந்து 'வெஞ்சமரின் முன்னே வேடிக்கையாய் நில்லாதே', 'வேந்தன்றன் சொல்லை நீ வெறுத்து நீ தள்ளாதே', 'வையகத்தோர் சொல்லும் வழியைத் தடுக்காதே' என வகர வரிசையில் நிறைவடைகிறது.
பாடல் நடை
- அந்திமுகத்தோனை அனுதினமறவாதே
- ஆதிசிவமூர்த்தி அடிகள் மறவாதே
- இவ்வுலகில் யாவருக்கும் இடரினைத்தேடாதே
- ஈனர்தமைச்சேர எள்ளளவுநினையாதே
- உலகத்திலெந்நாளும் குலப்பழுதுபேசாதே
- ஊமைகுருடர்முதல் வொருத்தரைமேசாதே
- எவர்க்கும் பிரியவனாய் இருக்கவேயெண்ணுவாய்
- ஏழையர் தமைக்கண்டு ஏளனஞ்செய்யாதே
- ஐயமெனவந்தோரை நையவேபேசாதே
- ஒருத்தர்க்கென்னாளும் ஒருதீங்குந்தேடாதே
- ஓதுவித்தோன்தனக்கு ஓர்குறையுஞ்செய்யாதே
- ஒளவியம்பேசி அகலத்திற்றிரியாதே
- ......
- .......
- வாதஞ்சொல்வேனென்று வழங்கியலையாதே
- விலையைக்குறைக்காதே வீண்வம்புபேசாதே
- வீணானவார்த்தை கூறி காலம் ஒழிக்கொணாதே
- வுண்டதோர்வீட்டுக்கு ரெண்டகம்நினையாதே
- வூராருடைமைக்கு பேராசைகொளளாதே
- வெஞ்சமரின் முன்னே வேடிக்கையாய் நில்லாதே
- வேந்தன்றன் சொல்லைநீ வெறுத்து நீதள்ளாதே
- வையகத்தோர்சொல்லும் வழியைத் தடுக்காதே
மதிப்பீடு
ஆத்திசூடிசிந்து, ஔவையாரின் ஆத்திசூடியை அடியொற்றி எழுதப்பட்ட, சிறார்களுக்கும், இளையோர்களுக்கும் அறிவுரை கூறும் நீதி இலக்கிய நூல்களுள் ஒன்றாக அறியப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
12-Jul-2024, 11:20:10 IST