under review

ஆதி கும்பேஸ்வரர் கோயில்

From Tamil Wiki
ஆதி கும்பேஸ்வரர் கோயில் (நன்றி: தரிசனம்)
ஆதி கும்பேஸ்வரர் கோயில் மூலவர், அம்பாள்

ஆதி கும்பேஸ்வரர் கோயில் (குடந்தை குடமுக்கு கோயில்) கும்பகோணத்திலுள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இடம்

ஆதி கும்பேஸ்வரர் கோயில்

கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் குடந்தை குடமுக்கு கோயில் உள்ளது. கும்பகோணம் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. காவிரி மற்றும் அரசலாறு ஆறுகள் இவ்வாலயத்தைச் சுற்றி மலர்மாலை போல் அமைந்துள்ளன. மயிலாடுதுறையிலிருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ரயில் நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கோயில் உள்ளது.

வரலாறு

ஆதி கும்பேஸ்வரர் கோயில் சோழர் காலத்திலிருந்து (பொ.யு. 7--ம் நூற்றாண்டு) உள்ளது. பொ.யு. 15-17-ம் நூற்றாண்டில் நாயக்கர்களால் விரிவுபடுத்தப்பட்டது. இக்கோயிலுடன் தொடர்புடைய சப்தஸ்தானம் கோயில்கள் கலையநல்லூர், திருவலஞ்சுழி, தாராசுரம், சுவாமிமலை, கொட்டியூர், கும்பகோணம் மற்றும் மேலக்காவேரி.

பெயர்க்காரணம்

ஆதி கும்பேஸ்வரர் கோயில்

இந்து புராணங்களின் படி ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அழிக்கும் பிரளயம் ஒன்று வரும். பிரளயத்திற்குப் பின் மீண்டும் படைப்புத் தொழிலை எப்படி ஆரம்பிப்பது என்ற சந்தேகத்தை பிரம்மா சிவனிடம் வினவினார். அவரின் யோசனைப்படி அனைத்து உயிரினங்களின் விதைகள், நான்கு வேதங்கள் மற்றும் புராணங்கள் ஆகியவற்றை அமிர்தம் நிரப்பப்பட்ட ஒரு கும்பத்தில் பிரம்மா வைத்தார். இதில் பூக்கள் மற்றும் துணிகளால் அலங்கரித்து சரமும் கட்டப்பட்டது. இது கைலாச மலையின் உச்சியில் வைக்கப்பட்டது. மகா பிரளயம் தொடங்கிய போது பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அழித்தது. அமுத கலங்களும் இடம் பெயர்ந்து பல வருடங்களாக கடலில் மிதக்க ஆரம்பித்தன. அந்த அமுத கலசம் கும்பகோணத்தில் தங்கியதால் இந்த இடம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது. சிவன் கிராத மூர்த்தி உருவம் எடுத்து தன் அம்பினால் கும்பத்தைப் பிளந்தார். பூமியில் வாழ்க்கை மீண்டும் செழிக்கத் தொடங்கியது. பானை உடைந்து அதிலிருந்த அலங்காரப் பொருட்கள் பூமியின் பல்வேறு இடங்களில் விழுந்ததாக நம்பப்படுகிறது. இந்த துண்டுகள் ஒவ்வொன்றும் சிவலிங்கமாக மாறியது.

கலசத்திலிருந்து வந்த அமிர்தம் மகாமகம், பொற்றாமரைக் குளங்களை அடைந்ததாக நம்பப்படுகிறது. இந்த அமிர்தம் இருபத்தி நான்கு கிலோமீட்டர் பரப்பளவில் பரவியதாகவும் நம்பப்படுகிறது. இந்தப்பரப்பில் 'பஞ்சகுரோச ஸ்தலங்கள்' என்று அழைக்கப்படும் ஐந்து சிவன் கோவில்கள் உள்ளன (பஞ்ச -ஐந்து, குரோசா-பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட அளவீட்டு அலகு). பஞ்சகுரோச தலங்களான திருவிடைமருதூர், திருப்பாடலவனம் (கருப்பூர்), திருநாகேஸ்வரம், சுவாமிமலை, தாராசுரம் ஆகிய கோவில்களில் நீராடி தரிசித்த பிறகு கும்பேஸ்வரர் ஆலயத்தை தரிசிப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது.

