under review

ஆசி கந்தராஜா

From Tamil Wiki
ஆசி கந்தராசா
ஆசி கந்தராஜா
ஆசி கந்தராஜா நூல்வெளியீடு
ஆசி கந்தராஜா கள்ளக்கணக்கு நூலுக்கு விருதுபெறுகிறார் (தினக்குரல்)
மதுரை பன்னாட்டு இலக்கிய விருது 2020

ஆசி கந்தராஜா (பிறப்பு: ஜனவரி 25, 1950 ) ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்துவாழும் ஈழ எழுத்தாளர். வேளாண் அறிவியலாளர். தாவரவியல் மற்றும் வேளாண் அறிவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

பிறப்பு , கல்வி

இலங்கையின் வட மாகாணத்தில - தென்மராட்சிப் பிரதேசத்தில் கைதடி என்ற இடத்தில் ஆ.சின்னத்தம்பி - முத்துப்பிள்ளை தம்பதிகளுக்கு ஜனவரி 25, 1950அன்று பிறந்தவர் கந்தராஜா. ஜெர்மன் அரசின் புலமைப் பரிசில் பெற்று 1974-ம் ஆண்டு ஜெர்மனி சென்று கல்வி கற்றார். விவசாயம், தோட்டக்கலை, பூங்கனியியல், உயிரியல் தொழில்நுட்பவியல் மற்றும் தாவரங்களின் வடிவியல் துறைகளில் (Phytomorphology) பட்டப்படிப்பு மற்றும் முனைவர் பட்ட ஆய்வுகளை நிறைவு செய்தார்.

தனிவாழ்க்கை

ஆசி கந்தராஜா 1987-ல் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தார். ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகக் கடமையாற்றினார்.

ஆசி கந்தராஜாவின் மனைவியின் பெயர் சத்தியபாமா. மகன்கள் அரவிந்தன், ஐங்கரன். மகளின் பெயர் மயூரி. ஆசி கந்தராஜா தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தனது மனைவியுடன் வசிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

ஆசி கந்தராஜா அறிவியல் செய்திகளை தமிழில் எழுதத் தொடங்கினார். நவீன இலக்கியப் பயிற்சி கொண்ட அவர் அக்கட்டுரைகளை புனைவுமொழிக்கு அணுக்கமான ஓட்டமும் நுட்பமும் கொண்ட நடையில் எழுதினார். பின்னர் புனைவுகளும் எழுதலானார். நவீன இலக்கியத்தில் அவரது எழுத்துக்கள் சிறுகதை, புனைவுக்கட்டுரைகள் மற்றும் நனைவிடை தேய்தல் என்று பலவகையில் விரிந்துள்ளன

ஆசி கந்தராஜா தனது இலக்கியப் பிரவேசத்துக்கான உந்து சக்தியை தந்தவர் ஈழத்தின் சிறுகதைச் சித்தர் எஸ். பொன்னுத்துரை என்று குறிப்பிடுகிறார். எஸ்.பொன்னுத்துரையுடன் அணுக்கமான உரையாடலில் இருந்தார்.

சிறுகதைகள்

ஆசி கந்தராஜாவின் முதலாவது நூலான 'பாவனை பேசலன்றி' என்ற சிறுகதைத் தொகுதி 2000-ம் ஆண்டு 'மித்ர' பதிப்பகத்தின் ஊடாக வெளியானது. இந்த நூலுக்கு 'அறம் சார்ந்த மனதின் கலை விழிப்பு' என்ற தலைப்பில் எழுத்தாளர் பிரபஞ்சன் முன்னுரை வழங்கியிருந்தார். 'கள்ளக்கணக்கு' என்னும் சிறுகதை தொகுப்புக்கு அ.முத்துலிங்கம் முன்னுரை எழுதியிருந்தார்

அறிவியல்

ஆசி கந்தராஜா எளிமையான நேரடி மொழியில் அறிவியல் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 2014-ல் வெளியான ஆசி கந்தராஜாவின் 'கறுத்தக்கொழும்பான்' என்ற புனைவுக்கட்டுரைகளின் தொகுப்பு வேளாண் அறிவியலையும் சமகால வாழ்க்கையையும் வெவ்வேறு வகைகளில் தொடர்பு படுத்தி எழுதப்பட்டது

நினைவுகள்

ஜெர்மனி, ஆப்ரிக்கா என பல நாடுகளிலும் தடம் பதித்த தனது வாழ்வின் கடந்த கால நினைவுகள் குறித்து, கட்டுரைகளையும் எழுதியுள்ள ஆசி கந்தராஜா, இலங்கையிலிருந்து வெளிவரும் 'தினக்குரல்' பத்திரிகையில் 'அகதியின் பேர்களின் வாசல்' என்ற தொடரை எழுதியுள்ளார்.

விருதுகள்

 • சிறிலங்கா சாகித்திய மண்டலப் பரிசு (2001) - 'பாவனை பேசலன்றி' - சிறந்த சிறுகதைத் தொகுப்பு
 • திருப்பூர் இலக்கியவிருது (2016) ‘கறுத்தக்கொழும்பான்' புனைவுக் கட்டுரைத் தொகுதி
 • தமிழியல் விருது (2015) 'கறுத்தக் கொழும்பான்' புனைவுக் கட்டுரைத் தொகுதி
 • திருப்பூர் தமிழ்ச்சங்க விருது (2015) 'கீதையடி நீயெனக்கு' குறுநாவல் தொகுதி
 • திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருதும் பரிசும் 2018. 'கள்ளக்கணக்கு' சிறுகதைத் தொகுப்பு
 • இந்திய தமிழக அரசின் உலகத் தமிழ்ச்சங்கம் மதுரை விருதும், பணப்பொதியும் (2018) 'கள்ளக்கணக்கு' சிறுகதைத் தொகுப்பு
 • திருப்பூர் இலக்கிய விருது (2019) படைப்பிலக்கியம்