ஆதி கும்பேஸ்வரர் கோயில்
லிங்கம் விழுந்த இடங்கள்
  • கும்பேசம்: அமுத கலசங்கள் தங்கிய இடம். ஆதி கும்பேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்பட்டது. கிராத மூர்த்தியே சிவலிங்கம் செய்ததாக நம்பிக்கை உள்ளது. அமிர்தமும் மணலும் கலந்து உடைந்த கலசங்களை கொண்டு சிவலிங்கம் செய்தார். இந்த இடத்தில் தங்கினார். சிவலிங்கம் ஒரு பானையின் கழுத்து வடிவில் உள்ளது
  • சோமேசம்: சோமேஸ்வரர் கோவில்: கும்பத்தின் சரம் விழுந்த இடம்.
  • நாகேசம்: நாகேஸ்வரர் கோவில்: கலசத்தின் வில்வம் விழுந்த இடம்
  • அபிமுகேசம்: அபிமுகேஸ்வரர் கோவில்: கலசத்தின் தேங்காய் விழுந்த இடம்
  • கௌதமேசம்: கௌதமேஸ்வரர் கோவில்: கலசத்தின்புனித நூல் விழுந்த இடம்.
  • குடவோயில்: கோணேஸ்வரர் கோவில்: கலசத்தின் விளிம்பு விழுந்த இடம்.
  • கலயநல்லூர் (சாக்கோட்டை): அமிர்தகலச நாதர் கோவில்: கலசத்தின் நடுப்பகுதி விழுந்த இடம்.
  • பாணத்துரை: பாணபுரீஸ்வரர் கோவில்: சிவபெருமான் தன் அம்பினால் கலசத்தை உடைத்த தலம்.
  • மாலதிவனம்: ஆத்திகம்பட்ட விஸ்வநாதர் கோவில்: கலச மலர்கள் விழுந்த இடம்.
  • காளஹஸ்தீஸ்வரர் கோயில்: கலசத்தின் சந்தனம் விழுந்த இடம்.
  • ஏகாம்பரேஸ்வரர் கோவில்: கலசத்தின் மற்ற அலங்காரப் பொருட்கள் விழுந்த இடம்.
  • கோட்டையூர் கோடீஸ்வரர் கோவில்: தேன் சில துளிகள் விழுந்த இடம்.

தொன்மம்

மகாவிஷ்ணு இங்குள்ள இறைவனை வணங்கி சிவபெருமானிடம் சக்கரம் பெற்றார். இங்குள்ள மகாவிஷ்ணு சக்ரபாணி என்று அழைக்கப்பட்டார். பிரம்மா, இந்திரன், காமதேனு, காசியப முனிவர் மற்றும் ஹேமரிஷி ஆகியோர் இங்குள்ள சிவனை வழிபட்டதாகவும் நம்பிக்கை உள்ளது.

ஆதி கும்பேஸ்வரர் கோயில் தலமரம்

கோயில் பற்றி

  • மூலவர்: ஆதி கும்பேஸ்வரர், ஸ்ரீ அமுதேஸ்வரர்
  • அம்பாள்: மங்களாம்பிகை அம்மன்
  • தீர்த்தம்: மகாமகம், பொற்றாமரை குளங்கள் மற்றும் மேலும் 12 தீர்த்தங்கள்
  • ஸ்தல விருட்சம்: வன்னி
  • பதிகம் வழங்கியவர்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
  • காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள இருநூற்று எழுபத்தியாறு தேவார பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று.
  • சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார்.
  • மந்திர பீடேஸ்வரி என்று அழைக்கப்படும் மங்களாம்பிகை தேவியின் சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. சிவபெருமான் தன் பலத்தில் பாதியை பார்வதி தேவிக்கு கொடுத்து மணந்தார்.
  • ஐம்பத்தியொரு சக்தி பீடங்களில் இதுவே முதன்மை.
  • கடைசியாக கும்பாபிஷேகம் டிசம்பர் 12, 1999 அன்று நடந்தது.

இக்கோயிலுடன் தொடர்புடைய புனித தீர்த்தங்கள் (14)

  • மகாமகம் தொட்டி
  • பொற்றாமரை குளம்
  • வருண தீர்த்தம்
  • காஸ்யப தீர்த்தம்
  • சக்கர தீர்த்தம்
  • மாதங்க தீர்த்தம்
  • பகவத் தீர்த்தம்)
  • மங்கள தீர்த்தம்
  • நாக தீர்த்தம்
  • குர தீர்த்தம்
  • சந்திர தீர்த்தம்
  • சூரிய தீர்த்தம்
  • கௌதம தீர்த்தம் மற்றும்
  • வராஹ தீர்த்தம்
ஆதி கும்பேஸ்வரர் கோயில்

கோயில் அமைப்பு

கிழக்கு நோக்கிய ஆதி கும்பேஸ்வரர் ஆலயம் மூன்று பிரகாரங்களைக் கொண்டது. அதன் பிரதான கோபுரம் ஒன்பது நிலைகளைக் கொண்டுள்ளது. நூற்றி இருபத்தியெட்டு அடி உயரத்தில் உள்ளது.சிவன் மற்றும் பார்வதி தேவி சன்னதிகள் உள்ளன. இங்கு கிராத மூர்த்திக்கு தனி சன்னதி உள்ளது. லிங்கம் மணலால் ஆனது என்பதால் அதன் அடிப்பகுதியான ஆவுடைக்கு மட்டும் அபிஷேகம் செய்யப்படுகிறது. லிங்கத்தின் மீது எப்போதாவது ஒருமுறை புனுகு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. லிங்கம் பெரிய அளவில் ("மகாலிங்கம்") சாய்ந்த நிலையில் உள்ளது. அது எப்போதும் தங்கக் கவசத்தால் மூடப்பட்டிருக்கும். இங்குள்ள முருகன் கார்த்திகேயன் என்று அழைக்கப்படுகிறார். தனது மனைவியருடன் மயில் ஏற்றத்துடன் காட்சியளிக்கிறார். அவர் ஆறு முகங்களுடன் சித்தரிக்கப்படுகிறார். ஆனால் 12 கைகளுக்கு பதிலாக 6 கைகளை மட்டுமே கொண்டவர். இங்கு ஒரு முற்றுப்பெறாத பிரதான கோபுரம் உள்ளது, இது "மொட்டை கோபுரம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில், பல மண்டபங்கள் உள்ளன. பதினாறு தூண்கள் கொண்ட மண்டபம், விஜயநகர காலத்தில் கட்டப்பட்ட நவராத்திரி மண்டபம் ஆகியவை உள்ளன. இதில் 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.

மகாமகம்
மகாமகம்

ஆறு ஏக்கர் பரப்பளவில் உள்ள மிகப்பெரிய மகாமக குளம் பதினாறு நுழைவாயில்களைக் கொண்டது. ஒவ்வொரு நுழைவாயிலிலும் சிவன் சன்னதி உள்ளது. இந்த சன்னதிகள் கூட்டாக 'சோடச மகாலிங்கஸ்வாமி' (சோடசம்=16) என்று அழைக்கப்படுகின்றன. மகாமக தீர்த்தம் க்ருதயுகத்தில் பிரம்ம தீர்த்தம் என்றும், திரேதாயுகத்தில் பாபனோடம் என்றும், துவபரயுகத்தில் முக்தி தீர்த்தம் என்றும், கலியுகத்தில் கன்யா தீர்த்தம் என்றும் அழைக்கப்படும். இந்திரன், அக்னி, நாக, திருதியை, வருணன், வாயு, குபேரன், ஈசன்யா, பிரம்மா, கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவேரி, குமாரி, பயோஷினி, சரயு, கன்னியா மற்றும் தேவாஸ் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இருபது கிணறுகள் மற்றும் தீர்த்தங்கள் மகாமக குளத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.

சிவலிங்கங்களின் பெயர்கள் (16)

  • பிரம்மதீர்த்தேஸ்வரர்
  • முகுந்தேஸ்வரர்
  • தானேஸ்வரர்
  • வ்ருஷபேஸ்வரர்
  • பானேஸ்வரர்
  • கோணேஸ்வரர்
  • பக்திகேஸ்வரர்
  • பைரவேஸ்வரர்
  • அகஸ்தீஸ்வரர்
  • வியாசேஸ்வரர்
  • உமா பகேஸ்வரர்
  • நிருத்தீஸ்வரர்
  • பிரம்மேஸ்வரர்
  • கங்காதரேஸ்வரர்
  • முக்தி தீர்த்தேஸ்வரர்
  • க்ஷேத்ரபாலேஸ்வரர்

சிற்பங்கள்

விநாயகர், முருகன், கஜலட்சுமி, 63 நாயன்மார்கள் (கல் மற்றும் ஊர்வலச் சிலைகள்), நடராஜர், சோமாஸ்கந்தர், கிராத மூர்த்திகள், நால்வர்கள், வீரபத்ரர், சப்தகன்னிகைகள், விசாலாட்சி, விஸ்வநாதர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. முதல் மாடவீதியில் வலஞ்சுழி விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு, பிக்ஷாண்டவர், அன்னபூரணி, மகாலட்சுமி, சரஸ்வதி, ஜேஷ்டாதேவி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரை தரிசிக்கலாம். இரண்டாவது மாடவீதியில் நவநீத விநாயகர், சட்டநாதர், பைரவர், ஜுரஹரேஸ்வரர், சந்திரன், சூரியன், வல்லப கணபதி, நவகிரகம், லட்சுமி நாராயணப் பெருமாள், வன்னி விநாயகர், கும்பமுனிசித்தர் ஆகியோரின் சிலைகள் உள்ளன. ஒரு தூணில் உள்ள கல் நாகஸ்வரம் மிகவும் தனித்துவமானது.

சிறப்புகள்

  • இக்கோயில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் தீர்த்தவாரியில் பங்குபெறும் ஆலயங்களில் ஒன்று. இது மாசியில் நடைபெறும்.
  • 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் முக்தி அடைவதற்கு முன்பு பக்தர்களுக்கு இங்கு உணவு வழங்கியதாக நம்பிக்கை உள்ளது.
  • காசி தளத்தை விட கும்பகோணம் புனிதமானது. வாரணாசியில் செய்த பாவத்தை கும்பகோணத்தில் தான் கழுவ முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
  • அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இக்கோயிலின் முருகப் பெருமானைப் போற்றிப் பாடல்களைப் பாடினார்.

வழிபாட்டு நேரம்

  • காலை 6-12.30 வரை
  • மாலை 4-8.30 வரை

விழாக்கள்

  • மாசியில் மாசி மகம், பிரம்மோத்ஸவம் கொண்டாடப்படும்.
  • சிவபெருமான் தொடர்பான அனைத்து விழாக்களும் இந்தக் கோயிலில் கொண்டாடப்படும்.

உசாத்துணை


✅Finalised Page