இலக்கிய இடம்

நிலத்தின் பிரிவையும் அதனால் திரண்ட துயரையும் மாத்திரம் புலம்பெயர் எழுத்தென்று உள்வாங்கி ஒடுங்கிவிடாமல், தன் துறைசார் கதைகளை நவீன இலக்கியத்திற்கு அருகில் கொண்டுவந்து சேர்த்த புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்கள் வரிசையில் ஆசி கந்தராஜா முக்கியமானவர். அறிவியலையும் அழகியலையும் அங்கதத்துடன் வெளிப்படுத்துபவை அவரது எழுத்துக்கள். கந்தராஜாவின் புனைவுக்கட்டுரைகள் தமிழிலில் இதுவரை பதிவுசெய்யப்படாத தாவர உலகமொன்றிற்கான திறப்பாக அமைந்தவை.

புதிய நிலத்தில் தான் கண்ட பண்பாட்டு மோதல்களையும் கலாச்சார மதிப்பீடுகளையும் கந்தராஜாவின் சிறுகதைகள் பேசியிருக்கின்றன. ஒரு புலம்பெயர் தேசத்தில் வேடிக்கையாக தான் கண்டவற்றையும் அதிர்ச்சியடையச் செய்த சம்பவங்களையும் மேலோட்டமாக எழுதிச்சென்று விடாமல், அந்த நிகழ்வுகளின் பின்னணியிலுள்ள முரண்பாடுகளின் வழியாகத்துலங்கும் மானிட சாத்தியங்களை ஆசி கந்தராஜாவின் எழுத்துக்கள் கதைகளாக்கியிருக்கின்றன.

"கந்தராஜாவின் அசல் பலமாக நான் கருதுவது, மனிதர்கள் மேல் அவருக்கு இருக்கும் அபிமானம். மனிதர்களை அவர்களது பலத்தோடும் பலவீனத்தோடும் இவர் ஏற்றுக்கொள்கிறார். தொட்டிகளில் வாழும் 'போன் சாய்' செடிகளைப்போல அவர்கள் வடிவமைக்கப்படவில்லை. அவர்கள், அவர்கள் இஷ்டத்துக்கு இயங்குகிறார்கள். அந்த இடங்களில் கதை வளர்கிறது. சம்பவங்கள் கச்சிதமாக வளர்ந்து தத்துவத்துக்குள் பிரவேசிக்கின்றன. அநாவசியமான வம்பளப்புக்கள் இல்லாத கதைகள்" என்று பிரபஞ்சன் குறிப்பிடுகிறார்.

"இந்தக் கதைகளில் எனக்கு இருக்கும் ஈர்ப்பு என்ன வென்றால் இவை தனிய விஞ்ஞானம் பற்றி பேசுபவை அல்ல. பல்வேறு நாட்டு மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், வரலாறு போன்றவற்றிலும் எங்களுக்கு பரிச்சயம் ஏற்பட வைக்கின்றன. புத்தகத்தை படித்து முடிக்கும்போது ஒன்பது நாடுகளுக்கு பயணம் செய்து திரும்பியது போன்ற நிறைவு கிடைக்கிறது. விஞ்ஞானமும் பயணமும் இணைந்து புனையப்பட்ட சிறுகதைகளை நான் படித்ததே இல்லை. அந்த வகையில் இந்த தொகுப்பு புதுமையானது. சிறப்பானது. இரட்டிப்பு மகிழ்ச்சி தருவது" என்று அ.முத்துலிங்கம் குறிப்பிடுகிறார்

நூல்கள்

சிறுகதை
 • பாவனை பேசலன்றி (சிறுகதைத் தொகுப்பு - மித்ர வெளியீடு 2000)
 • கள்ளக்கணக்கு (சிறுகதைத் தொகுப்பு - காலச்சுவடு வெளியீடு 2018)
 • ஹெய்க்கோ (சிறுகதைத் தொகுப்பு - சிங்கள மொழிபெயர்ப்பு - 'கொடகே" பதிப்பகம் 2019)
 • பணச்சடங்கு (சிறுகதைத் தொகுப்பு - எங்கட புத்தகங்கள் வெளியீடு யாழ்ப்பாணம் 2021)
 • உயரப்பறக்கும் காகங்கள் (சிறுகதைத் தொகுப்பு - மித்ர வெளியீடு 2003)
 • Horizon (மித்ர பதிப்பகம் - 2007 ஆங்கில மொழிபெயர்ப்பு)
 • கீதையடி நீயெனக்கு (குறுநாவல் தொகுப்பு - மித்ர வெளியீடு 2014)
நாவல்
 • ஒரு அகதியின் பேர்ளின் வாசல்
கட்டுரைகள்
 • கறுத்தக் கொழும்பான். (புனைவுக் கட்டுரை தொகுப்பு - மித்ர வெளியீடு 2014)
 • செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய். (புனைவுக் கட்டுரை தொகுப்பு - ஞானம் வெளியீடு 2017)
 • தமிழ் முழங்கும் வேளையிலே (செவ்விகளின் தொகுப்பு - மித்ர வெளியீடு 2000 - சிட்னியில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சிக்காக கண்ட 18 பேட்டிகள்)
 • மண் அளக்கும் சொல் (புனைவுக்கட்டுரைகள் - காலச்சுவடு வெளியீடு 2022)

உசாத்துணை

இணைப்புகள்✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:39:10 IST